உள்ளூர் செய்திகள்

பொறாமை தீ!!

காந்தாரம் நாட்டில் வாழ்ந்து வந்தார் தச்சர் ராம்குமார். நேர்மை, நீதி, பிறருக்கு உதவி புரியும் எண்ணம் உடையவர். தொழிலை நேர்த்தியாக செய்வார். அதனால் நாட்டில் நற்பெயர் பெற்றிருந்தார். அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சியாம்குமார். வண்ணம் பூசும் வேலை செய்து வந்தார். ராம்குமாருக்கு இருந்த புகழ் கண்டு வெறுப்படைந்தார். ஒழித்துக் கட்ட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தார்.வயது மூப்பு காரணமாக இறந்தார் நாட்டு மன்னர். இறுதி சடங்குகள் முடிந்தன. அடுத்து, இளவரசர் சத்யதேவன் மன்னராக முடிசூடினார். அவரிடம் நெருக்கத்தை ஏற்படுத்தி, ராம்குமாரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டார் சியாம்குமார். அதன்படி, அன்று அரண்மனையில் மன்னரை சந்தித்து, 'என் கனவில் வந்தார் உங்கள் தந்தை. சொர்க்கத்தில் இருப்பதாக தெரிவித்தார். அங்குள்ள மாளிகையில் தச்சு வேலை செய்ய ராம்குமாரை அனுப்ப வேண்டுமாம்...'இப்படி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். அதை நம்பிய மன்னர், புதிய கட்டளையை பிறப்பித்தார். அதன்படி, ராம்குமார் சொர்க்கம் செல்ல முடிவானது. அவரை தீயில் குளிப்பாட்ட ஏற்பாடு நடந்தது. உண்மை நிலை அறிந்தார் ராம்குமார்; தப்பும் வழிவகை பற்றி யோசித்தார்.குடும்பத்துக்கு உரிய பணிகளை முடிக்க கால அவகாசம் கேட்டார். ஒரு வாரத்திற்குப் பின், தீயில் புகுவதாக தெரிவித்தார். இடைப்பட்ட காலத்தில் சுறுசுறுப்படைந்தார் ராம்குமார். தீ குண்டம் அமைய இருந்த இடத்தின் அடியில், ரகசிய சுரங்க பாதை ஒன்று அமைத்தார். அது, அருகில் இருந்த காட்டிற்கு செல்வதாக இருந்தது. ராம்குமாரை சொர்க்கத்துக்கு அனுப்ப குறித்த நாளும் வந்தது. தீ குண்டத்தில் குதித்த ராம்குமார், சுரங்கப்பாதை வழியேறி தப்பித்தார்.மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தார். பின், அரண்மனை திரும்பி மன்னரை சந்தித்தார். 'தங்கள் தந்தையை சொர்க்கத்தில் சந்தித்தேன். நலமாக இருக்கிறார். தச்சு வேலை சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டினார். அதற்கு வண்ணம் பூச, பெயின்டர் சியாம்குமாரை உடனே அனுப்ப வேண்டுமாம்...' என்று கூறினார்.அதன்படி சொர்க்கத்திற்கு அனுப்பும் வேலைகளை துரிதமாக செய்ய உத்தரவிட்டார் மன்னர்.இதை எதிர்பார்க்கவில்லை சியாம்குமார். வஞ்சக எண்ணம் நெஞ்சில் தலை துாக்கியிருந்ததால் அவரால் சிந்திக்க முடியவில்லை. தப்பிக்க முடியாமல் தீயில் கருகினார். குழந்தைகளே... தன் வினை தன்னைச் சுடும் என்பதை உணருங்கள்!மனோகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !