உள்ளூர் செய்திகள்

உழைப்பும் மகிழ்வும்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி, சுவாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2012ல், 7ம் வகுப்பில் படித்தேன். அப்போது ஓவியம் ஒரு பாடமாக அமைந்திருந்தது.ஓவிய ஆசிரியர் அன்பு செல்வன், உலக சாதனை செய்தவர்; ஓவிய நுணுக்கங்களை கற்பித்து சாதனைக்கு துாண்டிவந்தார். அவரது வகுப்பறை எப்போதும் கலகலப்பாக கலை உணர்வுடன் மிளிரும். அதற்காக ஆவலுடன் காத்திருப்போம்.மாணவ, மாணவியர் வரையும் ஓவியங்களை, சிறுவர்மலர் இதழுக்கு அனுப்புவார். ஓவியத்தில் உலக சாதனை படைத்தவர்கள் பற்றி கூறினார். ஆவலுடன் எழுந்து, 'நானும் இது போல சாதனை செய்ய இயலுமா...' என்றேன். நம்பிக்கை ஊட்டும் வகையில், 'விடாமுயற்சியும், ஈடுபாடும், உழைப்பும் இருந்தால் முடியும்...' என்றார்.தொடர்ந்து, கவனமுடன் பயிற்சி பெற்றேன். கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காலத்தில், 148 அடி நீளத்தில் ஓவியம் வரைந்து, பழனி அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தி இருந்தேன். அதை படத்துடன் செய்தியாக வெளியிட்டு பெருமைப்படுத்தியது, தினமலர் நாளிதழ். என் சாதனைக்காக, 'எலைட் வேல்டு ரெக்கார்டு' என்ற அமைப்பு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தது.என் வயது, 21; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஓவியத்தில் ஆர்வம் ஏற்படுத்தி சாதனை படைக்க துாண்டிய ஆந்த ஆசிரியரை, மனதில் வரைந்து தொழுகிறேன்.- சோபியா ஜெயக்குமார், திண்டுக்கல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !