சாக்லெட் உலகம்!
ஐரோப்பிய நாடான ஸ்பெயின், வட அமெரிக்க நாடான மெக்சிகோ மீது, கி.பி., 1520ல் படையெடுத்து வெற்றி பெற்றது. அப்போது, மெக்சிகோ மன்னர் குடித்த பானம் வியப்பை ஏற்படுத்தியது. அது, ஒருவகை மர விதையில் தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த விதைகளை, ஸ்பெயின் நாட்டுக்கு எடுத்து வந்தனர். இப்படித்தான், ஐரோப்பாவில் அடியெடுத்து வைத்தது சாக்லெட். அது முதல் ஸ்பெயின் நாட்டவர், தினமும் காலையில் சாக்லெட் பானம் குடிக்க தவறுவதில்லை. சாக்லெட், கோகோ மர விதையில் தயாரிக்கப்படுகிறது. விதையை வறுத்து அரைத்து, உரிய பதத்தில் சர்க்கரை, வெண்ணெய் கலந்தால் சாக்லெட் கட்டி தயாராகும்.இன்று புழக்கத்தில் உள்ள, கன செவ்வக வடிவ சாக்லெட் கட்டியை, ஐரோப்பிய நாடான இங்கிலாந்தை சேர்ந்த ஜோசப் ப்ரை, 1843ல் உருவாக்கினார். இதையடுத்து, கேட்பரீஸ் நிறுவனம், 1868ல் வர்த்தக ரீதியாக, இது போன்ற சாக்லெட் கட்டி தயாரிப்பில் இறங்கியது.உலகின், மிக பிரபல சாக்லெட், ஸ்நிக்கர்ஸ்; இது தவிர, எட்டு வகை தயாரிப்புகள் உலகம் முழுவதும் பிரபலம். ஐரோப்பிய நாடான பிரான்ஸ், பாரீஸ் நகரில் மட்டும், 300 சாக்லெட் கடைகள் உள்ளன. ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், 2,000க்கும் அதிகமான சாக்லெட் கடைகள் உள்ளன.ஐரோப்பிய நாடான ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தான், சாக்லெட் கட்டி, அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. ஜெர்மனி, கோலோன் நகரில் தான், உலகின் மிகப்பெரிய சாக்லெட் கடை உள்ளது.உலகம் முழுவதும், 62 சாக்லெட் அருங்காட்சியகங்கள் உள்ளன. பெல்ஜியத்தில் மட்டும், 16 அருங்காட்சியகங்கள் உள்ளன. இவற்றில், சாக்லெட் தயாரிப்பு செய்முறை, சுவை தேர்வு, விற்பனை என, எல்லாம் உண்டு.சாக்லெட் தயாரிக்கும் மூலப்பொருளான கோகோ மரம், ஆப்பிரிக்க நாடுகளான ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியாவில் தான் அதிகமாக பயிரிடப்படுகிறது. உலகில், 70 சதவீதம் இங்கு தான் உற்பத்தியாகிறது.