உள்ளூர் செய்திகள்

திக்... திக்... பங்களா (20)

சென்றவாரம்: விடுமுறையில், குற்றால மாளிகையில் வினுவும், மதுவும் மர்மங்களை துப்பறிய முயன்றனர். மலைமாளிகை பற்றிய உண்மையை கூறியதும் தலை சிதறி இறந்தாள் மந்திரவாதி ஜெய்சீலிமா. இனி -மலை மாளிகைக்கு வந்தனர் வினுவும், மதுவும். அப்பாவின் அலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ள முயன்றான் வினு. இணைப்பு கிடைக்கவில்லை. துவண்டு போனவன், தாத்தாவின் செருமல் கேட்டு சுதாகரித்தான்.'இன்று முக்கியமான நாள். தலை முறை, தலை முறையாக செய்யும் சடங்குகளை செய்யப் போகிறோம்!''சரி... நாங்க என்ன செய்யணும்!'வேகமாக வந்த சுப்பையன் காதில் ஏதோ கிசுகிசுத்தான். மிரண்டார் தாத்தா. 'என்ன தாத்தா ரகசியம்...''கொடூர மந்திரவாதி ஜெய்சீலிமா செத்து கிடக்கிறாளாம்... அவளை நேற்று சந்தித்தீர்களா, ஏதாவது சொன்னாளா...''அவளை கண்டாலே பயம்; அங்கே போய் பேசுவமா?'சந்தேகத்துடன், 'குழந்தைகளா... இன்று வெளியே எங்கும் போகக் கூடாது; குளித்து முடித்து வாருங்கள்; சுப்பையன் உங்களுக்கு மொட்டை அடித்து விடுவான்!' என்றார்.'மொட்டை எல்லாம் வேணாம் தாத்தா!''மிகவும் அவசியம்; இந்த சடங்கு வெற்றியடைந்தால், உங்களுக்கு மரணமே இல்லை கண்ணுகளா!''மனுஷனா பிறந்தா இறந்தே ஆகணும் தாத்தா...'நெற்றி சுருக்கினார் தாத்தா.'அதிக பிரசங்கித்தனமா பேசுறீங்க... அறைக்கு போங்க...'வழக்கத்துக்கு மாறாக, மலை மாளிகையில் அனைத்து அறைகளும் திறந்திருந்தன; கூச்சலும், உரையாடல் சப்தமும் கேட்டபடி இருந்தது.பத்துக்கு மேற்பட்ட சகதி பூதங்கள், கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்டிருந்தன. மதுவும், வினுவும் சமையலறை பக்கம் எட்டிப் பார்த்தனர்.செண்பா நின்றிருந்தாள். முகத்தில், கண்கள் இருந்த இடத்தில் இரு குழிகள்; வாய் பொக்கையாக இருந்தது; அடுப்படி மேடையில், கண்களும், நாக்கும் இருந்தன. அவற்றை எடுத்து பொருத்தி அவள் பார்ப்பதற்கு முன் விலகினர்.கொல்லையில் தனித்தனி பாகங்களாக கிடந்தான் சுப்பையன்; எடுத்துக் கோர்த்து கொண்டிருந்தாள் பாட்டி. அங்கு கட்டியிருந்தது குதிரையல்ல; கோவேறு கழுதை. எல்லாம் வினோதமாக இருந்தன. பயமின்றி மேலேறிக் கொண்டிருந்தன சகதி பூதங்கள். மது, வினுவுக்கு வியர்த்துக் கொட்டியது. 'என்ன குட்டிகளா! தப்பி போயிடலாம்னு பாக்கறீங்களா...' என்றான் சுப்பையன்.'நீ சந்தேகப்படுற மாதிரி தெரியுது!''இனி நடிக்க எல்லாம் வேண்டியது இல்லை; இங்க எல்லாரும் துர் ஆவிகள் தான், எங்கள் லட்சியத்தை நிறைவேற்ற பலியாக போறீங்க... 'உங்களை காப்பாற்ற, இனி யாரும் வர போறதில்லை; ஜெய்சீலிமா ஏதாவது சொல்லி கொடுத்திருப்பாள். அதை வைத்து எங்களை வெல்ல மனப்பால் குடிக்காதீங்க!'நடிப்பை உதறியபடி, 'அட கேடு கெட்ட துர் ஆவியே!' என்றான் வினு.டூப்ளிகேட் கொள்ளுத் தாத்தா, பாட்டி வந்தனர்.'நாங்க இசக்கியப்பன் - பார்வதி அல்ல; ஆவிகள் தான்...'மது, வினு மவுனித்தனர்.'செண்பா! இவங்கள வாசனை திரவியங்களால் குளிப்பாட்டு; வண்ண மயமாய் ஆடை உடுத்தி விடு! சீக்கிரம் ஆகட்டும்...'மது, வினுவை அமர வைத்து, தலையில் தண்ணீர் தெளித்தான் சுப்பையன்; ஆட்காட்டி விரலை கத்தியாய் உபயோகித்தான். கொத்து கொத்தாய் முடிகள் விழுந்தன. வாய்க்கோணி அழுதாள் மது.'ஏண்டி அழற?''சாகிறதை பத்திக்கூட பயமில்லை; ஆனா, அழகான தலை முடி போகுதேங்குற சோகம் தான் தாளல...'வாய்கொள்ளமால் சிரித்தான் வினு.'இப்ப எதுக்குடா சிரிக்கிற...''ரெண்டு பேரையும் ஆவிகளா கற்பனை பண்ணி பார்த்தேன்; இடுப்புல கவுன் மாதிரி ஏதோ மாட்ட வேண்டி வரும்; வாய்ல கோரைப்பல்லு. என்னை விட உனக்குத்தான் மகா பொருத்தமா இருக்கும்!''வாய மூடுடா!'வாசனை திரவியம் போட்டு குளிப்பாட்டி, புது மாதிரி ஆடை அணிவித்தாள் செண்பா. நள்ளிரவில் ஒரு மேடையில் மது, வினுவை படுக்க வைத்தனர். 'சுப்பையன்...''என்ன...''நாங்க எப்போ ஆவிகளா மாறுவோம்...''துல்லியமாக என்றால் நள்ளிரவு, 12:00 மணிக்கு...'ஜெய்சீலிமா கற்பித்த ஜின்களை அழைக்கும் மந்திரம் நினைவுக்கு வந்தது; மதுவும், வினுவும் உச்சரிக்க ஆரம்பித்தனர். அவை வரவேயில்லை.நகர்ந்து கொண்டிருந்தது நேரம்.இன்னும், 40 நொடிகள் தான்...தாத்தா உருவிலிருந்த ஆவி தலைவன் கையில் கொடுவாள். கண்ணிமைக்கும் நேரத்தில்... ஏழாம் வானம் திறந்தது. லட்சம் குதிரைகளின் குளம்படி சப்தம் கேட்டது.அனைவரும் அண்ணாந்தனர். வெள்ளை குதிரைகளில் வெளிபட்டன ஜின்கள். ஆயிரம் சூரியன்களின் வெளிச்சம் டாலடித்தது. காற்று மண்டலத்தின் குறுக்கே ஒரு மாயச்சாலை, மலை மாளிகையை இணைத்தது! வெள்ளை தாடியுடன், பீடத்துக்கு பாய்ந்தன ஜின்கள்.பளிச்! பளிச்! பளிச்! மின்னல்கள் வெட்டின. ஆவிகளின் மீது அவை பாய்ந்தன. உக்கிரப்போர் நடந்தது. மது, வினுவின் கைக்கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. இருவருக்கும் விடுதலைக் கிடைத்தது. குற்றாலத்தில் வசித்த கோடை அனுபவத்தை கற்பனை கலந்து, ஒரு மர்மக்கதையாக எழுதி முடித்திருந்தான் வினு. அதை வாசித்து, திருத்திய மது, அழகிய உறையில் போட்டு, பெற்றோரின் முகவரியை எழுதினாள்.இருவரையும் அழைத்துப் போக குற்றாலம் மாளிகைக்கு வந்திருந்தனர் பெற்றோர். வெளியே காத்திருந்தது அழகிய கார்.'நீங்க எப்படி இங்கே...' வியந்து, அன்புடன் கட்டிப்பிடித்தனர்.'குழந்தைகளுக்கு ஆபத்து உடனே வாங்க என்று தகவல் வந்தது; பறந்து வந்தோம்!' என்று கண்சிமிட்டி சிரித்தனர் பெற்றோர். சென்னை நோக்கி விரைந்து கொண்டிருந்தது கார்.மர்மக்கதை அடங்கிய கவரை, பெற்றோரிடம் கொடுத்தான் வினு. சிரித்தபடியே, 'சென்னை சென்ற பின்தான் படிக்க வேண்டும்!' என்றாள் மது. ஒப்புக் கொண்டனர். அதிவேக கார் பயணத்தில் கண்ணயர்ந்தனர் வினு, மது. அப்போது, மென்மையாக அந்த கவரை பிரித்தார் மாதேஷ்.அதில்...மாதேஷ் - திரிஷா, நாங்க உங்க குழந்தைகளல்ல; குட்டி ஆவிகள்!- பொய் சொல்ல விரும்பாத மது, வினு என்று துவங்கியது. இதைக் கண்டு, 'ஏப்ரல் முதல் நாளில் முட்டாளாக்கியதற்கு பழிவாங்கலா...' என, சிரித்தபடி வாசித்தனர் பெற்றோர். ஆவியாக நடித்தவர்கள் எல்லாம் மனக்கண்ணில் வந்து சிரித்தனர்.முற்றும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !