தீர்வு!
சாயல்குடி மக்கள், கடலுக்கு மீன் பிடிக்க செல்வர். அந்த பகுதியில் பிடிபடும் மீன்கள் சுவையாக இருக்கும். ஆனால், மீன்களை பிடித்து திரும்ப, இரண்டு நாட்களாகி விடும். இதனால், மீன்கள் பழையதாகி சுவை குன்றும்.இந்த பிரச்னையை தீர்க்க யோசித்தனர் மக்கள். பனிக்கட்டி பாளங்களை எடுத்துச் சென்று, மீன்களை பதப்படுத்தி எடுத்து வந்தனர். அப்படியும் சுவையாக இல்லை. சுவை வேறுபாட்டால் விற்பனை குறைந்தது. இப்போது வேறொரு உபாயம் செய்தனர். சிறிய தொட்டி செய்து, பிடித்த மீன்களை அதில் போட்டு எடுத்து வந்தனர். ஆனால், கடலில் நீந்திய மீன்கள், சிறிய தொட்டியில் சோம்பலாக கிடந்தன. அவையும் சுவை குன்றியே காணப்பட்டன.யோசித்த மீனவர்களுக்கு, மற்றொரு திட்டம் மனதில் உதித்தது.கடலில் குட்டி சுறா மீன் ஒன்றை பிடித்தனர். அதை உயிருடன் எடுத்து வந்து, மற்ற மீன்களை போட்டிருந்த தொட்டிக்குள் விட்டனர். சுறாவிடமிருந்து தப்பிக்க மீன்கள் ஓய்வின்றி நீந்தின. இரண்டு தினங்களுக்கு பின்னும் புத்துணர்வுடன் இருந்தன. அவற்றை சமைத்த போது, ருசி குறையவில்லை. பலரும் விரும்பி வாங்கினர். விற்பனை அதிகரித்தது. மீனவ மக்களின் பிரச்னை தீர்ந்தது.குழந்தைகளே... சுறுசுறுப்பான வாழ்க்கையே சுவையானது. பிரச்னை என்ற சுறா இருந்தால் தான், தீர்வைத் தேடி ஓடிக் கொண்டே இருப்போம். வாழ்வு சுவையாக அமையும்.