உள்ளூர் செய்திகள்

வாழ்க்கை கணக்கு!

சென்னையில் நுாற்றாண்டு விழா கண்ட பெரம்பூர் ஆர்.பி.சி.சி.சி., உயர்நிலைப் பள்ளியில், 1958ல், 4ம் வகுப்பு படித்தேன். கோடை விடுமுறை முடிந்து, பள்ளி திறந்த மூன்றே நாளில், வகுப்பாசிரியர் ராமைய்யா, மாரடைப்பால் காலமானார். அதிர்ச்சியுடன் செய்வதறியாது திகைத்தோம். இரண்டு மாதங்களுக்கு பின், வகுப்பாசிரியராக துடிப்பு மிக்க ஆர்.ஜனார்த்தனம் வந்தார். கணக்கு, ஆங்கில பாடங்களை அவர் கற்பித்த விதம், மிக நேர்த்தியாக இருந்தது. வகுப்பை கவனித்தாலே அனைத்தும் புரிந்து விடும். தேவையான போது கண்டிப்பாகவும் நடந்து கொண்டார். புரிந்து படித்ததால் அதிக மதிப்பெண் பெற்று எல்லா தேர்வுகளிலும் முதல், இரண்டாம் இடங்களை மாறி மாறி பிடித்து வந்தேன். தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி., பொது தேர்வில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றேன். பள்ளி படிப்பை முடித்து விடை பெற்ற போது அந்த ஆசிரியரிடம், 'ஆட்டோகிராப்' கேட்டேன். என் நோட்டில், 'லைப் + ஜாய் = ஹெவன்; லைப் - ஜாய் = ஹெல்; அப்படியானால், லைப் = ?' என எழுதி, கணக்கை, 'சால்வ்' செய்ய கூறினார். தீவிர சிந்தனைக்கு பின், 'லைப் = ஹெவன் + ஹெல்' என, எழுதிக் காட்டினேன். நெகிழ்ச்சியுடன், 'பாதிக்கு பாதி கஷ்டமும், சுகமும் சேர்ந்தது தான் வாழ்க்கை. இதை புரிந்து கொள்...' என்று அறிவுரைத்து வாழ்த்தினார். அது நிறைவு தந்தது. என் வயது, 78; ரயில்வே துறையில், உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியர் நினைவாக, நான் வசிக்கும் பகுதியில் சிறு சேவைகளில் ஈடுபட்டு சுறுசுறுப்புடன் வாழ்கிறேன்.- வெ.முரளிதரன், சென்னை.தொடர்புக்கு: 80731 23858


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !