உள்ளூர் செய்திகள்

நினைவலைகள்

கோவையில் நடந்த கொடூரம்

கோவையில் பணத்துக்காக பள்ளிக்குழந்தைகள் இருவர், கடத்தி கொலை செய்யப்பட்டது தமிழக மக்களை சோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியது. ரஞ்சித்குமார் ஜெயின் - சங்கீதா தம்பதியரின் மகள் முஸ்கன் (10), மகன் ரித்திக் (7) ஆகிய இருவரும் ஐந்து மற்றும் மூன்றாம் வகுப்பு படித்து வந்தனர். எப்போதும் 'சூர்யா கேப்ஸ்' கால் டாக்சியில் பள்ளிக்குசெல்வது வழக்கம். இவர்களது வீடு சந்துப்பகுதியில் உள்ளதால் மெயின் ரோட்டுக்கு வந்துதான் வேனில் ஏறவேண்டும்.

அக்., 29 அன்று மதிய உணவுடன் முஸ்கின் இருவரையும் பெற்றோர் அனுப்பி வைத்துள்ளனர். குழந்தைகள் சென்ற சிறிது நேரத்தில் வழக்கமாக வரும் கால் டாக்சி டிரைவர் கார்த்திக், குழந்தை களின் பெற்றோர் ரஞ்சித்குமாரை போனில் தொடர்பு கொண்டு வெகுநேரம் காத்துக்கொண்டிருக்கின்றேன். குழந்தைகளை சீக்கிரமாக அனுப்பி வையுங்கள்' என்று கூறினார். இதைக் கேட்ட பெற்றோர் 'குழந்தைகள் அப்போதே புறப்பட்டுச் சென்றனரே, வரவில்லையா?' எனக் கேட்டனர். வரவில்லை என்று பதிலளித்தார் டிரைவர். பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். வழக்கமாக செல்லும் வேனில் இல்லாமல் குழந்தைகள் வேறு வேனில் சென்றுள்ளனர் என்பதை உணர்ந்த பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதற்கிடையில் குழந்தைகள் இருவரும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். குழந்தைகளை கடத்திய டிரைவர் மோகன்ராஜை போலீசார் பிடித்தனர். விசாரணையில் பணத்துக்காக குழந்தைகளை கடத்தியதும், பிடிபட்டு விடுவோம் என நினைத்து இரண்டு குழந்தைகளையும் தண்ணீரில் தள்ளி கொன்றதும் தெரியவந்தது. முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற செய்தி மக்களைசோகத்திலும் கோபத்திலும் ஆழ்த்தியது. கடத்தலில் ஈடுபட்டவரை உடனே தூக்கில் போடவேண்டும் என்று மக்கள் கொந்தளித்தனர். விசாரணைக்காக மோகன்ராஜை போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாரின் துப்பாக்கியை மோகன்ராஜ் பறித்து அவர்கள் மீது சுட ஆரம்பித்தார். சுதாரித்துக்கொண்ட போலீசார், என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். மக்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நிம்மதி அளித்த அயோத்தி தீர்ப்பு

'அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை மூன்றாக பிரித்து, வழக்கில் சம்பந்தப்பட்ட மூவருக்கு, ஆளுக்கு ஒரு பங்கு வீதம் பிரித்துக் கொடுக்க வேண்டும்' என்று செப்., 30ல், அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த அயோத்தி வழக்கின் தீர்ப்பை, நாடே அதிக எதிர்பார்ப்புகளுடனும், பரபரப்புடனும் எதிர்பார்த்தது. நீதிபதிகள் தரம்வீர் சர்மா, சுதிர் அகர்வால் மற்றும் சிப்காட் உல்லா கான் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்ச் இத்தீர்ப்பை வழங்கியது. ஒவ்வொரு நீதிபதியும் தனித்தனி தீர்ப்பு வெளியிட்ட போதும், நீதிபதிகள் சிப்காட் உல்லா கான் மற்றும் சுதிர் அகர்வால் ஆகியோர் கூறிய தீர்ப்பில், 'இன்று ராமர் சிலை வழிபடும் இடம் இந்துக்களுக்கு சொந்தம்' என்று இடம்பெற்றிருந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் இடத்தை, மூன்று பாகமாக பிரித்து, ஒரு பாகத்தை, 'நிர்மோகி அகாரா' என்ற அயோத்தியில் நீண்டகாலமாக உள்ள சாமியார்கள் அடங்கிய குழுவுக்கும், இன்னொரு பங்கை சன்னி வக்பு வாரியத்திற்கும் (முஸ்லிம்), மற்றொரு பங்கை, 'ராம் லாலா விராஜ்மான்' என்ற ராமர் சிலை வழிபடும் இடத்தை வைத்திருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். இடத்தை பிரித்து அளிக்கும்போது, தற்போது ராமர் சிலை உள்ள இடத்தையே இந்துக்களுக்கு ஒதுக்கவேண்டும். இடத்தை பகிர்வு செய்யும் பணியை 3 மாதங்கள் கழித்தே துவக்க வேண்டும். அதுவரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும். பிரச்னைக்குரிய இடம், ராமர் பிறந்த ஜென்மபூமி என்று நீதிபதிகள் மூவரும் தீர்ப்பில் தெரிவித்தனர்.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

* பிரச்னைக்குரிய இடம் ராமர் பிறந்த இடம் தான்.* பிரச்னைக்குரிய கட்டடத்தில் இஸ்லா மியர்கள் தொழுகை நடத்தவில்லை. அந்த இடத்தை மசூதி என கருதமுடியாது.* ராமர் சிலை உள்ள இடத்தை இந்துக் களுக்கு ஒதுக்க வேண்டும். தீர்ப்பை பலரும் வரவேற்றனர். ஆனால் சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, இந்து மகா சபை ஆகிய மூன்று அமைப்புகளும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

காஷ்மீர் கலவரம்: தீராத பிரச்னை

இந்தியாவின் ஆறாவது பெரிய மாநிலமான காஷ்மீர் இயற்கையின் எழில் கொஞ்சும் பகுதியாக இருந்தும் அமைதியான வாழ்க்கைக்கு மட்டும் எப்போதும் பஞ்சமாக உள்ளது. காஷ்மீர் பாக்., சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இம்மாநிலத்தில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்திய - பாக்., பிரிவினை முதல் பாகிஸ்தானும் இந்த பகுதியை அபகரிக்க திட்டமிட்டுவருகிறது. ஜூன் 20ல், காஷ்மீரின் சோபூரில் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு இளைஞர் பலியானார். காஷ்மீர் ராணுவத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த பிரச்னைதான் தொடர் கலவரத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பெரும்பாலான மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருந்தது. பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் தொடர்ந்து காஷ்மீருக்குள் ஊடுருவி வன்முறைக்கு தூண்டுகின்றன. ஹூரியத் மாநாட்டு கட்சி தலைவர் சையத் கிலானி உள்ளிட்ட காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் பிரச்னையை தூண்டிவிடுவதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. மூன்று மாதத்துக்கு மேல் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தால் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாகினர். கல்வி நிறுவனர்கள் பாதிக்கப்பட்டன. பிரச்னை தீவிரமடைந்ததை தொடர்ந்து மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மத்திய அரசின் கவனத்துக்கு இப்பிரச்னையை கொண்டு சென்றார். காஷ்மீர் பிரச்னை பற்றிய நிலவரத்தை அறிய அனைத்துக்கட்சி தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான இக்குழு மூன்று நாள் பயணமாக செப்., 20 அன்று காஷ்மீர் சென்றது. காஷ்மீர் மக்கள், பிரிவினைவாத தலைவர்கள் என அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இக்குழு தனது அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்தது. இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கு 8 அம்ச சிறப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார். இதனையடுத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்து காஷ்மீரில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு மாமூலாகி விட்டது. தற்போது மத்திய அரசு பத்திரிகையாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைத்துள்ளது. இக்குழு அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !