உள்ளூர் செய்திகள்

கூடு!

மாங்குழி கிராமத்தில் வசித்து வந்தார் கலைத்தோழன். அவரது வீட்டின் பின்புறம் பெரிய மாமரம் இருந்தது. அதில் பலவகை பறவைகள் கூடு கட்டியிருந்தன. அன்று ஜோடி காகங்கள் சுள்ளி பொறுக்கி வந்து கிளையில் கூடு ஒன்றை கட்டின. வேறோரு கிளையில் கொக்கு கூடு கட்டியது. பெரிய கிளை பொந்தில் புறாக்கள் கூடு அமைத்திருந்தன. மூன்று பறவைகளும் தாங்கள் கட்டிய கூடு தான் அழகு என தற்பெருமையுடன் வாதாடின. அவற்றால் ஒருமித்த முடிவுக்கு வர இயலவில்லை. எனவே மரங்கொத்தியை நடுவராக அழைத்து, இறுதி தீர்ப்பை கூற கேட்டன. மூன்று கூடுகளையும் ஆராய்ந்து, 'கொஞ்சம் பொறுங்கள்...' என பறந்து சென்று, சிறிய துாக்கணாங்குருவி பறவையை அழைத்து வந்தது. பின், 'சில நாட்கள் பொறுங்கள்... இந்த சிறு பறவையும் கூடு கட்டட்டும்... அதன்பின், எது அழகானது என்பதை சொல்கிறேன்...' என்றது மரங்கொத்தி. மூன்றும் ஒத்துக்கொண்டன. உருவத்தில் சிறிதாக இருக்கும் துாக்கணாங்குருவியால் அழகிய கூடு எப்படி அமைக்க முடியும் என எண்ணின. சிறய பறவை மும்முரமாக முயன்று கடுமையாக உழைத்து கூடு கட்டி முடித்தது. நேர்த்தியுடன் தொங்கி கொண்டிருந்தது துாக்கணாங்குருவி கூடு. அதை சுட்டிக்காட்டி, 'நன்றாக பாருங்கள்... தொங்கி கொண்டிருக்கும் சிறிய கூடு எத்தனை அழகு... கூட்டின் உள்ளே செல்ல நுட்பம் நிறைந்த வழி உள்ளது... அதில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களை ஒப்பிட்டுபாருங்கள்... உங்களுக்கே புரியும்...' என கூறியது மரங்கொத்தி. 'இது போன்ற ஒரு கூட்டை கட்டவே முடியாது...' காகம், கொக்கு, புறா மூன்றும் வெட்கத்தில் தலை கவிழ்ந்தன. தற்பெருமை அறிவீனம் என்பதை உணர்ந்தன. பட்டூஸ்... தற்பெருமை பேசி தர்க்கம் செய்வதால் நன்மை ஏதும் ஏற்படாது. டேனியல் ஜூலியட்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !