ஆச்சி மனோரமா! (5)
'கோபிசாந்தா நல்லா பாடுவா...' என்று சொல்லி, நாடகத்தில், பாட்டு பாடறதுக்கு அழைத்துப் போக வந்திருந்தார் பள்ளத்துார் செட்டியார் ஒருவர்.மகளை அனுப்புவதற்கு ராமமிர்தம் தயக்கம் காட்டியபோது, 'நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கும்மா... வேண்டாம்ன்னு சொல்லிடாதே...' என்று கெஞ்சத் துவங்கினாள், கோபிசாந்தா.மகளின் ஆசையை தடுக்க விரும்பாமல், சம்மதித்தார், ராமமிர்தம். கோட்டையூரில் முதன் முதலாக நாடகத்தில் பாடப் போவதை நினைத்து, சந்தோஷ வானில் பறந்தாள் கோபிசாந்தா.செட்டியாரும் அவளை நாடகக் குழுவினரிடம் அழைத்துச் சென்றார்.அவளைப் பார்த்ததும், 'சிறுமியாக இருக்கிறாளே...' என நினைத்து, அவளை மேலும் கீழும் பார்த்தனர். பின், ஒரு பாடல் பாடுமாறு கேட்டனர்.உச்சஸ்தாயி குரலில் ஒரு பாடலை எடுத்து விட்டாள், கோபிசாந்தா.அவர்களுக்கு ரொம்பவும் பிடித்துப் போயிற்று.'பெண் வேஷத்தில் நடிப்பவருக்காக பாடணும்; அப்புறம் இடையிடையே டிராமாவில் டான்ஸ் ஆட வேண்டியிருக்கும் சரியா?' என்று கேட்டனர்.'எனக்கு டான்ஸ் ஆடி பழக்கமில்லையே...' என்றாள் கோபிசாந்தா.'ஸ்கூலில் ஏதாச்சும் டான்ஸ் ஆடியிருப்பியே... அப்படி ஆடினாப் போதும்...' என்று தைரியம் கொடுத்தனர்.நாடகத்தில் பாடப் போவதே அவளுக்கு சந்தோஷத்தை தந்ததால், நடனம் ஆடுவதற்கும் சம்மதித்தாள்.இப்படித்தான், அந்தமான் காதலி என்ற நாடகத்தின் மூலமாக, மனோரமாவின் கலைப் பயணம், பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பமானது.நாடகத்தின்போது, கோபிசாந்தாவின் பாடலை கேட்டு பாராட்டாதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அவரது நடனத்தையும் வெகுவாக புகழ்ந்தனர்.அந்த நாடகக் குழுவில், மறைந்த திரைப்பட இயக்குனர் சுப்பராமனின் உதவியாளர் திருவேங்கடம் பணியாற்றினார். கோபிசாந்தாவின் பாடலும், நடனமும் மிக அருமையாக இருந்தது என்று பாராட்டினார். அத்துடன், நாடகத்தில் ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் அவரை வெகுவாக புகழ்ந்தார்.இப்படி பாராட்டியதோடு நின்று விடாமல், 'குழந்தே... நாடக உலகில் உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்மா... அதனால, உன்னோட கோபிசாந்தாங்கிற பேர், நாடகத்திற்கு நல்லா இருக்காது; அந்தப் பேரை மாத்தறது தான் நல்லதுன்னு தோணுது...' என்றனர்.'என்ன பெயர் சூட்டலாம்?' என்று அவர்கள் இருவரும் சிறிது நேரம் விவாதித்தனர். ஏதேதோ பெயர்களை சொல்லிப் பார்த்து, கடைசியில், அப்பெயரை தேர்ந்தெடுத்தனர், அதுதான், மனோரமா!பள்ளத்துாரிலிருந்து நாடகம் பார்க்க நிறையப் பேர் கோட்டையூருக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவருமே மனோரமாவின் பங்களிப்பை பற்றி, மனம் திறந்து பாராட்டினர். அவ்வாறு பாராட்டியவர்களில் ஒருவர் தான் எலக்ட்ரீஷியன் பால்ராஜ்!மனோரமாவின் பாடலையும், ஆடலையும் பார்த்து மயங்கிப் போனார். தனக்கு தெரிந்தவர்களிடம் எல்லாம் அவரது திறமையை பற்றி புகழ ஆரம்பித்தார். முடிந்த அளவிற்கு இச்சிறுமிக்கு, நாடகத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடித் தரவேண்டும் என்றும் மனதிற்குள் முடிவெடுத்தார். இதற்காக, தனக்கு தெரிந்த நாடக கம்பெனிகளில் வாய்ப்பு தேட ஆரம்பித்தார்.புதுக்கோட்டையில், வீதியின் விசித்திரம் என்ற நாடகம் நடைபெற இருந்தது. அதில், இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதற்கு ஆள் தேவைப்பட்டது. இத்தகவல் கிடைத்ததும், அந்த நாடக குழுவினரிடம் நேரில் போய் பேசினார், பால்ராஜ். அவர்களும், கோட்டையூர் நாடகத்தில், மனோரமா நன்றாக பாடியதையும், ஆடியதையும் கேள்விப்பட்டிருந்ததால். சம்மதித்தனர்.மகிழ்ச்சியோடு பள்ளத்துாருக்கு வந்த பால்ராஜ், புதுக்கோட்டை நாடகத்தில், இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதற்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறினார். இது, மனோரமாவிற்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், வசனம் பேசி நடிப்பதை நினைத்த போது பயமாக இருந்தது. எனவே, அதில் நடிப்பதற்கு தயங்கினார்.அதனால், 'வசனத்தை மனப்பாடம் செய்வது அத்தனை கஷ்டமானது அல்ல...' என்று தைரியம் கொடுத்து, 'இந்நாடகத்தில் நடித்தால், பின், நிறைய நாடகங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வரும்; அதன்மூலம் நிறைய பணம் கிடைத்து, உங்கள் வறுமை நீங்கும்; அதோடு, வளமான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ள முடியும்...' என்று, மனோரமாவுக்கும், அவரது அன்னைக்கும் எடுத்துக் கூறினார், பால்ராஜ். மனோரமா நடிக்கத் தயங்குகிறார் என, தன் வேலையை பார்க்க போயிருக்கலாம் பால்ராஜ். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. எலக்ட்ரீஷியனாக இருந்தாலும், அவருக்கு கலை ஆர்வம் அதிகம். மனோரமாவிடம் திறமை இருப்பதை அவர் நன்றாக புரிந்து கொண்டதால், எப்படியாவது நாடகங்களில் நடிக்க வைத்து, அவரை உலகறியச் செய்துவிட வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் மனோரமா தயங்கியபோதும், தொடர்ந்து அவரை வற்புறுத்தினார்.மனோரமாவை ஒரு நடிகையாக இத்தமிழ் சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தியவர் யார் என்று கேட்டால், அவர் எலக்ட்ரீஷியன் பால்ராஜ் மட்டுமே! அவர் மட்டும் வற்புறுத்தாமல் இருந்திருந்தால், மனோரமா என்ற அற்புதமான நடிகை, தமிழ் சினிமாவுக்கு கிடைக்காமலேயே போயிருப்பார்.ஒரு வழியாக, புதுக்கோட்டையில் நடைபெற இருந்த நாடகத்தில் நடிப்பதற்கு சம்மதித்தார், மனோரமா. நாடகத்திலும் சிறப்பாக நடித்து, அனைவரது பாராட்டையும் பெற்றார். நாடகத்தில் நடித்ததற்கு நல்ல சன்மானமும் கிடைத்தது. இதன்மூலம், ஒரு நடிகையாக மாறினார், மனோரமா. தொடர்ந்து நாடகங்களில் நடித்ததன் வாயிலாக வருமானமும் கிடைத்து, அவர்களது வறுமையும் நீங்கியது.இதன்பின் எலக்ட்ரீஷியன் பால்ராஜ், யார் மகன்? என்று ஒரு நாடகத்தை எழுதி, அரங்கேற்றமும் செய்தார். இந்நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார், மனோரமா. முதன் முதலாக, அவர் கதாநாயகியாக நடித்த நாடகம் இதுதான்!புதுக்கோட்டை அருகே சித்தன்னவாசல் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊரில் நடந்தது, இந்நாடகம். நிறைய விளம்பரம் செய்திருந்தார், பால்ராஜ். எனவே, நாடகத்தை பார்ப்பதற்காக திரண்டிருந்தனர், மக்கள்.இந்நாடகத்திற்கு தலைமை வகித்தவர், பிரபல வீணை வித்வான், எஸ்.பாலசந்தர்; இவர், கதை, வசனம், நடிப்பு, இயக்கம் மற்றும் தயாரிப்பு என்று திரை உலகில் பன்முகம் கொண்டவர்.இதனால், அதிக கவனத்தோடு நடித்து, அவரிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்று மனோரமாவிடம் கூறியிருந்தார், பால்ராஜ். எனவே, நாடகத்தில் அதிக கவனத்தோடு நடித்தார், மனோரமா.சிறப்பாக நடித்த காரணத்தால், தன்னை பாலசந்தரும், மக்களும் அங்கீகரிப்பர் என்று உறுதியாக நினைத்தார், மனோரமா. ஆனால், நடந்ததோ வேறு!மேடையில் அமர்ந்திருந்த வீணை எஸ்.பாலசந்தரிடம், வெள்ளி டம்ளர் ஒன்றை கொடுத்த ஒருவர், மைக்கை பிடித்து, 'இந்த பரிசை, இரண்டாவது கதாநாயகியாக, சிறப்பாக நடித்தவருக்கு அன்பளிப்பாக வழங்குவார்...' என்றும் அறிவித்தார்.இது, மனோரமாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. பிரபல வீணை வித்வான் முன்னிலையில், தன் நடிப்பு சிறப்பாக பேசப்படும் என்று எதிர்பார்த்தவருக்கு ஏமாற்றம். வேதனையில் கண்களில் கண்ணீர் துளிர்த்தது; மவுனமாக விம்மினார்.இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர், மேடையில் பரிசை வாங்குவதற்கு தயாராக போய் நின்றார்.இருக்கையிலிருந்து எழுந்து பேசத் துவங்கினார், பாலசந்தர்...— தொடரும்.நன்றி: சங்கர் பதிப்பகம், சென்னை.www.shankar_pathippagam@yahoo.com- குன்றில் குமார்