உள்ளூர் செய்திகள்

புத்திமதி!

அடிக்கடி வெல்லம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தன் மகன் முத்துவை, ஒரு முனிவரிடம் அழைத்துச் சென்றார், அவனது அம்மா விஜயா. 'என் மகன் முத்து, நினைத்த போதெல்லாம் வெல்லம் சாப்பிடுகிறான். எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேன் என்கிறான். நீங்கள் தான், அவனுக்கு புத்திமதி சொல்லி திருத்த வேண்டும்...' என, பணிவுடன் கேட்டுக் கொண்டார், விஜயா. சற்று நேரம் யோசித்த முனிவர், 'அடுத்த வாரம் வா... புத்திமதி சொல்கிறேன்...' என்று அனுப்பி வைத்தார். மறுவாரம் முத்துவை அழைத்து, அதே முனிவரிடம் சென்றார், விஜயா. மறுவாரம் வரும் படி கூறினார், முனிவர். மீண்டும், அடுத்த வாரம் முனிவரிடம் தன் மகனை அழைத்துச் சென்றார், விஜயா. 'இன்றாவது என் மகனுக்கு புத்திமதி கூறுவீர்களா...' என கேட்டார், விஜயா. முனிவர் அமைதியாக இருந்தார். பின், மவுனம் கலைத்து பேசினார்... 'இன்று கட்டாயமாக உன் குழந்தைக்கு புத்திமதி சொல்லலாம் என்று தான் இருந்தேன். அதற்கு நான் இன்னும் தயாராகவில்லை. என்னை மன்னித்து விடு. அடுத்த வாரம் வா...' எனக் கூறி, திரும்ப அனுப்பி வைத்தார், முனிவர். நான்காவது முறையாக முனிவரிடம் மகன் முத்துவை அழைத்துச் சென்றார், விஜயா. முத்துவுக்கு அறிவுரை கூறினார், முனிவர்... 'நினைத்த போதெல்லாம் இனிப்பு சாப்பிடுவதால், உன் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது உனக்கே தெரியும். அது, உடலுக்கு மிகவும் கெடுதலானது. இனிமேல், உன்னை கட்டுப்படுத்திக் கொள்...' என்றார், முனிவர். 'இந்த புத்திமதியை முதல்முறையே சொல்லி இருக்கலாமே...' என கேட்டார், விஜயா. முனிவர் புன்னகைத்தார். 'பெண்ணே, நீ முதல் முறை வரும்போது, நானும் இனிப்புகளை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அதனால், அவனுக்கு புத்திமதி கூற முடியவில்லை. அடுத்தடுத்த வாரமும், என்னை சந்திக்க வந்தோர் அளித்த இனிப்பை சாப்பிட்டேன்... இனிப்பு சாப்பிடுவதை நான் முதலில் கட்டுப்படுத்தினால் தானே, அடுத்தவருக்கு புத்திமதி கூற முடியும். இப்போது முழுமையாக இனிப்பை ஒதுக்கிவிட்டேன். புத்திமதி கூறுபவர், எப்போதும் ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டும், அல்லவா...' என்றார், முனிவர். முத்து மற்றும் விஜயா இருவரும், முனிவரிடம் ஆசி பெற்று, வீடு திரும்பினர். குட்டீஸ்... அறிவுரை கூறுபவர், அதற்கு தகுதி உடையவராக இருக்க வேண்டும். - செ.அனுசூயா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !