உள்ளூர் செய்திகள்

சாக்ரட்டீஸ் !

தத்துவஞானிகள் தந்தை என்று அழைக்கப்படும் கிரேக்கம் தந்த சொத்து சாக்ரட்டீஸ்.பண்டைய கிரீஸ் நாட்டின் ஒரு பகுதி ஏதென்ஸ். நகர அரசுகளில் பலம்பொருந்திய நாடாக இருந்தது. இதுவே இவரின் பிறப்பிடம். கி.மு., 469-ல் ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த மகத்தான மனிதர்; மாபெரும் சிந்தனையாளர்.ஏழ்மையில் பிறந்தார்; வறுமையில் வளர்ந்தார்; வறுமையிலேயே வாழ்ந்தார். வறுமை அறிவை அழிக்க முடியாது என்பதற்கு உதாரணம் இவர். காலில் செருப்பு இல்லை, அணிய மேல் சட்டை இல்லை. குடும்பத்திலோ வறுமை. ஆனபோதும் தன்னை நினைக்காது, தன் பிள்ளை தன்பெண்டு என சுயநலம் காட்டாது, தான் வாழ்ந்த கால சமுதாயத்தை நினைத்த ஒரு மனிதராக வரலாறு இவரை நமக்கு அறிமுகம் செய்கிறது.'பசி வந்திட பத்தும் பறந்து போகும்' என்கிற யதார்த்த உலகில், இறுதிவரை ஓர் லட்சிய வாதியாக வாழ்ந்த இவர் ஓர் உதாரண புருஷர் எனலாம். வாக்கும், வாழ்வும் ஓர் தத்துவமாகவே விளங்கிய உலகின் முதல் அறிவுஜீவி இவர்.வாழ்வியல் கருத்துக்களை, நீதிகளை, வாழும் முறையினை உலகுக்கு வாரி வழங்கியவர். இவர் பிளேட்டோவின் ஆசிரியர். 'உன்னையே நீ அறிவாய்' என்பது இவரின் புகழ் பெற்ற வாசகம். பகுத்தறிவு என்பது இவர் போதனையின் அடிப்படை தத்துவம். இருபதாம் நூற்றாண்டின் பல சீர்த்திருத்தவாதிகளுக்கு எல்லாம் அடிப்படையாக இவர் இருந்தார் எனலாம். 'எதையும் அப்படியே நம்பிடாதே. ஏன், எதற்கு என கேள்வி கேள்' என்ற சிந்தனையை வளர்த்தவர்; வலியுறுத்தியவர். மூடத்தனம், குருட்டுநம்பிக்கை என்பதை ஒழித்து, அறிவார்த்த சிந்தனை என்பதனை அவனிக்கு அளித்த அறிஞரே இவர். காலையிலும், மாலையிலும் தனக்கு ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் ஏதென்ஸ் நகருக்கு, கடைத்தெரு, சாலைகள் என மக்கள் கூடும் இடத்திற்கு செல்வார். அவர்கள் கவனத்தை கவர்ந்து, அவர்களிடம் பேச்சு மூலம் தன் சிந்தனையை வெளிப்படுத்துவார். கிரேக்க நாட்டு இளைஞர்களிடையே ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார். இவருக்கும், இவர் பேச்சுக்கும் ஒரு ரசிகர் கூட்டம் உண்டு. பகல் பொழுதில் கையில் விளக்கோடு செல்வார். கூட்டம் உள்ள இடத்தில் எதையோ குனிந்து தேடுவது போல் கையில் விளக்குடன் நடிப்பார். வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் கூடும். 'என்ன தேடுகிறீர்கள்?' என்று யாராவது கேட்பர். 'மனிதர்களைத் தேடுகிறேன்,' என்பார் சாக்ரட்டீஸ். மக்கள் புரியாது விழிக்க, அவர்களிடம் பேசுவார். தன் கருத்தை விதைப்பார். இது இவர் பயன்படுத்திய யுக்திகளில் ஒன்று. அன்றைய ஆட்சியாளர்கள் இவருக்குப் பயந்தனர். இவரின் அறிவுப்பூர்வ பேச்சால் ஒரு புரட்சி வெடிக்கலாம் எனப் பயந்தனர். எங்கே நம் ஆட்சிக்கே ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சம் கொண்டனர். ஒரு சமுதாயத்தை சீர்த்திருத்த நினைத்தவர் மீது, 'கிரேக்க இளைஞர்களை கெடுக்கிறார்' என்ற குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டது.அதனால், சாக்ரட்டீஸ் கைது செய்யப்பட்டார். விசாரணை என்ற பெயரில் போலி நாடகம் நடத்தப்பட்டது. தன்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டினை ஆணித்தரமாக சாக்ரட்டீஸ் மறுத்தார். தவறு என ஒத்துக்கொள்ளவோ, தண்டனைக்கு அஞ்சவோ இல்லை. மன்னிப்பு கேட்காது, தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஏற்றார்.என்ன தண்டனை தெரியுமா? மரணதண்டனை. அதையும் மகிழ்வோடு ஏற்றார். மரணத்திற்கு அஞ்சாத மேதையல்லவா இவர். அதற்குமுன்பே சாக்ரட்டீஸ் மரணம் பற்றிய ஓர் அழகான கருத்தை போதனையாகத் தந்தார்.'மரணம் பற்றி கவலைப்படாதே! நீ இருக்கும் வரைமரணம் வரப்போவதில்லை. அது என்னவென்று உனக்குத் தெரியாது. அது வந்தபோது - நீயேஇருக்கப் போவதில்லை. பிறகு ஏன் கவலை?'என்றவர் இவர். அதுபோலவே தனது அறிவுப் போதனைக்கு ஆட்சியாளர் தந்த பரிசை ஏற்றார்.விஷம் கொடுத்து கொல்லப்பட வேண்டும் என்பது தீர்ப்பு. இடைக்காலத்தில் இவரை சிறையில் இருந்து தப்ப வைக்க, இவரது மாணவர்கள் சில ஏற்பாடுகளை செய்தார். சாக்ரட்டீஸ் தன் நாட்டின் மீதும், தன் நாட்டு சட்டத்தின் மீதும் கொண்டிருந்த அன்பு, மதிப்பால் சட்டத்தை மீறவில்லை. கி.மு., 399-ல் ஒரு மாலை நேரம், சூரிய அஸ்தமன நேரம். கொடிய விஷம் கோப்பையில் தரப்பட்டது. இறுதிவரை மகிழ்வோடு தன் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாக்ரட்டீஸ், அவரே விஷக் கோப்பையை வாங்கி அருந்தி உயிர்துறந்தார். இயேசுவுக்கு இவ்வுலகம் சிலுவையை தந்ததுபோல, அவருக்கு விஷம் தரப்பட்டது. 'நல்ல குணங்களை நான் ஞானம் என்பேன்!' என்று அறிவுக்கு புதுவிளக்கம் தந்தவர் இவர். ஞானம் என்பது நற்குணம் எனும் நற்கருத்தை அன்றே சொன்னவர் இவர். 'நாம் எதை இழந்தாலும் கவுரவத்தை இழக்க இடம் தரக்கூடாது,' என்பது இவரின் தத்துவ முத்துக்களில் ஒன்று. இதனை தன் வழக்கின்போது, இவரே கடைப்பிடித்தார். இன்றும் தத்துவ உலகின் சரித்திர நாயகனாய் வாழ்கிறார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !