இளஸ் மனஸ்! (233)
அன்புள்ள அம்மா...என் வயது, 17; அக்காவுடன் இரட்டையராக பிறந்தேன்; பிளஸ் 2 படித்து வரும் மாணவன். என் தந்தைக்கு, 45 வயதாகிறது; கிட்டத்தட்ட, 90 கிலோ எடை இருப்பார். இதில், 30 கிலோ குறைப்பதாக கூறி, மூன்று மாதங்களாக, 'பேலியோ டயட்' என்ற உணவு முறையை பின்பற்றி வருகிறார். எங்கள் வீடு அதகளப்படுகிறது.பேலியோ என்ற உணவு முறை எந்த வயதினருக்கு உகந்தது. இது நல்லதா... கெட்டதா... ஒன்றும் புரியவில்லை. பேலியோ டயட்டில் உண்ண வேண்டியது, உண்ணக் கூடாதது எவை... பேலியோ பற்றி தெளிவை ஏற்படுத்துங்கள்.இப்படிக்கு,மகிழன் மற்றும் யாழ்.அன்பு மிக்க செல்லங்களே...'பேலியோ லித்திக்' என்ற உணவு முறை, பழங்கற்காலத்தில், குகையில் வாழ்ந்த போது மனிதர்களிடம் புழக்கத்தில் இருந்தது.பின், அமெரிக்காவை சேர்ந்த வால்டர் எல்.வோக்டிலின் என்பவர், கி.பி., 1970ல் இந்த உணவு முறைக்கு புத்துயிர் ஊட்டி மீண்டும் அறிமுகப்படுத்தினார். அமெரிக்கா, கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த லோரன் கார்டெய்ன் பேலியோ உணவை பிரபலப்படுத்தினார். இது, மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகியுள்ளது.பழங்காலத்தில் விலங்கினங்களை வேட்டையாடி உணவு சேகரித்தனர் மக்கள். அதனால், தானியங்களை அதிகம் உண்ணவில்லை. புரதச் சத்துள்ள மாமிசங்களை தான் அதிகம் உண்டனர். இந்த அடிப்படையில் தான், இந்த உணவு முறை பிரபலமாகியுள்ளது.இது, எல்லா வயதினருக்கும் பொருத்தமானதாக கருதப்படுகிறது. இதய நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளோர் பேலியோ உணவு முறையை பின்பற்றக் கூடாது. பேலியோ உணவு முறையுடன் உடற்பயிற்சியும் இருந்தால் உடலுக்கு நல்லது. உடற்பயிற்சி இல்லாத பேலியோ உணவால் எடை மட்டும் குறையும்; ஆரோக்கியம் கூடாது. பேலியோ உணவு பொருட்களை பார்ப்போம்...காய்கறிகள், பழங்கள், முட்டை, விதைகள், முட்டைகோஸ், திராட்சை, தர்பூசணி, எலுமிச்சை, ஆரஞ்சு, அவகோடா, மீன், கீரை, இனிப்பு உருளைக்கிழங்கு, கோழி இறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, காலிப்ளவர், முந்திரி பருப்பு, சாலமன் மீன், காட்மீன், வான்கோழி இறைச்சி, காரட், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பூசணி விதை, வாழைப்பழம், ப்ரோக்கோலி.இந்த முறையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்...இப்போது பயன்பாட்டில் உள்ள வெள்ளை சர்க்கரை, உப்பு, அவரை காய்கள், சில வகை பருப்புகள், பட்டாணி, பீன்ஸ், சோயா, தயிர், செயற்கை இனிப்புகள், குளிர்பானங்கள், சோடா, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் மற்றும் ஆல்கஹால்.பேலியோ உணவு முறையால் ஏற்படும் நன்மைகள்:* உடலில் தேவையற்ற வீக்கங்கள் குறையும்* பணி செயல் திறனை கூட்டும்* தேவையற்ற ஊளைச்சதை கரையும்* ரத்த சர்க்கரை அளவுடன் இருக்கும்* நீண்ட நாள் வியாதிகள் பாதிப்பு தணியும்.பேலியோ உணவு முறையை பின்பற்ற விரும்புவோர் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டியது கட்டாயம்.- அள்ளக்குறையா அன்புடன், பிளாரன்ஸ்.