இசையில் சாதிக்கும், ஜோதி!
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் உள்ளே சுற்றி வரும்போது, அருமையான வயிலின் இசை வந்து, காதுகளில் விழுந்தது.இசை பிறந்த இடத்தை நோக்கிச் சென்ற போது, அங்கே, பார்வை இல்லாத இளம் பெண் ஒருவர் அமர்ந்து, வயலின் வாசித்துக் கொண்டிருந்தார்.அது, கச்சேரியும் கிடையாது. பார்வையாளர்களும் கிடையாது. ஒரு தவம் போல, தனக்கு பிடித்த இசையை வாசித்துக் கொண்டிருந்தார், அவர்.யார் இவர்?அவர் பெயர், ஜோதி. பிறந்தது முதலே பார்வை கிடையாது. மேலும், வயதுக்கு ஏற்ற, மன வளர்ச்சியும் இல்லை. இதனால், ஜோதி, தங்களுக்கு சுமையாகி விடுவாரோ என பயந்து, ஒதுங்கிக் கொண்டன, உறவுகள். தாயாக, தந்தையாக, தோழியாக, ஆசிரியையாக என, எல்லாமுமாக இருந்து ஜோதியை வளர்த்தார், அவரது தாய் கலைச்செல்வி.'ஜோதிக்கு இசையில் ஆர்வம் இருப்பதை அறிந்து, அதில் பயிற்சி கொடுத்தேன். இன்றைக்கு, இந்திய இசையில், இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்துள்ளார்.'இவருக்கு, வயலின், கீ போர்டு, தப்பு உள்ளிட்ட பலவித வாத்தியங்கள் வாசிக்க தெரியும். கூடவே வளமான குரலில் பாடவும் செய்வார்.'மெல்லிசைக் கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார், ஜோதி. ஒரு கச்சேரியில் ஜோதி பாடிய, 'கண்ணம்மா... கண்ணம்மா...' என்ற பாடலைக் கேட்ட, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், சினிமாவில் பாட வாய்ப்பு கொடுத்தார். 'மெல்லிசைக் கச்சேரி வாய்ப்பு அதிகம் வருகிறது. ஜோதிக்கு, பணம், பொருள் பற்றியெல்லாம் தெரியாது. அவளது குழந்தை உலகத்தில், பாசத்திற்கு தான் முதல் இடம். ஆகவே, தெருவோர மற்றும் முதியோர் இல்லத்து மக்களை சந்தித்து, அவர்களிடம் பாடிக்காட்டி மகிழ்விப்பாள். கோவில் வளாகத்தில், தனியாக வயலின் இசைத்து மகிழ்வாள்.'நாளை பற்றி எங்களுக்கு கவலையில்லை. இன்றைக்கு மகிழ்ச்சியாயிரு. மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திரு என்பது தான், எங்கள் இருவரின் சிந்தனையிலும் இருக்கிறது. கவலையில்லாத மனிதர்கள் யார் இருக்கின்றனர்?'ஆகவே, கவலையைக் கடந்து போகவும் நாங்கள் கற்றுக் கொண்டு விட்டோம். ஜோதியை வைத்து புதிய முயற்சி ஒன்றை செய்யலாம் என்று தான், திருக்குறளை இசை அமைத்து பாடச் சொன்னேன். அதை அருமையாகச் செய்துள்ளார்.'இசையை மையமாக வைத்து, பழமை மாறாமல் புதுமை படைக்க விரும்பும், ஜோதியின் தகுதிக்கேற்ற, அரசு வேலை கிடைத்தால், அவரால் பொருளாதார கவலையின்றி இன்னும் சிறப்பாக மிளிர முடியும்.'இவரைப் போலவே இன்னும் நிறைய பேர் உள்ளனர். அவர்களை இந்த சமூகமும், குடும்பமும் அரவணைத்தால், பல ஜோதிகள் வெளிப்படுவர்...' என்று கூறி முடித்தார், கலைச்செல்வி.இவரை தொடர்பு கொள்வதற்கான இ - மெயில் முகவரி: jyothi.kalais@gmail.comஎல். முருகராஜ்