மாய விழிகள்! (22)
முன்கதை: தோப்பு கிணற்று தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் வினோத சக்தி பெற்றிருந்தனர். காட்டில் கும்பலிடம் இருந்து மாணவியரை மீட்க முயன்ற போது வேனில் அடைபட்டனர். அங்கு வந்த தோப்பு கிணற்று மூதாட்டி அவர்களை மீட்டு விபரங்களை விவரித்தார். இனி - என்ன பூஜை நடக்கிறது என்பதை அறிய தோப்புக்கிணறு மூதாட்டி, வார்டன், தியா, அனு புறப்பட்டனர். கூன் முதுகுடன், குச்சியை ஊன்றியிருந்தாலும் சுறுசுறுப்பாக இருந்தார் மூதாட்டி. காட்டுப் பகுதியில் அனுபவம் உடையவர் போல் சுலபமாக நடந்தார்.சற்று தொலைவில், மந்திரங்கள் ஓதும் சத்தம் கேட்டது. அந்த திசையில் நடந்தனர்.திடீரென, ''அப்படியே நில்லுங்கள்...'' என கிசுகிசு குரலில் கூறி நின்றார் மூதாட்டி. அருகில் வருமாறு கைகளை காட்டியபடி ஒரு பகுதியை சுட்டினார். அங்கு பூஜை நடப்பது தெரிந்தது.சிதிலமடைந்திருந்த கோவிலில் தான் பூஜை நடந்தது. ''அருகில் சென்று பார்க்கலாமா...'' என கேட்டாள் தியா.ஏதோ நினைவு வந்தவராக, ''ஒரு நிமிடம்...'' என பதற்றமடைந்தார் மூதாட்டி.''என்ன பாட்டி...''''சிறு தவறு செய்துட்டேன். நீங்கள் இங்கேயே இருங்கள்; சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன்...'' என வேகமாக நகர்ந்தார் மூதாட்டி.அங்கேயே நின்றனர் மூவரும்.''குழந்தைகளுக்கு என்ன ஆச்சுன்னு பதற்றமா இருக்கு. கொஞ்சம் முன்னே சென்று பார்ப்போமா...'' என்றார் வார்டன். சற்று தயங்கினாலும், ஆர்வம் காரணமாக, மரம், செடிகளுக்கு ஊடாக மறைந்தபடி, முன்னே நகர்ந்தனர். காட்சி தெளிவாக தெரிந்தது. ஈர வேட்டி உடுத்தி, துண்டை போர்த்தியவாறு நின்றிருந்தார் இலக்கியன். மரத்தால் செய்த உருவ பொம்மைக்கு சந்தனம் பூசி வைத்திருந்தனர். அதன் கண்கள், மூக்கு, வாய் குங்குமத்தால் வரையப்பட்டிருந்தது. தீப்பந்தம் வைத்து பூஜை தளம் அமைக்கப்பட்டிருந்தது. துளசி, வேப்பிலை மற்றும் பூக்களை மந்திரங்கள் ஓதியபடி துாவி அர்ச்சித்தார் அங்கிருந்த சாமியார்.''சந்தனம் பூசிய மர பொம்மையை வெச்சாலே தேவதைகளை சாந்தபடுத்த நடத்தக்கூடிய பூஜை தான். எங்க காட்டில் அது தான் வழக்கம்...'' என்றாள் அனு.''அதைச் சுற்றி நான்கு கற்சிலைகளை வேறு வைத்துள்ளனர்...'' கேட்டார் வார்டன்.''அவை, எல்லை சாமிகள். காவல் தெய்வங்களையும், சாந்தப்படுத்த பூஜை செய்கின்றனர்...''''எதுக்காக அனு...''''ஊரில் மக்களுக்கு ஒரே மாதிரி நோய் வந்தால், அது பரவாமல் காக்க, காவல் தெய்வங்களுக்கு, இம்மாதிரி பூஜை செய்வர். இப்போது, அப்படி எதுவும் இல்லை; எதற்காக இந்த பூஜை என்பது தான் புரியவில்லை...''திடீரென பரபரப்பு அடைந்தாள் தியா.''ஐயோ... அங்கு பாருங்கள். பள்ளம் தோண்ட கருவிகளை சிலை முன் நிறுத்தி, அதுக்கும் மஞ்சள், குங்குமம் தெளிச்சிருக்கு...''''அதோ... சிறுமியர் மூவரும் நிற்கின்றனர்...'' அனு சுட்டி காட்டிய திசையில், மூன்று சிறுமியர் மஞ்சள், குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து நனைந்தபடி நின்றிருந்தனர்.காட்டுப் பூக்களால் தொடுத்த மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. சிறுமியர் முன், ஒரு கல்வெட்டு இருந்தது. அதற்கும் மஞ்சளும், குங்குமமும் வைக்கப்பட்டிருந்தது. இதையெல்லாம் கண்டதும் கதி கலங்கிய வார்டன், ''பெரிய ஆபத்து போல் தோன்றுகிறதே...'' என்றார்.''சத்தம் போடாதீங்க... காதில் விழுந்தால், நம்மையும் பிடித்து விடுவர்...''''ஆபத்து என்னவென்று உங்களுக்கு புரிகிறதா...'' ''வார்டன்... பூஜை தானே நடக்கிறது...''''மிருகங்களை பலி கொடுக்கும் முன், மாலை போட்டு, மஞ்சள் தண்ணீர் ஊற்றுவதை போல, குழந்தைகளுக்கும் ஊற்றியுள்ளனர். குழி தோண்டும் கருவிகள் சாமி முன் இருக்கிறது... இதற்கு என்ன அர்த்தம்...''வார்டன் சொல்ல, அனு, தியாவுக்கு பதற்றம் தொற்றியது.''வார்டன் என்ன சொல்றீங்க...''''உயிரே போனாலும் பரவாயில்லை... இதை தடுக்கணும்...''வார்டன் அந்த இடம் நோக்கி ஓட முற்பட அனுவும், தியாவும் பிடித்து நிறுத்தினர்.''சற்றுப் பொறுங்கள். எங்கள் சக்தியை பயன்படுத்தி இங்கிருந்தே பூஜையை நிறுத்தி விடுகிறோம்...''''என்ன செய்ய போறீங்க...''''பூஜை நடத்துவோர் கண்களுக்கு தெரியாதவாறு, ஆயுதங்களை மறைய வைக்க முடியும். பூஜை செய்யும் சாமியாரையும் அப்படியே உறைய வைக்க இயலும்; இதை செய்து விட்டால் பெரும் குழப்பம் ஏற்படும்; பூஜை தடைபடும்...'' என்றாள் தியா.அதை கேட்டதும் ஆச்சரியத்தில் உறைந்தார் வார்டன்.''இது, சாத்தியமா...''''சாத்தியம் தான் வார்டன். எங்கள் சக்தியை பற்றி தோப்புக்கிணறு பாட்டி கூறினார் அல்லவா. சற்று பொறுமையுடன் இருங்கள்; செய்து காட்டுகிறோம்...''அணிந்திருந்த காலணிகளை கழற்றினாள் தியா.''என்ன செய்ய போற... ஏன் செருப்ப கழட்டுற...''''செருப்பை போட்டுக் கொண்டிருந்தால், சக்தி வேலை செய்யாது மிஸ்...''சொன்னபடி தியா, அனு பக்கம் திரும்பி, ''குழி தோண்டுவதற்காக வைத்திருக்கும் ஆயுதங்களை மறைய வைக்கிறேன். அதில் குழப்பமடையும் சமயம், நீ மந்திரம் ஓதும் சாமியாரை உறைய செய்து விடு. அடுத்தடுத்து இரண்டும் நிகழ்ந்தால் அங்கே டோட்டல் கொலாப்ஸ் தான்...'' என்றாள்.''சரிக்கா... நான் தயார்...''தியாவையும், அனுவையும் மாறி மாறி வியப்பாக பார்த்தார் வார்டன்.கருவிகளை உற்றுப் பார்த்தாள் தியா. புகை மூட்டம் தெரிந்தது. அடுத்த வினாடி, அவை பார்வைக்கு மங்கலாயின.திடீரென கருவிகள் மறைந்ததால், பூஜை செய்து கொண்டிருந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாருக்கு முகம் வியர்த்தது.''ஏதோ துஷ்ட ஆவி வருது...''அலறியபடி பதறி அடித்து எழுந்தார் சாமியார்.சபாரி அணிந்திருந்த காவல் ஆட்களில் மூன்று பேர் தெறித்து ஓடினர். செல்வாவும், வீராவும் பயத்துடன் பின் வாங்கினர்.இலக்கியன் வியர்த்து விறுவிறுத்து நடுங்கியபடி ஒரு மரத்தின் ஓரம் ஒன்றினார்.அந்த இடம் களேபரமானது.சட்டென கருவிகள் மறைந்ததை பார்த்த வார்டனால் நம்பவே முடியவில்லை. வியப்பில் பேச்சு எழாமல் அப்படியே நின்றிருந்தார்.- தொடரும்...- ஜே.டி.ஆர்.