உள்ளூர் செய்திகள்

வடிவமாய் எழுது!

தஞ்சாவூர் மாவட்டம், முத்துப்பேட்டை பஞ்சாயத்து போர்டு பள்ளியில், 1966ல், 3ம் வகுப்பு படித்த போது, தமிழாசிரியராக இருந்தார் சீயாளன். அச்சுக் கோர்த்தது போல் வடிவமாக எழுத வலியுறுத்துவார். திருந்தாதோரை, 'தலையெழுத்து சரியாக அமைய வேண்டுமானால், கையெழுத்தில் கவனம் செலுத்து...' என அறிவுறுத்துவார்.என்னை குறி வைத்தே கேள்விகள் கேட்பார். வீட்டுப் பாடம் அதிகமாக எழுத சொல்லி வறுத்தெடுப்பார். தவறு கண்டால் தலையில் ஓங்கி குட்டுவார். அதைப்போன்ற தண்டனையால் கண்ணீர் வடிக்காத நாளே இல்லை. அவரை பார்த்தாலே பயம் வரும்.அவரது கண்டிப்பான எழுத்துப் பயிற்சியை தவறாமல் கடைபிடித்தேன். அது கட்டுரை போட்டிகளில் பலமுறை பாராட்டுதலை பெற்று தந்தது. படிப்பை முடித்து தனியார் நிறுவன பணியில் சேர, என் வடிவமிக்க கையெழுத்தே வாய்ப்பு ஏற்படுத்தி தந்தது. நிறுவன மேலாளரே பின்னர் அதை கூறி பாராட்டியபோது வியந்தேன்.என் வயது, 67; தனியார் நிறுவனத்தில், கணக்கு அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வகுப்பறையில் அக்கறை எடுத்து கையெழுத்தை செதுக்கி, வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்திய தமிழாசிரியரை நாளும் பூஜித்து மகிழ்கிறேன்.- வெ.ராதாகிருஷ்ணன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !