உள்ளூர் செய்திகள்

கைவிளக்கு ஏந்திய காரிகை!

மருத்துவருக்கு உதவியாக, நோயாளியை கவனிப்பவரை ஆங்கிலத்தில், 'நர்ஸ்' என்பர். தமிழில், செவிலியர், தாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன. நர்ஸ் என்றவுடன் நினைவுக்கு வருபவர், பிளாரன்ஸ் நைட்டிங்கேல். கைவிளக்கேந்திய காரிகை என புகழ்பெற்றார்.ஐரோப்பிய நாடான இத்தாலியில், 1820ல் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தார். தனித்துவ அழகுடன் திகழ்ந்தார். அவரை மணக்க பலர் போட்டி போட்டனர். பெற்றோரும் மணக்கோலத்தில் பார்க்க விரும்பினர். இந்த நிலையில், 'திருமணம் வேண்டாம்; நோயால் அவதிப்படுவோருக்கு தொண்டு செய்ய விரும்புகிறேன்...' என்றார்.பெற்றோர், நயமாக எடுத்து கூறினர்; ஏற்க மறுத்தார். லட்சியத்தை அடையும் தீர்மானத்தில் திடமாக இருந்தார். பின், 'எந்த மருத்துவமனையிலும் பணி செய்யக் கூடாது; அது குடும்ப கவுரவத்திற்கு இழுக்கு...' என தடுத்து, சுயமாக சேவை செய்ய அனுமதித்தனர்.வீட்டிலிருந்தபடியே, ஏழை மக்களுக்கு பணிபுரிந்தார்; மேன்மேலும் ஈடுபாடு அதிகரித்தது. மருத்துவ சேவை சார்ந்த வெளியீடுகளை படித்து அறிவை வளர்த்தார்.ஒருமுறை, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்; அங்கு ஒரு மருத்துவமனையை கண்டார். அது நவீன முறையில் இருந்தது; அதில், செவிலியராக மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார்.ஐரோப்பிய நாடான இங்கிலாந்து, லண்டனில், பெண்களுக்கென்றே ஒரு மருத்துவமனை இயங்குவதை அறிந்து, மேற்பார்வையாளராக பணியில் சேர்ந்தார். ஐரோப்பாவில், 1854ல், 'கிரிமிய போர்' உச்சத்தை அடைந்தது. அதில் ஆங்கிலேய வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.போர்க்கள பகுதியில், மருத்துவ உதவி செய்ய எவரும் இல்லை. இங்கிலாந்து ராணுவ செயலர், போரில் படுகாயம் அடைந்துள்ள வீரர்களுக்கு சிகிச்சையில் உதவ அழைப்பு விடுத்தார். உடனே சம்மதம் தெரிவித்த பிளாரன்ஸ், 30 செவிலியருடன், போர் முனைக்கு சென்றார். ஆண் மருத்துவரே பணி செய்ய அஞ்சும் பகுதி அது. அந்த பணியை, பெண் செவிலியர்களால் செய்ய இயலுமா என ஐயம் எழுப்பினர் பலர்.அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக, இரவு, பகல் பாராமல் சுறுசுறுப்பாக இயங்கினார் பிளாரன்ஸ். மருத்துவர் ஆலோசனைப் படி, ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளித்தார்; பலர் உயிர் பிழைத்தனர்.நள்ளிரவில், அரிக்கேன் விளக்கு ஏந்த அந்த ஒளியில் சிகிச்சை அளித்தார். இதனால், 'கைவிளக்கு ஏந்திய காரிகை' என புகழ் பெற்றார். ராணுவ மருத்துவ பயிற்சிப் பள்ளி ஒன்றையும் ஏற்படுத்தினார்; வீரர்கள், உடல் நலத்துடன், மன வளமும் பெற்றனர்.பிளாரன்ஸ் செய்த பணியை பாராட்டி, பெரும் நிதி அளித்தனர் மக்கள். அதில், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் செவிலியர் பயிற்சி பள்ளி ஒன்றை துவங்கினார். அங்கு, 'அன்பாயிரு' என்ற சொல்லை செவிலியர்களின் லட்சியமாக்கினார்.உலகெங்கும் செவிலியரை காணும் போது, பிளாரன்ஸ் நினைவு வராமல் போகாது. கடும் துயர் காலத்தில், கனிவுடன் பணியாற்றி, 1910ல், 90ம் வயதில் மறைந்தார்; உலக வரலாற்றில் அவர் புகழ் நிலைத்துள்ளது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !