சாண்டோ சின்னப்பா தேவர்! (5)
தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —அன்று, காபி அருந்த வந்தார் இயக்குனர் சின்ஹா. காபி கிளப் பக்கத்திலேயே மைதானம். 'அதோ அந்தப் பையன் தான்; பேரு கூட என்னவோ சொன்னாங்களே...' என்று பரபரத்தார் சாரங்கபாணி.சின்ஹாவுக்குப் பெயர் மறக்கவில்லை. 'சின்னப்பான்னு சொன்னீங்களே...' என்றவர், சின்னப்பாவை அருகில் அழைத்து, 'சின்னப்பா... சினிமால நடிக்க வர்றியா?' என்று கேட்டார்.'சார் நிஜமாவா கேக்கறீங்க?' என்றார் ஆச்சரியத்துடன் சின்னப்பா.'ஆமாம் தம்பி... நாளைக்கு நீ வந்து நடிச்சுக் கொடுத்தா, நான் உடனே மெட்ராஸ் போயிருவேன்; இல்லேன்னா பொண்டாட்டி, புள்ளைங்க முகத்தப் பாக்காம இங்கேயே இருக்கணும்...' என்றார்.'அய்யா... நான் ஓர் ஆலையில வேலை பாக்குறேன். சினிமான்னு வந்துட்டா அதை மட்டுமே நம்பி வயித்தக் கழுவ முடியுமா... எங்க குடும்பம் பெரிசு....' என்றார்.சின்னப்பாவை தட்டிக் கொடுத்த சின்ஹா, 'மனசுல பட்டத பளிச்சுன்னு சொல்லிட்ட... மெட்ராஸ்லே எல்லாத்துக்கும் பூசி மெழுகணும்; குட்! எனக்கு உன்னைப் பிடிச்சுருக்கு; நீ மில் வேலைக்குப் போ. நாளைக்கு சாயந்தரம் கார் அனுப்பறேன்; வந்துடு...' என்றார்.'காரா...' சின்னப்பாவுக்கு மயக்கம் வருவது போல இருந்தது. மாப்பிள்ளை அழைப்பின்போது ஒரே ஒரு முறை போர்டு காரில் ஊர்வலம் போனது ஞாபகம் வந்தது. அதற்கே அப்போது ஏழு ரூபாய் வாடகை கேட்டனர்.'நீ, ஏதாவது சினிமா பாத்திருக்கியா?' என்று கேட்டார் சின்ஹா.'பயாஸ்கோப்பு தானே கேக்குறிங்க... எனக்கு பி.யு.சின்னப்பான்னா உசுரு. அவரு நடிச்ச படம் எதுவும் விட மாட்டேன். மில்லுக்கு மட்டம் போட்டுட்டு மொத நாளே போயிருவேன். அவரு பாட்டு ஏதாவது பாடிக் காட்டட்டுமா... தெருக்கூத்தெல்லாம் கூட கட்டுவேன். பி.யு.சின்னப்பா கூட என்னை நடிக்க வெப்பீங்களா...' என்றார் ஆர்வமாக!'பியூட்டிபுல் கன்ட்ரிமேன்; என்னமா துடிக்கிறான். பரபரன்னு இருக்கான்; கண்டிப்பா உருப்படுவான். எதை செஞ்சாலும் மேல வந்துடுவான்...' என்று, சாரங்கபாணியின் காதில் கூறினார் சின்ஹா.'தம்பி... நாளைக்கு சாயந்திரம், 5:00 மணிக்கு கார் வந்துடும்; மில் வாசல்லயே தயாரா நில்லு...'மறுநாள், சின்னப்பாவுக்கு நொடிகள் யுகங்களாகக் கழிந்தன. கடிகாரத்தை பார்த்தபடி இருந்தார். மதியச் சாப்பாடும் பிடிக்காமல் போனது.சின்ஹா சொன்னபடியே, ஆலைக்கு வெளியே கார் தயாராக நின்றது. 'போர்மேன்'னால் நம்பவே முடியவில்லை. தொழிலாளர்கள் ஆனந்தத் தாண்டவம் ஆடினர். கம்பெனி யூனிபார்மோடு காரில் ஏறினார் சின்னப்பா. மார்புக்கூடு பலூனாகிப் பறந்தது. 'டேய்... சின்னப்பா சினிமாவுல நடிக்கப் போறாண்டா...' என்றனர் மற்ற தொழிலாளர்கள்.வண்டியை நேரே வீட்டுக்கு விடச் சொன்னார். தன் புதிய அந்தஸ்து குடும்பத்துக்கும், தெருவுக்கும் தெரிய வேண்டாமா! உடை மாற்றி, மீண்டும் புறப்பட்டார். அந்த அந்திப் பொழுதில் ராமநாதபுரம் மக்கள், இந்த ஆச்சரியத்திலிருந்து மீள முடியாமல் தவித்தனர்.உற்சாகம் போய் விட்டது சின்னப்பாவிற்கு! சினிமாவில் நடிக்க வான்னு கூப்பிட்டுட்டு, இயக்குனர் அமைதியாக இருந்தால் என்ன அர்த்தம்... உடனே திருப்பி அனுப்பப் போகிறாரா... ஒருவேளை, வேறு பயில்வான்கள் சென்னையிலிருந்து வந்து விட்டனரோ! இயக்குனரின் மவுனம், சின்னப்பாவை இம்சித்தது.மெல்ல, 'சார்...' எனக் கூப்பிட்டார்.லேசாக புன்னகை பூத்த சின்ஹா, 'தம்பி... இந்த சீன்ல நீ நடிக்கணும்ன்னா, உன்னை மாதிரியே இன்னொரு பலசாலி வேணும்; உன்னை மட்டும் வெச்சிக்கிட்டு என்ன செய்யறது... உனக்கு வேறு குண்டர்களைத் தெரியுமா?' என்று கேட்டார்.'என் அண்ணன் சுப்பையா இருக்காருங்க; அவரைப் பாத்து தான் நானே சாண்டோ ஆனேன். அவர கூட்டிட்டு வரவா?' என்று பரபரப்பாக கேட்டார் சின்னப்பா.அவர் தலையசைத்ததும், ஓடிய சின்னப்பாவை தடுத்த சின்ஹா, 'இரு மேன்... ஏன் பறக்குறே... கார்ல போ...' என்றார்.சந்தோஷத்தின் எல்லை என்று சொல்லும் அளவுக்கு, 1938ம் ஆண்டின் அன்றைய தினம், சின்னப்பாவிற்கு மிட்டாயாக இனித்தது.சுப்பையாவிடம் விஷயத்தை கூறி, அழைத்துச் சென்றார்.'அண்ணே... நம்மள எப்படி எல்லாம் உபசரிக்கிறாங்க பாத்தீங்களா... எல்லாமே இலவசம்ண்ணே... எதுக்கும் நாம காசு கொடுக்க வேணாம். 'காபி வேணுமா, டீ சாப்பிடறீங்களா, சோடா குடிக்கிறீங்களா, வெத்தல பாக்கு, ஓவல் கொண்டாரவா, சிகரெட் குடிக்கறீங்களா'ன்னு நம்மள நச்சரிச்சாரே... அவரு தான் தயாரிப்பு நிர்வாகியாம். அவருகிட்ட மரியாதையா நடந்துகிட்டா, கறிசோறு கூட கிடைக்குமாம்.'இங்க இவ்வளவு சவுகர்யம் செஞ்சு, சாப்பாடும் போட்டு, நாம நடிச்சதுக்கு கையில சம்பளம் வேறே கொடுக்குறாங்க. மில்லுல மாசமெல்லாம் உழைச்சாலும், 15 ரூபா தான் தராங்க. பேசாம பட்டறை வேலைய விட்டுட்டு, சினிமாலேயே இருந்துறலாம்ண்ணே..' என்றார் சின்னப்பா.அஹி மஹி என்ற அரக்கர்களாக அண்ணன், தம்பி இருவரும் கடுமையாக மோதினர். 'சினிமாவில் நடிக்கிறோம்... நாளை, உலகமே நம்மைப் பாக்கப் போகிறது. எல்லாருக்கும் தெரிந்த முகமாகி விடுவோம்; அண்ணனாக இருந்தால் என்ன...' என நினைத்து, விட்டுக் கொடுக்காமல் சுப்பையாவைப் புரட்டி எடுத்தார் சின்னப்பா. மூத்தவனின் வாயில் ரத்தம் வழிந்தது.'அண்ணே ரத்தம் கசியுதேன்னு சோர்ந்திடாதே... நாம நல்லா சண்டை போட்டாத் தான், இன்னொரு முறையும் நம்மளக் கூப்பிடுவாங்க...' என்றார்.'டேய் நிறுத்துங்கடா... நிஜமாவே அடிச்சுக்கறீங்களே...' என்று, அவர்களது சண்டையைப் பார்த்து பிரமித்துப் போன இயக்குனர் சின்ஹா, 'கட்' சொன்னார்.கோவை பிரீமியர் ஸ்டுடியோவில், பி.ஆர்.பந்துலுவுக்கு, 'டூப்'பாக தன் கலைப் பயணத்தை ஆரம்பித்தார் சின்னப்பா.'உங்கள நிழல் உருவமாத்தான் சினிமால காட்டப் போறோம்; நிஜமான தோற்றம் திரையில தெரியாது...' என்றார் இயக்குனர் சின்ஹா. இதைக் கேட்டு மனம் குமுறினார் சின்னப்பா. சாப்பாடு இறங்கவில்லை. மாலையில் ஆரம்பித்த ஷூட்டிங் இரவு, 11:00 மணி வரை நீண்டு கொண்டு இருந்தது. 'இதை நம்பியா வேலையை விடத் துணிந்தோம்...' என, மனதுக்குள் புலம்பினார் சின்னப்பா.'தம்பிகளா வருத்தப்படாதீங்க... அடுத்த படம் எடுக்கும் போது, நிச்சயம் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கறேன். ரொம்ப நல்ல பசங்களா இருக்கீங்க; முன்னாலேயே உங்களப் பாத்திருந்தா, பெரிய வேஷமே கொடுத்திருப்பேன்...' என்று இயக்குனர் சின்ஹா கூறிய ஆறுதல், சின்னப்பாவை சாந்தப்படுத்தியது.ஆளுக்கு ஐந்து ரூபாய்; சினிமாவில் முதல் வருமானம். சின்னப்பாவின் உடற்கட்டை ரசித்த டி.எஸ்.பாலையா, 'என் கண்ணே பட்டுடும் போலிருக்கு; வீட்டுக்குப் போனவுடனே உங்க அம்மாகிட்ட சொல்லி திருஷ்டி சுத்திப் போடுங்க. நானும், எனக்குத் தெரிஞ்ச சினிமாக்காரங்ககிட்ட உங்களப் பத்தி சொல்றேன். குஸ்தி போட சந்தர்ப்பம் கிடைக்கும்...' என்றபடியே சகோதரர்கள் இருவரிடமும் கை குலுக்கினார்.— தொடரும்.நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,சென்னை.பா. தீனதயாளன்