உள்ளூர் செய்திகள்

பயனற்ற சொல்!

சிவகங்கை மாவட்டம், உக்கடை, அ.அப்பாவுத்தேவர் உயர்நிலைப் பள்ளியில், 1973ல், 9ம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். வகுப்பாசிரியை சரோஜா புத்தகம் ஒன்றை தந்து, 'எம்.ஆர்., சாரிடம் கொடுத்துவா...' என்றார்.அது யார் என்று தெரியாததால் தடுமாறியபடி, 'எனக்கு அவரை தெரியாது...' என்று கூறி நகர்ந்தேன். அருகில் அழைத்தவர் கன்னத்தில், 'பளார்' என அறைந்தார். வலியால் துடித்தபடியே, 'இந்த பள்ளியில் இப்போதுதான் சேர்ந்துள்ளேன்...' என விளக்கமளித்தேன்.தேற்றியபடி, 'சோம்பேறி தான், முடியாது... தெரியாது... என்ற வார்த்தையை உபயோகிப்பான். தெரியாததை மற்றொருவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்... முயன்றால் முடியாதது எதுவும் இல்லை...' என அறிவுரைத்தார். அன்று முதல், 'முடியாது' என்ற சொல்லை வாழ்வில் பயன்படுத்தியதே இல்லை. என் வயது, 63; பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். அந்த ஆசிரியையிடம் கற்றவற்றை, என் மாணவர்களுக்கு புகட்டி புகழ் பெற்றுள்ளேன்.- தே.தாஸ், சிவகங்கை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !