துன்பம் நேர்கையில்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியில், 1972ல், 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது, என் அண்ணன் இறந்தார். படிப்பில் போதிய கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டேன்; மனதில் சோகம் நிறைந்திருந்தது. தேர்வில் எல்லா பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் பெற்று கவலையில் வீழ்ந்தேன். இதைக் கண்ட வகுப்பு ஆசிரியை ரெஜினா, 'திட மனதுடன் இருந்தால், எல்லா கவலைகளையும் வெல்லலாம்; துன்பங்கள் விலகும்; கவலை நிரந்தரமானது அல்ல...' என்று ஆறுதல் கூறி தேற்றினார். அவரது அறிவுரையை ஏற்று, முழு கவனம் செலுத்தி படித்தேன். வாழ்வில் பல துன்பங்கள் வந்தன; அவற்றை எதிர்கொண்டு வென்றேன். எந்த துன்பமும் நிரந்தமில்லை என்பதை உணர்ந்தேன். துன்பம் வந்தபோதெல்லாம் கவலையில் துவண்டுவிடாமல், கவனத்தை வேறுபக்கம் திருப்பினேன். என் மகள்களை நன்கு படிக்க வைத்து, நல்ல பணியில் அமர உதவினேன்.எனக்கு, 62 வயதாகிறது; அந்த ஆசிரியையின் அறிவுரையை பின்பற்றி மிகழ்ச்சியாக வாழ்கிறேன்.- கீதா சுந்தரேசன், மதுரை.தொடர்புக்கு: 99767 41501