உறுதுணை!
கோவை மாவட்டம், சாமி செட்டிபாளையம் ஆரம்ப பள்ளியில், 1959ல், 5ம் வகுப்பு படித்தபோது, தலைமை ஆசிரியராக இருந்தார், காளியப்பன். மிகவும் கண்டிப்பானவர். உண்மை, உழைப்பு, நேர்மை, நேரம் தவறாமையை கடைபிடிப்பதில் முன்னுதாரணமாக திகழ்ந்தார். கடைபிடிக்க எங்களையும் வலியுறுத்துவார்.வெளி உலகே அறியாத கிராமப்புற மாணவர்களை, கல்லார் பழப்பண்ணை, பவானிசாகர் அணை என, கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று அறிவூட்டினார்.கிராமத்தில் ஜாதி ரீதியாக மோதல் நடந்தபோது, பள்ளி வளாக கதவு, ஜன்னல்களை மூடி தாழிட்டு, மாணவர்களை பாதுகாத்தார். காவல்துறை ஊருக்குள் வந்து பாதுகாப்பை உறுதி செய்த பின், எங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அவரது பொறுப்பான கடமை உணர்வு வியக்க வைக்கிறது.படித்து முடித்து பல ஆண்டுகளுக்கு பின், அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுகம் செய்தபடி, அவரது பாதங்களில் விழுந்து வணங்கினேன். மிகவும் மகிழ்ந்தவர், 'நல்ல நிலைமைக்கு வருவாய் என்று அப்போதே அறிவேன்...' என கண்ணீர் மல்க ஆசி வழங்கினார். எனக்கு, 72 வயதாகிறது; அந்த தலைமை ஆசிரியர் வழங்கிய அறிவுரை வாழ்வில் இன்றும் உறுதுணையாக உள்ளது.- எஸ்.எம்.ஆறுமுகம், கோவை.தொடர்புக்கு: 96009 89567