உயர உயர...
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் போர்டு உயர்நிலைப் பள்ளியில், 1961ல், எஸ்.எஸ்.எல்.சி.,படித்த போது நடந்த சம்பவம்...வகுப்புக்கு ஆங்கில புலமை பெற்ற ஆசிரியர் போஸ் பாடம் நடத்த புதிதாக வந்தார். முதல் நாளிலே கண்டிப்பை காட்டினார். தேர்வில் வெற்றி பெற கடுமையாக உழைப்பது அவசியம் என வலியுறுத்தி, தவறுவோரை, 'செலக் ஷன் பரீட்சை மட்டத்திலே பெயிலாக்கி விடுவேன்...' என எச்சரித்தார். வகுப்பில், அன்றாடம் நடத்தும் பாடத்தை மறுநாள் சுருக்கமாக எழுத வைத்தார்.நான், படிப்பில் சுமாராக இருந்தேன். அதனால், வீட்டிலே பாடத்தை பார்த்து எழுதி எடுத்து வருவேன். வகுப்பில் ஏமாற்றி எழுதிய பேப்பரை முதலிலே கொடுத்து வந்தேன்.சந்தேகமடைந்தவர், மூன்று நாட்களுக்கு முந்தைய பாடத்தை கண்முன் எழுத சொன்னார். முடியவில்லை. பிரம்பை எடுக்கும் முன், உண்மையை சொல்லி விட்டேன். வாசல் அருகே முன் பெஞ்சின் மேல் ஏறி நிற்கும் தண்டனை தந்தார். அரைக்கால் சட்டையுடன் நின்ற என்னை கேலி செய்தனர் மாணவியர். பின், சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வுக்கு தயாராக்கினார். நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றோம்.என் வயது, 80; விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றேன். நம் நாட்டுக்காக இரண்டு போர்களில் முன்னணி வீரராக களம் இறங்கியுள்ளேன். வகுப்பறையில், பெஞ்சின் மேல் நிற்க வைத்த தண்டனையை சரியாக புரிந்து செயல்பட்டதால் விமானத்தில் பறந்து, நாட்டைக் காக்கும் பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதற்கு உதவிய ஆசிரியரை பெருமையுடன் போற்றி வாழ்கிறேன்!- எம்.எஸ்.சேகர், மதுரை.தொடர்புக்கு: 98943 00626