உள்ளூர் செய்திகள்

எதிர்மறை கேள்வி எனும் புதிய உத்தி!

'உங்களுக்கென்ன சார் குறைச்சல்... பெரிய கல்லூரியில வேலை பாக்குறீங்க; கை நிறையச் சம்பளம்...' - ஒருவர்.'எங்க கல்லூரியை நீங்க தான் மெச்சிக்கணும்; எனக்குத் தான் தெரியும், அங்கே நான் படுற வேதனை...' - சம்பந்தப்பட்டவர்.'காலேஜா அது... சரியான அடிமை கூட்டம். வெளியில சொல்லிக்காதீங்க, நீங்க அங்கே வேலை பார்க்குறேன்னு! அசிங்கம்...' - மற்றவர்.'தயவு செய்து எங்க காலேஜ பத்தி, மட்டமா பேசாதீங்க; அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன்...' - சம்பந்தப்பட்டவர்.கேள்வியை புரட்டி போட்டால், ஒரே மனிதரிடமிருந்து வரும் பதில், எப்படி உருமாறுகிறது பார்த்தீங்களா?'பொருளாதாரத்துல நீ எங்கேயோ இருக்கே; நான் எங்கேயோ இருக்கேன்...' - நண்பன்.'ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம். உள்ளே இருக்குமாம், ஈறும் பேனும்பாங்களே அந்த கதை தான் என் கதை... எனக்கு எவ்வளவு கடன் இருக்கு தெரியுமா? - சம்பந்தப்பட்டவர்.'வீடு கட்ட கடன் வாங்கிட்டு, கட்ட முடியாம, ரொம்ப கஷ்டப்படுறீங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த வீட்டை, நீ பணம் வர வர முடிச்சிருக்கணும்; இப்படியா ஒரேயடியா கட்டடத்துல போட்டுட்டு சிரமப்படுறது?' - இன்னொரு நண்பர்.'அதெல்லாம் சும்மா பாவ்லா... என் வீடு மதிப்பு எவ்வளவு உயர்ந்து போச்சு தெரியும்ல; கடனெல்லாம் இன்னும் ஒரு வருஷத்துக்குத் தான். அப்புறம் ஐயா தான் கிங்கு...' - சம்பந்தப்பட்டவர்.இப்படி, கேள்விகளை எதிர்மறையாக கேட்டால், சாதகமாக பேசுகிற மனித சுபாவத்திற்கு, என்னால் இன்னும் பல உதாரணங்களை அடுக்க முடியும்; போதும் எனக் கருதுகிறேன்.கேட்ட கேள்விக்கு, எதிர்மறையாக பதில் சொல்லும் மனித சுபாவத்தை, சாதகமாக பயன்படுத்திக் கொள்ள செய்வதே, இக்கட்டுரையின் நோக்கம்.'உங்க வீட்ல தங்கிக்குறேன்...' என்று நாம் தீர்ப்பு எழுதக் கூடாது. 'உங்க வீட்ல தங்கலாமான்னு யோசிச்சேன்; அப்புறம், உங்களுக்கு ரொம்ப சிரமம்ன்னு தோணுச்சு. சரி... வேற ஏதாச்சும் ஏற்பாடு செய்துக்கலாம்ன்னு பார்த்தேன்...' என்று வார்த்தைகளை இழுக்க வேண்டும்.விருப்பத்தையும் தெரிவித்து, தயக்கத்தையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்தினால், 'நீங்க வேற... வாங்க எங்க வீட்டுக்கு! கடலாட்டம் இருக்கு வீடு. வெளியில தங்குறதாவது... சரியா போச்சு போங்க...' என்கிற நாம் விரும்புகிற, பதிலை வரவழைப்பது, நம் அணுகுமுறையில் தான்!'எனக்கு இடைஞ்சலா, இல்லையா என்பதை, நான் தான் முடிவு செய்ய வேண்டும்; நீ அல்ல...' என்கிற ஆதிக்க ரேகை, மனிதனின் மனதிற்குள் ஓடுகிறது. இதை பயன்படுத்த தவறும் போது தான், பதில் நமக்கு எதிராக அமைந்து விடுகிறது.'உங்களை போன்றவர்களை, போன்ல அழைக்கலாமா... மரியாதை இல்லைல்ல; நேர்ல வர்றேன்...''அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... தபால்லயே அழைப்பை அனுப்புங்க; கண்டிப்பா வந்துடுறேன்...'எதிர்மறை கேள்வியை போட்டு, சாதக பதிலை வாங்கினோம் அல்லவா... இவரிடம் எப்படிப்பட்ட அணுகுமுறை செல்லாது என்று பார்ப்போமா!'சார்... நான் கொஞ்சம் பிசி! தபால்ல அழைப்பு அனுப்புறேன்; வந்துடுங்க...''நானும் பிசி தான்; முயற்சி செய்றேன்...' ஆசாமி வரவே மாட்டார்!இந்த எதிர்மறை அணுகுமுறையில், கடனுக்கு எப்படி அணுகுவது என்றும் பார்த்து விடுவோமா?'நட்பு நட்பா இருக்கணும்; இதை விண்ணப்பமா ஆக்குறது தப்புன்னு தோணுது. என்ன தேவைன்னாலும், உங்ககிட்டே எதுக்குமே வந்து நிக்கக்கூடாதுன்னு உள்மனசு சொல்லுது...''அட நீங்க வேற... கேட்டா குடுத்துட்டு போறேன். நட்புங்குறது எதுக்கு; ஒருத்தருக் கொருத்தர் உதவியா இருக்க தானே... அப்பறம் நண்பர்ன்னு சொல்லிக்கிறதுல அர்த்தமே இல்லையே...' வாய்யா வா... வகையா சிக்கினே!மாற்று அணுகுமுறையை பார்ப்போமா...'எனக்கு கொஞ்சம் பணம் தேவை. காரணம் சொல்லாம, சாக்கு போக்கு காட்டாம, நான் சொல்லப் போற விஷயத்துல, கண்டிப்பா எனக்கு உதவுறீங்க. என்ன?''அட நீங்க வேற... நானே கஷ்டத்துல இருக்கேன். வேற ஏதாச்சும் விஷயம்ன்னா சொல்லுங்க; பேசுவோம்!'நெருப்பு துண்டை கையில் கொடுக்கும் யோசனைகளை விட்டு விட்டு, இனி, ஐஸ்கிரீம்களை நீட்டி பார்ப்போம். அணுகுமுறைகளை மாற்றினால் போதும்; அனைவரும் இறங்கி வருவர்.லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !