தூண்டுகோல்!
கன்னியாகுமரி மாவட்டம், சொத்தவிளை, அரசு நடுநிலைப் பள்ளியில், 1993ல், 8ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!அன்று காலை வகுப்புக்கு உரிய நேரத்தில் ஆசிரியர் வரவில்லை. அப்போது, குறும்பாக கரும்பலகையில், கார்ட்டூன் பொம்மை வரைந்து, ஜோக்ஸ் எழுதினேன். அதைக் கண்ட சக மாணவர்கள் சிரிப்பலையில் ஆழ்ந்தனர். திடீரென, நுழைந்தார் வகுப்பாசிரியர் ஷேக் முகமது. பதறியபடி கரும்பலகையில் எழுதியிருந்ததை அழிக்க முயன்றேன். என்னை தடுத்தவர், 'அடடா... ஜோக்ஸ் அருமையா இருக்கு... கார்ட்டூனையும் சூப்பரா வரைந்திருக்க...' என பாராட்டியதுடன், 'கரும்பலகையில் பாடங்கள் தவிர எதுவும் எழுதக் கூடாது...' என எச்சரித்தார்.பிற்பகலில் ஓய்வு அறைக்கு அழைத்து, 'உனக்கு, ஓவியம் வரையும் திறனும், எழுத்து திறமையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. அவற்றை வளர்த்துக்கொள்...' என உற்சாகப்படுத்தி, சக ஆசிரியர்களிடம் அறிமுகப்படுத்தினார்.கரும்பலகையில் தினமும் பொன்மொழி எழுத வாய்ப்பு தந்தார். தேச விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்கள் படத்தை வரைந்து, வண்ணம் தீட்டவும் உற்சாகப்படுத்தினார். அது, படைப்புகள் எழுதவும், ஓவியம் வரையவும் துாண்டியது.என் வயது, 43; திறமையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடாமல், நம்பிக்கை ஊட்டி வளர்த்த ஆசிரியரை பெருமையுடன் நினைவில் கொண்டுள்ளேன்.- மகேஷ் அப்பாசுவாமி, கன்னியாகுமரி.தொடர்புக்கு: 94870 56476