உள்ளூர் செய்திகள்

கலைந்தது நடுக்கம்!

சென்னை, திருவல்லிக்கேணி, ஹிந்து உயர்நிலைப் பள்ளியில், 1957ல், 6ம் வகுப்பில் சேர்ந்த போது, புதிய சூழ்நிலையால் முதல் மாத பரீட்சையில், மிகக் குறைந்த மதிப்பெண் வாங்கி இருந்தேன்.மதிப்பெண் பட்டியலை, என் அப்பாவிடம் காட்டி, கையெழுத்து வாங்கி வர கூறினார் வகுப்பு ஆசிரியர் சுப்ரமணியம்; குங்கும பொட்டிட்டு, ஜிப்பா, பஞ்ச கச்சம் அணிந்து கம்பீரமாக காட்சியளிப்பார்.பயத்தில், அப்பாவிடம் காட்டவில்லை. நான்கு நாட்களுக்கு பின், அப்பா போல், மோசடியாக கையெழுத்து போட்டு, திருப்பிக் கொடுத்தேன்.இரண்டு நாட்களுக்குப் பின், சந்தையில் ஆசிரியரை பார்த்த அப்பா, 'மதிப்பெண் பட்டியல் கொடுத்து விட்டீர்களா...' என, கேட்டிருக்கிறார்.சற்று நிதானித்து, 'நாளை கொடுத்து விடுவேன்...' என்று கூறி சமாளித்துள்ளார். மறுநாள் வகுப்பில் என்னை அழைத்து, 'மதிப்பெண் பட்டியலில் கையெழுத்து போட்டது யார்...' என்று கேட்டார். திடுக்கிட்டு நடுங்கி, 'மன்னித்து விடுங்கள் ஐயா... தவறு செய்து விட்டேன்...' என்று வருந்தினேன். தேற்றியவர், 'இது மிகப்பெரிய குற்றம்... இனி இப்படி செய்யாதே. நன்றாக படித்து நல்ல மதிப்பெண் வாங்கினால், அப்பா ஏன் திட்டப் போகிறார்...' என்று அறிவுரைத்து, இன்னொரு பட்டியல் தயார் செய்து தந்தார். அவரது அறிவுரையால் மனஉறுதி பெற்றேன். பயம் களைந்து, படிப்பில் தீவிர கவனம் செலுத்தி முன்னேறினேன்.தற்போது, என் வயது, 76; தபால் துறையில், காசாளராக பணியாற்றி நற்பெயருடன் ஓய்வு பெற்றேன். வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய ஆசிரியரை, நன்றியுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- எஸ்.பாலசுப்ரமணியன், புதுச்சேரி.தொடர்புக்கு: 98842 62085


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !