யார் இவர்!
''தம்பி, இன்று எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. உடம்பு சரியில்லை. ஆகையால், நான் வழக்கமாக பெரிய புராணம் சொல்லும் இடத்திற்கு உடனே நீ போ. அங்கு வந்திருப்பவர்களிடம், எனக்கு உடல் நலமில்லை என்பதை அறிவித்து விட்டு, பெரிய புராணத்திலிருந்து ஏதேனும் ஒன்றிரண்டு பாடல்களைப் படித்து விட்டு வா!'' என்று கூறித் தம்பியை அனுப்பி வைத்தார் அண்ணா.உடனே, புராணம் சொல்லும் இடத்திற்குத் தம்பி சென்றான். அங்கிருந்த கூட்டத்தாரிடம் அண்ணாவுக்கு உடல் நலமில்லை என்பதைத் தெரிவித்தான். பிறகு, இரண்டொரு பாடல்களை மிகவும் இனிமையாக, உருக்கமாகப் பாடினான். பாட்டைப் பதம் பிரித்து நன்றாகப் புரியும் படியாக அவன் பாடியது, அங்கிருந்தவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.உடனே அவர்கள், ''தம்பி, நீ பாடுவது நன்றாய் இருக்கிறது. இந்தப் பாடல்களுக்கு நீயே பொருள் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். சொல்வாயா?'' என்று கேட்டனர்.அவர்கள் விருப்பப்படியே, ஒரு பாடலை எடுத்து முதலில் அதன் பொருள் சொல்ல ஆரம்பித்தான். பெரிய, பெரிய அறிஞர்களால் கூட அவ்வளவு நன்றாக விளக்கிக் கூற முடியாது. அப்படி அருமையாகக் கூறினான் அந்தப் பையன். அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான். சபையோர் கேட்டுக் கொண்டே இருந்தனர். நேரம் போனதே தெரியவில்லை. இரவு பன்னிரெண்டு மணிக்குத்தான் பேச்சு முடிந்தது. ''தம்பி, இனி பெரிய புராணம் முடியும் வரை, நீங்களே வந்து சொல்லுங்கள். அண்ணாவிடம் நாங்கள் சொல்லிவிடுகிறோம்,'' என்று கூட்டத்திலிருந்து பலர் கூறினர். கூறியதோடு அல்லாமல், மறுநாளே அவனுடைய அண்ணாவைக் கண்டு நடந்ததை அறிவித்தனர். அத்துடன் தங்களுடைய விருப்பத்தையும் வெளியிட்டனர்.இதைக் கேட்டதும், அண்ணாவுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.'என்ன, நம் தம்பியா அப்படிச் சொல்கிறான்? ஒருவேளை... நாம் சொல்லுவதைக் கேட்டுக் கேட்டு, அப்படியே சொல்ல ஆரம்பித்து விட்டான் போல் இருக்கிறது!' என்று நினைத்தார். பிறகு, ''சரி, உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும். இனி அவனையே வரச் சொல்லுகிறேன்,'' என்றார்.அப்புறம் வாராவாரம் தம்பிதான் புராணம் சொல்லி வந்தான். அவன் திறமை சென்னை நகரம் முழுவதும் பரவியது. மூலை முடுக்கிலிருந்தெல்லாம் மக்கள் அங்கு வந்து அவனுடைய பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். இதை அறிந்த அண்ணாவுக்கு முதலில் நம்பிக்கை ஏற்படவில்லை. ஒருநாள் அவர் கூட்டம் நடக்கும் இடத்திற்கு மெதுவாக வந்தார். மறைவாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தம்பியின் பேச்சை உற்றுக் கேட்டார். கேட்க, கேட்க அவரது மகிழ்ச்சி பெருகியது. அப்படியே பரவசமாகிவிட்டார்.'இப்படிப் பட்ட தம்பி கிடைத்ததே, நாம் செய்த தவப்பயன்தான்!' என்று நினைத்துப் பூரிப்பு அடைந்தார்.இப்படிக் கூட்டத்தாரையும், கூடப் பிறந்த அண்ணனையும் வியப்படையச் செய்த அந்தத் தம்பி யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? ஒரு சின்ன க்ளூ. ஜோதியைப் பற்றி பாடியவர் இவர்தான். விடை: அருட்பெருஞ்சோதி, அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி என்ற பாடலை பாடிய அந்த தம்பி தான் இராமலிங்க அடிகளார்.