காசிக்கு ஒரு டிக்கெட்
சாலையில், காய்கறி வண்டிக்காரரிடம், காய்கள் வாங்கி திரும்பியவளிடம், ''வசந்தா மாமி... அமெரிக்கா போகப் போறீங்களாமே...''வியப்போடு கேட்டாள், எதிர் வீட்டு சிறுமி. பள்ளியில் படிக்கும் அவளுக்கு தெரியும், வசந்தா, வளசரவாக்கம் தாண்டியதில்லை என்று!''ஆமாம் குழந்தே... அமெரிக்காவுல இருக்கற என் சின்ன மகன் வரச் சொல்லி இருக்கான்; டிக்கெட் எல்லாம் கூட வாங்கி அனுப்பிட்டான்; அடுத்த வாரம் போறேன். இதுவரை, மும்பைக்கு கூட போனதில்ல; இப்ப, அமெரிக்காவுல இருக்கற பாஸ்டனுக்கு போகணும்ன்னா, பயமா தான் இருக்கு. ஆனா, பையன் ஆசையா கூப்பிடறான். பாஸ்போர்ட், விசா எல்லாம் ஏற்பாடு செய்துட்டான்,'' என்றாள், மகிழ்ச்சியுடன்!அப்போது அங்கு வந்த சிறுமியின் பாட்டி மீனாட்சியம்மாள், ''வசந்தா... உனக்கு தான் யாரையும் விட்டுக் கொடுக்க தெரியாதே! ஆனாலும், உன் சின்ன மகனுக்கு இப்பத்தான் உன் ஞாபகம் வந்ததாக்கும்... நானும் எதிர் வீட்டுக்கு குடிவந்து எட்டு வருஷமாச்சு; ஒருமுறை கூட, உன் மகனை, பாத்ததே இல்ல...'' என்று சொல்லவும் வசந்தாவிற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.அவர் சொல்வது போல், அமெரிக்கா போன எட்டு ஆண்டுகளில், ஒருமுறை கூட அவன் இந்தியாவிற்கு வரவுமில்லை; போன் செய்து, அம்மாவிடம் பேசியதும் இல்லை. அங்கேயே, குஜராத்தி பெண்ணை மணந்ததை மட்டும், மூத்தவன் கணேசன் மூலம் தெரிந்து கொண்டாள், வசந்தா. அதையே தினம் நான்கு முறை குத்திக் காட்டி, மாமியாரை சீண்டுவாள் கணேசனின் மனைவி, ராதிகா.'மாமனாரும் மண்டையப் போட்டுட்டார். இருக்கிறது ரெண்டு ஆம்பிளைங்க; மாமியார்காரிய வச்சிக்கிற பொறுப்பு, பாதியாய் கழியும்ன்னு நினைச்சு, உங்க பிள்ளைக்கு கழுத்தை நீட்டினேன்; ஆனா, உங்க சின்ன மகன், படிக்கறதுக்காக, 'பாரீன்' போய், அங்கேயே வேலை கிடைத்து, அப்படியே குஜராத்திக்காரிய கல்யாணமும் செய்துக்கிட்டு, நைசா, உங்கள எங்க தலையில கட்டிட்டார்...' என்று நீட்டி முழக்குவாள், ராதிகா.இத்தனைக்கும், வசந்தாவால், ராதிகாவுக்கு எந்த தொல்லையுமில்லை. 60 வயதுக்கு, 20 வயது பெண்ணைப் போல் வீட்டு வேலைகள் எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்வாள். பேரக் குழந்தைகளை பார்த்துக் கொள்வாள்; அதிர்ந்து பேச மாட்டாள்; தப்பித்தவறி, எங்காவது ஸ்தல யாத்திரை போகத் தோன்றினால் கூட, அதை, மீனாட்சியம்மாவிடம் மட்டும் சொல்வாளே ஒழிய, மருமகளிடம் சொல்லும் துணிச்சல் வந்ததில்லை.கணேசன், சுபாவத்திலேயே சாது. மனைவியை அடக்கவும் தெரியாமல், அம்மாவை விட்டுக் கொடுக்கவும் முடியாமல், திண்டாடும் போது, தானே, பணிந்து விடுவாள் வசந்தா.எல்லா விவரங்களும் மீனாட்சியம்மாவுக்கு தெரியும் என்பதால், உரிமையுடன் அப்படி கேட்டு, வசந்தாவின் முகத்தை பார்த்தாள்.தர்மசங்கடமாக புன்னகை சிந்தி, ''உங்க காசி பயணம், எப்படி இருந்ததும்மா...'' என்று பேச்சை மாற்றினாள், வசந்தா.உடனே, மீனாட்சியம்மாவின் முகம் மலர்ந்து, ''ஆஹா... நான் மட்டும் எழுத்தாளராயிருந்தா, காசிக்கு போயிட்டு வந்ததை பெரிய கதையாவே எழுதிடுவேன். அங்க எல்லாம் போகணும்ன்னா அதுக்கு வேளை வரணும். எனக்கு இந்த, 75 வயசுல தான் அந்த கொடுப்பினை கிடைச்சிருக்கு.''காசி மாதிரி, புண்ணிய ஷேத்திரம், இந்தியாவுலயே வேறெங்குமில்ல. அங்க, கருடன் பறக்காது; பல்லி கத்தாது; மாடு முட்டாது; பூக்கள் மணக்காது; எத்தனை பிணம் எரிந்தாலும் நாறாது... பக்தியை கடந்து, புவி இயல், மண்ணியல் என்று சொல்றபடி பார்த்தா, அந்த நிலம், ஏதோ தனித்துவமாக இருக்கணும்ன்னு தான் தோணுது. இல்லாட்டா, வடக்கிலிருந்து தெற்கு பக்கமா இறங்கி, கிழக்கில் பாய்ற கங்கை, காசியில மட்டும், வடக்கு நோக்கி பாய்கிற சிறப்பு எப்படி அமையும்... மனுஷங்களா பிறந்த ஒவ்வொருத்தரும் காசிக்கு போய், கங்கையில நீராடணும்,'' என்று, மீனாட்சியம்மாள் முடித்த போது, வசந்தாவின் மனம், காசிக்கு போய் விட்டது.''அமெரிக்காவுக்கு போய்ட்டு வந்ததும், காசிக்கு போகப் போறேன்,'' என்றாள் பரவசமான குரலில்!''ஆமா... நீ ஆசைப்பட்டதும், அந்தக் கணமே நிறைவேறிடும் பாரு... உன் மருமக, சரியான பொம்பிளை ஹிட்லர்; இந்த தெருவே அவளைப் பார்த்து நடுங்குது. வாயில்லாப் பூச்சியான உன்னை, அவள் வதைக்கிறது எனக்கு தெரியாதா என்ன...''எப்படியோ, உன் சின்ன மகன் மனம் திருந்தி, உன்னை கூப்பிடுறானே... அதுவே சந்தோஷம். இந்த நரகத்திலேருந்து உனக்கு ஆறு மாசத்துக்கு விடுதலை. அமெரிக்கா, குபேர தேசமாம்... போய், சந்தோஷமாய் இருந்துட்டு வா.''அவரது ஆறுதல் வார்த்தையில், வசந்தாவிற்கு கண்கள் பனித்தது.அமெரிக்கா செல்லும் நாள் வந்தது.பாஸ்போர்ட், விசா எல்லாவற்றையும் சரி பார்த்த கணேசன், வசந்தாவிடம் வந்து தயங்கி நின்றவன், ''அம்மா... உன்னை, ஏர்போர்ட் வரை வந்து வழி அனுப்பணும்ன்னு தான் இருந்தேன். ஆனா, ஆபீசுல என்னை திடீர்ன்னு வேலை விஷயமா மதுரைக்கு போகச் சொல்லிட்டாங்க. இதை தட்டிக் கழிச்சிட்டேன்னா, என் புரமோஷனையே பாதிக்கும். அதனால, ராதிகாவோட ஒண்ணு விட்ட தம்பி முரளி வருவான்; அவன் பத்திரமா உன்னை வழியனுப்புவான்; சரியாம்மா...'' என்றான்.மவுனமாய் தலையாட்டினாள்.அதற்குள், ''போதுமே... என்னவோ உங்கம்மா சந்திர மண்டலத்துக்கு தனியா போற மாதிரி இல்ல மூஞ்சிய எட்டு முழத்துக்கு தூக்கி வச்சுருக்கீங்க... 80 வயசுக் கிழவிக கூட தனியா அமெரிக்கா போறாங்க... உங்கம்மாவுக்கு என்ன...'' என்று ராதிகா கூறியதும், அதற்குமேல் வாயை திறக்கவே, பயந்து போனான் கணேசன்.மொபைல் போனில் பேசியபடியே வீட்டிற்கு வந்த முரளி, ''மாமி... புறப்படலாமா...'' என்றான்.வாசலில், 'டாக்சி' வந்து நின்றது.''வரேன்ம்மா ராதிகா... குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், பாட்டி, அவங்களை பிரிய மனசில்லாம அமெரிக்கா போறான்னு சொல்லிடு; எப்படித்தான் இந்தப் பிள்ளைங்கள விட்டுட்டு, ஆறு மாசம் இருக்கப் போறேனோ...'' தேம்பினாள் வசந்தா.''நீங்க ஒண்ணும் கவலைப்பட வேணாம்; ராமாயணம், மகாபாரதம்ன்னு கதை சொல்லியே கழுத்தை அறுக்கிற பாட்டி கிளம்பிட்டான்னு, அதுக, குஷியா தான் இருக்கும். அமெரிக்காவுல இருந்து திரும்பும் போது, அதுகளை ஞாபகம் வச்சு, 'ஐ பேடு' அது, இதுன்னு எல்லாம் வாங்கிட்டு வாங்க,'' என்றாள், ராதிகா.டாக்சி ஏர்போர்ட்டுக்கு வரும் வரை, போனில் யாருடனோ பேசியபடி வந்தான் முரளி. அவன் பேசுவதை நிறுத்திய போது, ''முரளி... ஒண்ணும் பயமில்லயே... இதுவரை பிளேன்ல ஏறினதே இல்ல. இப்ப தனியா வேற போறேன்; சுமாரா இங்கிலீஷ் வரும்ன்னாலும், அன்னிய தேசத்துக்கு போகப் போறத நினைச்சா, படபடப்பா இருக்கு,'' என்றாள் வசந்தா.''அதெல்லாம் ஒண்ணும் பயப்படாதீங்க மாமி. பாரீன்ல இதம் பதமா நாகரிகமாக நடந்துக்குவாங்க,'' என்றவன், ''மாமி... உங்க சின்ன மகன் எதுக்கு உங்கள கூப்பிடறான்னு தெரியுமா...'' என்று கேட்டான்.பெருமையுடன், ''அம்மாவப் பாத்து நாளாச்சே... நம்மளால தான் இந்தியாவுக்கு போக முடியல; அம்மாவையாவது வரச் சொல்லலாம்ன்னு கூப்பிட்டுருக்கான்னு நினைக்கிறேன்,'' என்றாள் வசந்தா.கைகளை தட்டி ஆர்ப்பாட்டமாக சிரித்தான் முரளி.''ஏன்ப்பா சிரிக்கறே?''''பின்ன என்ன மாமி... இவ்ளோ வெகுளியாவா இருப்பீங்க... அவன் ஒண்ணும் உங்கள பாக்குறதுக்காக கூப்பிடல. உங்க சின்ன மருமக நிறை மாசம்; 'டெலிவரி' ஆனதும், குழந்தையை பாத்துக்கணுமில்ல அதுக்குத் தான் உங்கள கூப்பிடுறான். அங்கெல்லாம், இதுக்கு வேலைக்கு ஆள் போட்டா, நிறைய சம்பளம் தரணும்; அதோட, வர்றவ, குழந்தையை மட்டும் தான் பாத்துப்பா. ஆனா, நீங்க போனா, சமையல், வீட்டு வேலை என, எல்லாத்தையும் சேர்த்து செய்வீங்க. அதான், கணக்கு போட்டு பாத்து, வெறும், 'டிக்கெட்' செலவை மட்டும் செய்தா போதும்; மத்தபடி, உங்களால் அவங்களுக்கு பல, 'டாலர்'கள் மிச்சமாகும்ன்னு கணேசன் கிட்ட சொல்லி இருக்கான்,'' என்றான்.இதைக் கேட்டதும் பிரமை பிடித்தவள் மாதிரி ஆனாள், வசந்தா.அதற்குள் ஏர்போர்ட் வந்து விட்டது. அப்போது, முரளிக்கு மொபைல் அழைப்பு வர, போனில் பேசியபடியே கார் கதவை திறந்தவன், ''மாமி இறங்கிக்கங்க; என் பிரண்ட் ஒருத்தியின் அப்பாவுக்கு, நெஞ்சு வலியாம்; ஆஸ்பத்திரியில சேக்கணுமாம்; என்னை உடனே வரச் சொல்லி அழறா. நான் இந்தக் கார்லயே போயிடுறேன்; நீங்க பெட்டியை எடுத்துட்டு, நேரா உள்ளே போங்க. அங்க இருக்கறவங்க உதவி செய்வாங்க. சாரி மாமி; நான் வர்றேன்,'' என்று சொல்லி, பெட்டியை இறக்கி, கீழே வைத்துவிட்டு, காரில் ஏறி சென்று விட்டான்.வசந்தாவிற்கு, கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.'முரளி சொல்றது நிஜமா... அதுசரி அவன் எதுக்கு பொய் சொல்லப் போறான்... அப்படின்னா, என் மகன் என்னை பார்ப்பதற்காக அழைக்கல; வீட்டு வேலை செய்யத் தான் கூப்பிட்டுருக்கான்...' என நினைத்த போது, மனம் வலித்தது.''ட்ராலியில, லக்கேஜை வச்சிட்டு, உள்ளே போங்கம்மா...'' விமான பணியாள், 'ட்ராலி' ஒன்றை கொண்டு வந்து, அவள் முன் நிறுத்தினான்.நடைபிணமாய் உள்ளே நுழைந்தவள், வாயிலில் நின்றிருந்தவரிடம் அனிச்சையாய், கையிலிருந்த பாஸ்போர்ட், டிக்கெட்டுகளை காண்பித்தாள். 'ட்ராலி'யை தள்ளியவாறு, 'திருதிரு'வென விழித்தபடி நடந்தவளிடம், எந்த கவுன்ட்டருக்கு செல்ல வேண்டும் என, வழிகாட்டினார், ஒருவர்.சுற்றுமுற்றும் பார்த்து, அங்கிருந்த நாற்காலியில், சோர்வாக அமர்ந்தாள். பரபரப்பாக பயணிகள் அங்குமிங்கும் நடந்தபடி இருந்தனர்.சில நிமிடங்கள் சென்ற நிலையில், அமெரிக்கா செல்ல வேண்டிய, 'ஏர்வேஸ்' நிறுவனத்திலிருந்து, 'மைக்'கில் ஓர் அறிவிப்பு வெளியாகியது...'கார் விபத்தில் உயிருக்கு போராடும் மகளை பார்ப்பதற்காக அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகருக்கு ஒருவர் செல்ல வேண்டும். யாரேனும் தன், 'டிக்கெட்'டை ரத்து செய்தால், அந்த டிக்கெட்டில், அவர் பயணம் செய்ய இயலும்; அதற்கான இழப்பீடு தொகை அளிக்கப்படும். இது வேண்டுகோள்...' என்றதும், சட்டென்று, தன் டிக்கெட்டை எடுத்து, அறிவிப்பு வந்த இடத்திற்கு சென்றாள் வசந்தா.பேச்சு வார்த்தைகள் முடிந்த பின், ''உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலம்மா... என் மகளை, கடைசியா பாக்க, நீங்க ஒரு வாய்ப்பு கொடுத்துட்டீங்க. ஒருவேளை, இந்த அப்பா முகம் பாத்து, என் மகள் உயிர் பிழைச்சா, அதுக்கும், நீங்க தான் காரணம். சமயத்தில் நீங்க செய்த இந்த உதவிக்கு சன்மானமா, இந்த தொகைய வாங்கிக்கணும்,'' என்று, ரூபாய் நோட்டுகள் அடங்கிய கவரை, அந்த நபர் நீட்டவும், திடுக்கிட்டு, ''வேணாங்க; ஏர்வேஸ்காரங்க இழப்பீடு கொடுக்கிறாங்க,'' என்றாள் வசந்தா.''அதிருக்கட்டும்மா... இது, ஒரு சகோதரனா நான் தரும் அன்பளிப்பு,'' என்று, நா தழுதழுக்க அவர் சொல்லவும், வசந்தாவால் தட்ட முடியவில்லை.பெட்டியுடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தாள். மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது.'அதனால் என்ன... மனசு தான் வெளிச்சத்திற்கு வந்து விட்டதே...' என நினைத்தபடி, ஆட்டோ ஒன்றில், பெட்டியுடன் ஏறி, சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தாள்.பயணிகளுடன் டிக்கெட் வாங்கும், 'க்யூ'வில் நின்றாள்.''எங்கம்மா போகணும்...'' என, கவுன்ட்டருக்குள்ளிருந்து குரல் கேட்கவும், ''காசிக்கு ஒரு டிக்கெட்,'' என்றாள் கம்பீரமாக வசந்தா!- ஷைலஜா