உள்ளூர் செய்திகள்

துயரக் கடல்!

கடலுார் மாவட்டம், துாக்கணாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2016ல், 10ம் வகுப்பு படித்தேன். வகுப்பில், 37 மாணவர்கள் இருந்தோம். அதில் படிப்பில் மிகவும் பின் தங்கியவனாக இருந்தேன். வறுமையில் வாடியது என் குடும்பம். உணவுக்கே வழியில்லாத நிலையில் தவித்தோம். மதிய உணவுக்காக தான் பள்ளி செல்ல வேண்டிய நிலை இருந்தது. திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே மதிய உணவு கிடைக்கும். மற்ற நாட்களில் மிகவும் சிரமப்பட்டு வந்தேன். விடுமுறை நாட்களில் வகுப்பாசிரியர் சுப்பிரமணி சிறப்பு வகுப்பு நடத்துவார். அப்போது, மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்வார். இதற்காகவே அவற்றில் தவறாது பங்கேற்பேன். என் நிலை அறிந்து உதவிகள் செய்தார் வகுப்பாசிரியர். அதை பயன்படுத்தி, பொது தேர்வில் தேர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து முயன்று மேல்நிலை கல்வியை நிறைவு செய்தேன்.எனக்கு, 24 வயதாகிறது. பொது நிர்வாகத்தில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து உள்ளேன். தமிழ் திரைப்படங்களுக்கு, கதைகள் எழுதி வருகிறேன். இயக்குனராகும் கனவுடன் முயற்சி செய்து வருகிறேன். பள்ளியில் என் தேவை அறிந்து, கடுமையான வறுமை சூழலை கடக்க உதவிய அந்த ஆசிரியருக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்.- வே.முரளி, கடலுார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !