உள்ளூர் செய்திகள்

சேமிப்பின் சிறப்பு!

பரந்து விரிந்து வளர்ந்த அரச மரத்தில், கூடுகட்டி, குருவிகள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. சூரியன் உதயமானதும், உடலை சிலிர்த்து, சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டபடி இரை தேட கிளம்பும். இதை, வழக்கமாக கொண்டிருந்தன.அந்த மரத்தின் வேர் பகுதியில், சிறு புற்று இருந்தது. அதற்குள் எறும்புகள் சாரை சாரையாக போவதும், வெளியேறுவதுமாக இருந்தன. இதை வேடிக்கை பார்த்த குருவிகளில் ஒன்று, 'இந்த எறும்புகளுக்கு, வேறு வேலையே இல்லையா... எப்ப பார்த்தாலும் ஓடிக்கிட்டே இருக்கு...' என்றது.'வாழ தெரியாத ஜென்மங்கள்; இரை தேடி போனோமா, திருப்தியாக உண்டோமா, திரும்பி வந்து ஓய்வெடுத்தோமா... என்றில்லாமல், இயந்திரம் மாதிரி இரவும், பகலும் இயங்கி கொண்டிருக்கின்றன...'கேலியாக கூறியது மற்றொரு குருவி.இந்த பேச்சை கேட்டும் சலனம் எதுவும் இன்றி, தங்கள் போக்கில் சென்றன எறும்புகள். அக்கம் பக்கத்து வயல்களில் விளைந்த தானியங்களை தின்று, பசியாறி கூடு நோக்கி பறந்தன குருவிகள். எறும்புகள் மட்டும் அயராமல் ஓடிக் கொண்டிருந்தன. அன்று இரவு -இடி, மின்னலுடன் பொழிய ஆரம்பித்தது மழை. தொடர்ந்து, இரண்டு நாட்கள் கொட்டி தீர்த்தது. குருவிகளால் வெளியில் தலை காட்ட முடியவில்லை; உணவும் கிடைக்கவில்லை. குளிர், பசியால் வாடி, கூட்டுக்குள் முடங்கின. மரத்தடியில், எறும்புகள் ஓட்டத்தை காண முடியவில்லை.மூன்றாவது நாள் காலை, மழை நின்றது; எறும்பு கூட்டம், புற்றிலிருந்து வெளியில் வர துவங்கின. குருவிகளில் ஒன்று, 'என்ன நண்பர்களே... இரண்டு நாட்களாக, எங்களை போல் உணவில்லாமல் பட்டினியால் வாடிக்கிடந்தீர்களா...' என்று கேட்டது.'என்ன அப்படி கேட்டு விட்டீர்; நாங்கள் ஏன் பட்டினி கிடக்க வேண்டும்; எல்லாரும் ஒன்றிணைந்து ஓடி, ஓடி உணவு தேடி சாப்பிட்டது போக, மீதியை புற்றுக்குள் சேமித்திருக்கிறோம்...'அடைமழையின் போது, சேமித்து வைத்ததை பங்கிட்டு, பசியாறி நிம்மதியாக பொழுதை கழித்தோம்... இப்போது, மழை ஓய்ந்து விட்டது; மறுபடியும் கிளம்பி விட்டோம்; அடுத்த மழை வருவதற்குள் சேமிக்க வேண்டாமா...'ஓய்ந்து போய் விட்டால், உட்கார்ந்து சாப்பிட முடியுமா; எங்கள் சுறுசுறுப்பான ஓட்டத்தையும், ஒற்றுமையையும் வெட்டி செயலென, நீங்கள் கேலி பேசியதை கேட்டு கொண்டு தான் இருந்தோம்; ஓட்டத்துக்கான காரணத்தை புரிந்திருப்பீர் என நம்புகிறோம்...'இப்படி கூறியவாறு வரிசையில் இணைந்து ஓட துவங்கின எறும்புகள். வெட்கத்துடன் தலைகுனிந்தன குருவிகள்.செல்லங்களே... எறும்புகள் போல் சுறுசுறுப்புடன், ஒற்றுமையாக உழைத்து சேமித்து, சிறப்பாக வாழ பழகுவோம்!என்.ரங்கநாயகி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !