உள்ளூர் செய்திகள்

ரசமான வேலை! (02)

சென்றவாரம்: பர்வத நாட்டில், அன்னச்சத்திரங்களை பராமரித்தார் மன்னர். நாட்டின் வடக்கு பகுதி அன்னச்சத்திர நிர்வாகத்தில் திருப்தி ஏற்படவில்லை. அமைச்சர் ஆலோசனைப்படி, அனைவரும் திடுக்கிடும்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் மன்னர். இனி- அந்த அறிவிப்பு...'இன்று, இங்கு விருந்து படைக்க, விசேஷ சமையல் கலைஞர்கள் வந்துள்ளனர். சிறப்பு உணவாக பன்னீர் ரசம் பரிமாறப்படும். எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம். ஆனால் ஒரு நிபந்தனை... ரசத்தை எவரும் உறிஞ்சி குடிக்க கூடாது; அப்படிச் செய்தால், சிறைத்தண்டனை வழங்கப்படும்'- அறிவிப்பை படித்த பலரும், முணுமுணுத்தனர்... 'வண்ண மலர்கள் நிறைந்த சோலையை, கண்ணைக் கட்டிக்கொண்டு பார்' என்பது போல் அல்லவா உள்ளது. என்று குமுறினர்.பந்தியில், தலைவாழை இலையில் வகை வகையாக உணவுகள் பரிமாறப்பட்டன; சமைத்த பண்டங்களின் நிறமும், மணமும் எச்சில் ஊற வைத்தது. ஆயினும், ரசம் பரிமாறும் முன், வயிற்றை நிரப்பி எழுந்து விட்டனர் பலர்.'பன்னீர் ரசம்... பன்னீர் ரசம்...' என்று, பரிமாறியவர் கூவிய போதே, பலர் எழுந்து, கை கழுவ போய்விட்டனர். சிலர், இலையின் முன் கவிழ்ந்து படுத்து, 'தயிர்... தயிர்...' என்றனர். அது, 'உயிர்... உயிர்...' என்பது போல், மன்னர் செவியில் விழுந்தது. இந்தவிதமாக, முதல் பந்தி முடிந்தது. ரசம் சாப்பிட யாரும் முன்வரவில்லை. மன்னரும், அமைச்சரும் புரியாமல் நின்றனர்.இரண்டாவது பந்தி துவங்கியது; மன்னர் முகத்தில் கவலை திரண்டது.மூன்றாவது வரிசையில், ஏழாவதாக அமர்ந்திருந்தான் காசி. இலையில் பரிமாறப்பட்டிருந்த உணவு வகைகளை, கையாண்ட விதத்திலிருந்தே அவன் சாப்பாட்டுப் பிரியன் என்று விளங்கிற்று. அனைவரும் விசையால் இயங்கும் பதுமைபோல் சாப்பிடுவதை கண்ட காசி, 'சுவையான உணவு வகைகளை, பதமான பக்குவத்தில், இதமான சூட்டில் பரிமாறுகின்றனர்; ஒருவர் கூட சுவைத்து சாப்பிடவில்லையே' என்று வியந்தான்.பந்தியில் இருந்தவர்களிடம், 'ஏன் இப்படி பயந்து பயந்து சாப்பிடுகிறீர்கள்... உணவு வகைகளை பார்த்ததும் பசி அடங்கி விட்டதா... ' என்று கேட்டான்.யாரும் வாய் திறக்கவில்லை. சூடான பன்னீர் ரசத்தை பந்தியில் எடுத்து வந்த போதே, மணம் ஆளைத் துாக்கியது.'ரசம்... ரசம்...' என்று, அங்குமிங்கும் திரிந்த பணியாளர்களை கண்டதும், பலரும் பயத்தில் வேண்டாம் என்று மறுத்து, தலையை வேகமாக அசைத்தனர்.ரசத்துக்காக காத்திருந்தான் காசி. பரிமாறியவர் சூடான ரசத்தை ஊற்றினார். மணம் மெய்மறக்க செய்தது. அன்னத்துடன் சேர்த்து பிசைந்து, 'உர்... உர்...' என்று, நயமாக உறுஞ்சி சாப்பிட்டான். எல்லாரும் திடுக்கிட்டு சாப்பிடுவதை நிறுத்தி பார்த்தனர்; கையிலெடுத்த அன்னம் வாய்க்குள் போகவில்லை. திறந்த வாய், திறந்தபடியே இருந்தது; மூடிய வாய் மூடிய படியே இருந்தது. பந்தியில் இருபுறமும் அமர்ந்திருந்தவர்கள், காசியின் கையைப் பிடித்தனர். வாயில் வைத்த அன்னத்தை சுவைபட மென்று விழுங்கியவன், 'அருமையான ரசத்தை சாப்பிட விடாமல் தடுக்கிறீர்களே...' என்றான்.'பன்னீர் ரசத்தை உறிஞ்சிச் சாப்பிட்டால், சிறைத்தண்டனை என்று தெரியாதா... வாசலில் உள்ள அறிவிப்பை படிக்கவில்லையா...' என்று பதறினர்.பலமாகச் சிரித்தபடி, 'சுவையான விருந்து, அருமையான ரசம்... அதை அனுபவித்து சாப்பிடாமல் இருக்க இயலாது. ரசத்தை உறிஞ்சிச் சாப்பிடுவதால் சிறைக்குச் சென்றாலும் பரவாயில்லை. கிடைப்பதை அனுபவித்து, ஆனந்தித்துச் சாப்பிடாமல், உயிர் வாழ்வதில் அர்த்தமில்லை. என்னைத் தடுக்காதீர்கள்...' என்றான்.மாறுவேடத்தில் இருந்த மன்னரும், அமைச்சரும் மகிழ்ந்தனர். உண்டு முடித்து, நிறைவாக வெளியே வந்தான் காசி. வேடத்தைக் கலைத்த மன்னர், 'அமுதசுரபி அன்னச்சத்திரத்தின் தலைமை அதிகாரியாக காசி நியமிக்கப்படுகிறார்...' என்று அறிவித்தார்.'உணவை, ரசித்துப் புசிப்பவரையே அன்னச்சத்திர தலைமை அதிகாரியாக நியமிக்க வேண்டும். அப்போது தான், சுவையான உணவு, தடையின்றி கிடைக்கும். தான் உண்பது போல், அடுத்தவரும் உண்ண வேண்டும் என்று நினைக்கும் இயல்பு, இது போன்றவர்களிடம் மட்டுமே இருக்கும்...' என்று ஆலோசனை கூறியிருந்தார் அமைச்சர் கருணாகரன். அந்த ஆலோசனைப்படி நிர்வாகியை தேர்ந்தெடுக்கவே, இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த தேர்வில் வெற்றி பெற்றான் காசி. உண்ண வந்திருந்த அனைவரும் உண்மை அறிந்து, உள்ளம் மகிழ்ந்து, மன்னரின் முடிவை ஏற்றனர். அமைச்சரின் ஆலோசனையை பாராட்டினர்.தளிர்களே... உணவை ருசித்து சாப்பிட பழகுங்கள்.முற்றும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !