உள்ளூர் செய்திகள்

பயிற்சியின் மேன்மை!

சிவகாசி, சி.இ.நா.வி.மேல்நிலை பள்ளியில், 1980ல், 7ம் வகுப்பு படித்தபோது நடந்த சம்பவம்... ஆங்கில வழி பாடத்திட்டத்தில் வகுப்பாசிரியராக இருந்தார் பேரின்ப செல்வராஜ். ஆங்கில மொழிப் பாடமும் நடத்துவார். அன்று இலக்கணத்தில் 'சுட்' என்ற வினைச்சொல் குறித்து விளக்கம் அளித்தார். அதை தெளிவாக உச்சரிக்க கற்றுத் தந்தார். பின், மாணவர்களை உச்சரிக்க கூறினார். ஒருவன் எழுந்து, 'சுல்ட்' என்றான். பிரம்பால் கையில் அடி கொடுத்து தவறை திருத்தினார். அடி வாங்கியவனை அனைவரும் கேலி செய்த சிரித்தோம். அவன் எதையும் பொருட்படுத்தாமல் பயிற்சிகள் செய்தான். ஆங்கில மொழியை சிறப்பாக பேசி பழகினான். தொடர்ந்து, படிப்பில் கவனம் செலுத்தி டாக்டராக உயர்ந்தான். அவன் முயற்சி வழியாக தொடர் பயிற்சியின் சிறப்பை உணர்ந்து கொண்டேன். என் வயது, 55; தனியார் நிறுவனத்தில் கணக்கு அலுவலராக பணிபுரிந்து வருகிறேன். பள்ளியில் நடந்த அந்த நிகழ்வு பசுமரத்தாணி போல மனதில் பதிந்து உள்ளது. கற்பித்தலில் கண்டிப்பு காட்டி வாழ்வின் உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர் பேரின்ப செல்வராஜை போற்றுகிறேன். - ஜி.வேலுச்சாமி, திருப்பூர்.தொடர்புக்கு: 84383 79638


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !