முட்டாள் பேச்சு!
சுமந்திரபுரம் என்ற ஊரில், பிச்சைக்காரர்கள் பலர் இருந்தனர். பகல் முழுவதும், பிச்சை எடுப்பர்; மாலையில், ஒரு இடத்தில் கூடுவர். அவர்கள் கூடும் இடத்தில், ஒரு நாய் காத்திருக்கும். பிச்சையாக பெற்ற உணவின் ஒரு பகுதியை, அதற்கும் கொடுத்து, சாப்பிடுவர்.அந்த நாய், அவர்கள் காலையே சுற்றி சுற்றி வரும்; அவர்கள் அருகிலேயே படுத்துக் கொள்ளும்.அன்றும் அப்படித்தான்... பிச்சைக்காரர்கள், கொண்டு வந்த உணவை நன்றியுடன், தின்றது. பிச்சைக்காரர்கள், சாப்பிட்டு முடித்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த ஊரில் வசித்த சுப்பன், அந்தப் பக்கம் வந்தான். மிகப் பெரிய முட்டாளான அவன், ''உங்களுக்கு விஷயம் தெரியாதா...'' என்றான்.'என்ன விஷயம்...' என்று கேட்டனர் பிச்சைக்காரர்கள்.''கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க போட்ட சோத்த தின்ன அந்த நாய் செத்து போச்சு...'' என்றான். அவர்கள் அலறினர். 'ஐயோ... யார் உணவில் விஷம் கலந்து இருந்ததோ, தெரியலையே; யார் சாகப் போகிறோமோ...' என்று புலம்பினர்.மறுநொடியே, ஆளாளுக்கு வாந்தி எடுத்தனர்; சிலருக்கு பேதியும் உண்டானது.அங்கே, கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவசரமாக, மருத்துவமனைக்கு சென்றனர்.மருத்துவர்கள் சோதித்தனர்... எந்த வித உடல் குறையோ, நோயோ இல்லை. 'என்ன நடந்தது' என்று விசாரித்தனர்.நடந்ததை கூறினர் பிச்சைக்காரர்கள்; முட்டாளும் அங்கே நின்றான்.''அந்த நாய் எப்படி செத்தது...'' என்று கேட்டார் மருத்துவர். அதற்கு, முட்டாள், ''கார் விபத்தில், உடல் நசுங்கி செத்தது; அத பொதச்சிட்டோம்...'' என்றான்.பிச்சைகாரர்களுக்கு, போன உயிர் திரும்பி வந்தது; முட்டாளை அடித்து, உதைத்து அனுப்பி வைத்தனர்.யார், என்ன சொன்னாலும் அப்படியே நம்பாமல், தீர விசாரித்து உண்மையை அறிய வேண்டும் குட்டீஸ்!