வெற்றிப்படி!
புதுச்சேரி, திரு.வி.க. அரசு ஆங்கிலப் பள்ளியில், 1986ல், 7ம் வகுப்பு படித்தேன். வகுப்பிற்கு, கணித ஆசிரியர் அன்று வரவில்லை. பதிலாக, கைவினைப் பயிற்சி ஆசிரியர் குணசீலன் வந்து, அமைதியாக படிக்க வலியுறுத்தினார். அப்போது, திக்குவாய் குறைபாடுள்ள மாணவன் கோபி எழுந்து, 'ஐயா... ஏதாவது ஏதலாமா...' என்று கொச்சையாக கேட்டான்.அவன் பேச்சை, 'எழுதலாமா' என சரி செய்து அழுத்தமுடன், 'திருத்தமாக சொல்...' என்றார். முயன்ற போதும் தெளிவாக அவனால் சொல்ல வரவில்லை. அன்றைய வகுப்பு அது தொடர்பான நகைச்சுவையுடன் கழிந்தது. மறுநாள் ஓய்வு அறைக்கு அவனை அழைத்து சென்ற ஆசிரியர், சொற்களை தெளிவாக உச்சரிக்க பயிற்சி அளித்தார். இதை கிண்டலாக நோக்கி பொழுது போக்கி வந்தோம்.மூக்கு கண்ணாடி அணிந்திருந்த அந்த ஆசிரியர், வகுப்புக்கு வெளியில் நின்றபடி, ஒவ்வொரு நாளும் அந்த மாணவனை நோக்குவார். அழைப்பின் குறிப்பை அறிந்து, கைகளை கட்டியபடி பவ்யமாக அவர் பின் செல்வான். அதை பார்த்து வயிறு குலுங்க சிரிப்போம். எதையும் கண்டுகொள்ளாமல் பயிற்சி பெற்று, முயற்சியால் குறைபாட்டை நீக்கிக் கொண்டான் அந்த மாணவன்.தற்போது, என் வயது, 51; வழக்கறிஞர் படிப்பை முடித்து, ஐரோப்பிய நாடான பிரான்சில் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளராக பணிபுரிகிறேன். விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றிப்படியில் ஏறுவது சுலபம் என அந்த நிகழ்வு உணர்த்தியது. மாணவனின் ஊனம் போக்க அயராது பாடுபட்டு வென்ற ஆசிரியரை பெருமிதத்துடன் வணங்கி மகிழ்கிறேன்.- ஆல்பர்ட் சுகுமார், புதுச்சேரி.