உள்ளூர் செய்திகள்

யார் இவர்?

அப்பா செருப்புத் தைப்பவர். அம்மா துணி வெளுப்பவள். அவர்களுக்கு ஒரு பையன். அவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காகப் போக மாட்டான். அப்படியே போனாலும் பாடங்களைச் சரியாகக் கவனிக்க மாட்டான். எப்போதும், ஏதாவது கனவு கண்டுகொண்டேயிருப்பான்.அவன் அப்பாவுக்கு அவனிடத்திலே பிரியம் அதிகம். அவர் அவனுக்குப் பொம்மை நாடக மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார். அதில், அந்தப் பையன் சில பொம்மைகளை நிறுத்தி வைப்பான். சும்மா நிறுத்தி வைக்க மாட்டான்; அலங்காரமான உடுப்புகளுடனே நிறுத்தி வைப்பான்; தையற்கடைகளில் கிடைக்கும் துண்டுத் துணிகளைக் கொண்டே மேல் சட்டை, கால் சாட்டை, தொப்பி முதலியவற்றைத் தயார் செய்து பொம்மைகளுக்குப் போடுவான்.அவன் தயாரிக்கும் உடைகள் மிகவும் அழகாயிருக்கும். அவனுடைய தையல் வேலையைப் பார்த்து, 'நம்முடைய மகன் பெரியவனானதும், பெரிய தையற்காரன் ஆகிவிடுவான்' என்று அம்மா நினைத்தாள். ஆனால் அவள் நினைத்தபடி நடக்க வில்லை.அந்தப் பையன் பொம்மைகளை வைத்துத் தினமும் நாடகம் நடத்துவான். மேடையில் நிற்கும் பொம்மைகள் ஒவ்வொன்றையும் ஒரு நடிகராக நினைத்துக் கொள்வான். அந்த நடிகர்களுக்குத் தகுந்த படி நாடகம் வேண்டாமா? உடனே, அவன் தானாகவே கற்பனை செய்து நாடகம் தயாரிப்பான். பொம்மை நடிகர்கள் ஒவ்வொருவரும் நடிப்பது போலக் கனவு காண்பான்.இந்தப் பழக்கம் வளர்ந்து கொண்டே வந்தது. கொஞ்சகாலம் சென்றதும், கதைகள், நாடகங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை அவனுக்கு உண்டாயிற்று. அவன் பல கதைகள் எழுதினான். நாடகங்கள் எழுதினான். அவை எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. ஆனாலும் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருந்தன.'பள்ளிக் கூடத்தில் சரியாகப் படிக்காமல் போனோமே!' என்று அப்போது அவன் வருந்தினான். ஆனாலும் முயற்சியை விடவில்லை. நாளடைவில் தவறு இல்லாமல் எழுதக் கற்றுக் கொண்டு விட்டான்.அவன் குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் பல. அந்தக் கதைகளைப் படித்துப் படித்து குழந்தைகள் ஆனந்தமடைய வேண்டும் என்பதுதான் அவனது ஆசை. அந்த ஆசை வீண் போகவில்லை. அவன் பிறந்த டென்மார்க் தேசத்துக் குழந்தைகள் மட்டுமல்ல, உலகத்திலுள்ள பல தேசத்துக் குழந்தைகளும் அவனுடைய கதைகளைப் படித்து ஆனந்தம் அடைகின்றனர்.விடை: சிறுவர்களுக்கென கதைகளை எழுதியது ஹான்ஸ் கிறிஸ்டின் ஆண்டர்சன் என்பவர்தான் இவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !