வயலின் வனிதா! (32)
''பூட்டப்பட்ட அறையில் நான் இல்லாததைப் பார்த்து, என்னைத் தேடிக் கொண்டு இங்கு வந்து விட்டார்கள்!'' என்று அவர்களை கோஸ்வாமிக்கு காட்டினாள்.வேகமாக வனிதாவின் அருகில் வந்த காமாட்சி அவள் கையை வெறித்தனமாகப் பற்றியபடி, ''அடங்காபிடாரி! என்ன துணிச்சல் உனக்கு?'' என்று பற்களைக் கடித்து அவளை இழுத்தாள்.கோஸ்வாமி அவளை கையமர்த்தி, ''ஏன் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்? அவள் செய்த குற்றமென்ன?'' என்று கேட்டார் அமைதி யாக. அதில், கடுமையும் கலந்திருந்தது.''அவள் வயலினைத் தொடக்கூடாதென்று கண்டித்திருந்தேன். அதை மீறியதற்கு அவள் தண்டிக்கப்பட வேண்டும்!''''வயலினை அவள் ஏன் தொடக் கூடாதென்று தடை விதித்தீர்கள்?''''விளக்கமெல்லாம் கூறிக் கொண்டிருக்க முடியாது. அவசியமும் இல்லை. அவள் குடும்பத்தையே நாசமாக்கிய வயலின் அது...''''மூட நம்பிக்கையை, விபத்துக்கும் வித்தைக்கும் முடிச்சுப் போடாதீர்கள். வனிதாவிற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும். இசைக் கல்லூரியில் சேர்ந்து அவள் வயலின் கற்பதற்கு ஸ்காலர் ஷிப் கிடைத்திருக்கிறது அவளுக்கு!'' என்றார் கோஸ்வாமி.''எல்லாம் போச்சு. என் திட்டமெல்லாம் தரை மட்டமாகிப் போயிற்று. நான் தோற்றுப் போனேன்!'' என்று கூறி விம்மினாள் காமாட்சி.கோஸ்வாமியும், அவர் மனைவியும் திகைத்துப் போயினர்.''உங்கள் திட்டமென்ன...? நீங்கள் தோற்றது எப்படி?'' என்று கேட்டார் கோஸ்வாமி.வனிதாவுக்கு வியப்பான வியப்பு. தன் அத்தை அழுது அவள் பார்த்ததே இல்லையே!''வனிதாவுக்கு கடன்பட்டவளாகி விட்டேன். என்னால் அவ்வளவு பணத்தை அவளுக்கு எப்படித் திருப்பி தரமுடியும்? என் கெட்ட எண்ணமே என்னைக் கெடுத்து விட்டது!'' என்று கேவினாள் காமாட்சி.''விளக்கமாகச் சொல்லுங்களம்மா!'' வேண்டிக் கொண்டார் கோஸ்வாமி.கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு கூறலானாள் காமாட்சி.''வனிதாவின் அம்மா இறந்த பிறகு அவள் அப்பா ரொம்ப நாள் மறுமணம் செய்து கொள்ளவே இல்லை. பிறகு இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, வனிதாவின் வருங்கால விஷயமாகப் பேசுவதற்காக என்னிடம் வந்தார்.''இருபது லட்ச ரூபாயை என்னிடம் கொடுத்து, 'அக்கா! வனிதாவிற்கு மாற்றாந்தாயாக வரப் போகிறவள் எப்படிப் பட்டவளோ எனக்கு தெரியாது. அவள் குழந்தையிடம் பாசத்தோடு இருக்கலாம் அல்லது கொடுமைக்காரியாகவும் இருக்கலாம். அவள் என் மனதையும் மாற்றலாம். ஆகவே, வனிதாவின் எதிர்காலத்தை உன் கையில் ஒப்படைக்கிறேன். அவளை நீ வளர்க்க வேண்டும் என்று கூறவில்லை. ஆனால், எனக்கு ஏதாவது நேர்ந்தாலோ என் குணம் மாறினாலோ, வனிதாவை கண் கலங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உன் கடமை. அதற்காகதான் இந்தப் பணத்தை உன்னிடம் தருகிறேன்.''வனிதா பெரியவளானதும், அவள் உன் பொறுப்பில் வளர வேண்டி வருமானால், அவளுக்கு வயலின் கற்றுத்தர இந்தப் பணத்தை பயன்படுத்து. அவளுக்கு வயலினில் ஈடுபாடு இல்லையானால், இந்தப் பணத்தை நீ அனுபவிப்பதில் எனக்கு ஆட்சேபணை கிடையாது,'' என்று கூறிய என் தம்பி இதைச் செய்ய வேண்டும் என்று என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டான்.''அப்போது வனிதாவுக்கு நாலு வயதிருக்கும். என் கணவர் பெரிய உத்தியோகத்தில் இருந்தார். நல்ல சம்பளம்தான். ஆனால், ரொம்ப செலவாளி; சேமிக்கவில்லை. திடீரென்று அவர் காலமாகவே, பகட்டான வாழ்க்கைக்குப் பழகிப் போன என்னால், எளிய வாழ்க்கை வாழ முடியவில்லை. தம்பி கொடுத்திருந்த இருபது லட்சத்தை உரிமையோடு எடுத்து செலவு செய்து விட்டேன். திடீரென்று வனிதாவின் அப்பாவும், மாற்றாந்தாயும் விபத்தில் இறந்து போவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.''தம்பிக்கு சத்தியம் செய்து கொடுத்திருந்த மனசாட்சி குத்தியது. வனிதாவுக்கு வயலின் ஈடுபாடு இல்லையானால் இந்தப் பணத்தை நீ உன் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்திக்கொள். அவளை வயலினில் பெரிய மேதையாக்கத் தான் இந்தப் பணம் என்று கூறி இருந்தான் தம்பி.''ஆகவே, என் மனசாட்சியின் உறுத்தலுக்கு போக்குக்காட்ட வனிதா வயலின் கற்றுக் கொள்ளக் கூடாது என்று தடை போட்டேன். ஆனால், அவளோ, என் கண்டிப்பை எல்லாம் மீறி வயலின் கற்க ஸ்காலர்ஷிப் பெற்று விட்டாள். நான் அவளுக்குக் கடனாளியாகி விட்டேன்!'' என்று துக்கம் தொண்டையை அடைத்தது காமாட்சிக்கு.வயலின் வாசிக்க கூடாது என்று அத்தை தன்னை கண்டித்ததின் காரணம் இப்போது புரிந்தது வனிதாவுக்கு. வனிதா வயலினைப் புறக்கணித்தால், அவள் அப்பா கொடுத்த பணம் அத்தைக்கு உரிமையாகிவிடும் அப்படியொரு நியாயம் கற்பித்துக் கொண்டாள் காமாட்சி.லீலாவுக்கும் இப்போதுதான் புரிந்தது. திடீரென்று அப்பா இறந் ததும் தவித்துப் போன அம்மா, எப்படி நிமிர்ந்து நின்றாள் என்ற ரகசியம் தெரியவே வெட்கிப் போனாள்.''வனிதா! என்னை மன்னிச்சிடு. உன் பணத்தில வாழ்ந்த நான், உன்கிட்டே ரொம்பக் கேவலமா நடந்து கொண்டேன்!'' என்று கண் கலங்கினாள்.லீலாவின் கைகளை பற்றிக் கொண்ட வனிதா, ''அதெல்லாம் மறந்துடு லீலா. எனக்கு தான் ஸ்காலர்ஷிப் கிடைச்சிருக்கே... இனி எனக்கு எதுக்குப் பணம்?'' என்றாள்.கோஸ்வாமி தொண்டையை செருமிக் கொண்டு காமாட்சியிடம் கூறினார்.'காமாட்சியம்மா! நான் ஒரு யோசனை சொல்றேன். அதை ஏத்துக்கிட்டீங்கன்னா... உங்க தம்பிக்கு நீங்க செய்து கொடுத்த சத்தியம் பாதிக்கப்படாது. வனிதாவைப் பற்றிய கவலையும் இனி வேண்டாம் உங்களுக்கு!''''என்ன சொல்லுங்க...?'' என்பது போல கோஸ்வாமியை பார்த்தாள் காமாட்சி.''எங்களுக்குக் குழந்தை கிடையாது. என் மனைவிக்கு பெண் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். அதுவும் வனிதாவை அவளுக்கு ரொம்பப் பிடித்துப் போச்சு. அவளை வளர்க்கும் பொறுப்பை நாம் ஏத்துக்கலாம்னு சொல்றா. நீங்க என்ன சொல்றீங்க?''காமாட்சி ஒரு நிமிஷம் மவுனமாக இருந்தாள். பொறுப்பு விட்டது என்ற நிம்மதி அவள் முகத்தில் படருவதைக் கண்டார் கோஸ்வாமி.''நான் என் வக்கீலைக் கலந்து கொண்டு சட்டபூர்வமாக வனிதாவை எங்கள் குழந்தையாக்கிக் கொள்கிறோம். நான் பிறகு உங்களை வந்து சந்திக்கிறேன்!'' என்றார் கோஸ்வாமி.''அப்படியே செய்யுங்கள். என் தம்பிக்கு நான் துரோகம் செய்யவில்லை என்ற திருப்தியும் எனக்கு ஏற்படும்,'' என்றாள் காமாட்சி.''இப்போது வனிதா எங்களுடனேயே இருக்கட்டும்... என்ன வனிதா?'' என்று கேட்டு அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டார் கோஸ்வாமியின் மனைவி தாய்ப்பாசத்துடன். லீலாவுடன், காமாட்சி வெளியேறினாள்.கோஸ்வாமி இசையுலகில் வனிதாவை தன் வாரிசாக்கினார். வனிதா வயலினில் அப்பாவைப் போலவே புகழ்பெற்றாள். வெளிநாடுகளுக்கெல்லாம் போய் இசை நிகழ்ச்சி நடத்தி, 'வயலின் வனிதா!' என்று புகழ் பெற்றாள் வனிதா.வனிதா வெற்றி பெற்றதற்கு காரணம், அவளது விடாமுயற்சி, சகிப்பு தன்மை, இசையில் அவளுக்கிருந்த ஈடுபாடு.முற்றும்.