உள்ளூர் செய்திகள்

பத்மஸ்ரீ செளகார் ஜானகி! (2)

'சினிமாவில் நடிக்க போகட்டுமா?' என்று ஜானகி கேட்டதும், அவரது கணவர் சீனிவாசராவ், எதுவும் சொல்லவில்லை.குடும்பத்தைச் சூழ்ந்து நிற்கும் வறுமையை விரட்ட என்ன செய்வது என்று யோசித்த, சீனிவாசராவ், உடனே ஊருக்குச் சென்று, தன்னுடைய நிலத்தை விற்று விட்டார். 2,500 ரூபாய் கிடைத்தது. அதை வைத்து குடும்பம் நடந்தது.சில மாதங்களில் அதுவும் கரைந்து போக, மீண்டும் வறுமை வாசலில் வந்து நின்று, கோர முகத்தைத் காட்டியது. 'நான் சினிமாவில் நடிக்கப் போகிறேன்...' என்றார், ஜானகி.அதற்கு அவர் கணவர் தடுக்கவுமில்லை; முழு மனதோடு ஒப்புதலும் கொடுக்கவில்லை. 1949ல், ஒருநாள் ஜானகியும், அவரது கணவரும், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான பி.என்.ரெட்டியைச் சென்று பார்த்தனர்.'அன்றைக்கு நான், 'ஹீரோயின்' ஆக நடிக்கிறீயா என்று, உன்னைக் கேட்டேன். அந்தப் படம் முடிந்து விட்டது. உனக்கு கல்யாணமாகி, குழந்தையும் பிறந்து விட்டது, சினிமா வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் ஒத்து வராது. போய் சந்தோஷமாக குடும்பம் நடத்து...' என்று சொல்லி விட்டார், பி.என்.ரெட்டி.அதைக் கேட்டதும், அதிர்ந்து போனார், ஜானகி. ஆனாலும், மனம் தளரவில்லை. 'சினிமா மீது எனக்கு ஆர்வமோ, மோகமோ இல்லை. ஒரு காலத்தில் இருந்தது. இப்போது என் குடும்ப சூழ்நிலையைக் கருதி தான், வேலை கேட்டு வந்தேன்.'சினிமாவில் நடிப்பதன் வாயிலாக, என் குடும்பப் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என்று தான், சினிமாவைத் தேடி வந்திருக்கிறேன். தயவு செய்து நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்...' என்று சொல்லி, தன்னுடைய கஷ்டத்தை விவரித்தார், ஜானகி.அதைக் கேட்டு கலங்கி விட்டார், பி.என்.ரெட்டி.'என் தம்பி, நாகி ரெட்டி, ஒரு சமூகப் படம் எடுக்கப் போகிறார். நான், அவரிடம் சொல்கிறேன்...' என்று, நாகி ரெட்டிக்கு போன் செய்து, தகவல் சொன்னார்.மறுநாளே ஜானகிக்கு, வாகினி ஸ்டுடியோவில், 'மூவி டெஸ்ட்' எடுக்கப்பட்டது.'என் தலைவிதியை நிர்ணயிக்கும் பதிலே, அந்த, 'டெஸ்டின்' முடிவில் தான் இருந்தது. இயக்குனர் எல்.வி.பிரசாத், அந்த சோதனை படத்தை எடுத்தார். ஏழு விதமான முக பாவங்களில் நடித்தேன். 'மூவி டெஸ்டின்' முடிவு வெளியானது.'பிரசாத் வந்தார். 'உனக்கு முக்கியமான வேஷம் கொடுக்கப் போகிறோம்; நன்றாக நடிக்க வேண்டும்...' என்றார். ஏதோ சிறு வேஷம் தான் கிடைக்கப் போகிறது. நம்மை இவர் கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டேன்.'ஆனால், செளகார் படத்தின் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டப் பின் தான், அது உண்மை என்று தெரிந்தது. அதுவும் பிரபல நடிகர் என்.டி.ராமராவுக்கு ஜோடி என்றதும், என்னால் நம்பவே முடியவில்லை.'எடுத்த எடுப்பிலேயே கதாநாயகியா? அதுவும், என்.டி.ஆருக்கு ஜோடியா என்று ஒரே பிரமிப்பாக இருந்தது. வாழ்வில் வசந்தம் வந்தது...' என்று, அன்றைய இன்ப அதிர்ச்சியை நினைவு கூர்ந்தார், ஜானகி.எந்த புதுமுக நடிகைக்கும் முதல் படமே, பெரிய பேனரின் தயாரிப்பாக, பெரிய டைரக்டர், பெரிய, 'ஹீரோ'வின் ஜோடியாக அமைவது அபூர்வம்.அந்தப் படத்திற்காக ஜானகிக்கு சம்பளம், 2500 ரூபாய் வழங்கப்பட்டது.வறுமை கடலில் தத்தளித்த, ஜானகியை, சினிமா மூலம் ஒரு படகில் ஏற்றி வைத்தார், இறைவன். அதே சமயத்தில் படப்பிடிப்பின் போது ஒரு காட்சியில், அவர் சரியாக நடிக்காததால் இயக்குனர் எல்லார் முன்பு திட்டியதும் அழத்தொடங்கி விட்டார். சினிமா தொழிலுக்கு அவர் புதுசு என்பதால், ஒரு நடிகை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது ஜானகிக்கு எதுவும் தெரியாது. அது மட்டுமல்ல, கொஞ்சம் பயந்த சுபாவமாக, கலகலப்பாக பேசி பழக்கமில்லாதவராக இருந்தார்.படப்பிடிப்பு தளத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந்து இருப்பார். நடிக்க வேண்டிய சமயத்தில் வந்து நடித்து விட்டு, பழையபடி ஓரமாக சென்று உட்கார்ந்து கொள்வார்.யாருடனும் பேச மாட்டார். யார் எப்படிப்பட்டவர் என்பது தெரியாமல், ஏதாவது உளறி கொட்டி விடக்கூடாதே என்ற பயம்.யாராவது வந்து, புது, 'ஹீரோயின்' என்று மரியாதையாக, 'குட் மார்னிங்' சொன்னால் கூட, பதிலுக்கு, 'குட் மார்னிங்' சொல்ல தெரியாமல் இருந்து விடுவார். காரணம், அவ்வளவு கூச்சம்.இதெல்லாம் கவனித்த, இயக்குனர் எல்.வி.பிரசாத், 'நீ இப்படியெல்லாம் இருக்கக் கூடாது. யாராவது வணக்கம் சொன்னால், பதிலுக்கு வணக்கம் சொல்ல வேண்டும். அதுதான் பண்பாடு. 'உன்னைப் பற்றி நீ தாழ்வாக எண்ணுவதாலேயே இவ்வளவு கூச்சப்படுகிறாய்! கூச்சத்தை விட்டு எல்லாரிடமும் கலகலப்பாக பேசிப் பழகு...' என்று சொல்லி, புரிய வைத்தார்.அக்கறையுள்ள நல்ல மனிதர், இயக்குனர் எல்.வி.பிரசாத். அவர் வரும் வழியிலேயே, ஜானகி வீடு இருந்ததால், படப்பிடிப்பு நடக்கும் தினத்தில் காலையில், ஜானகி வீட்டுக்கு சென்று, தன் காரில் அவரை அழைத்துக் கொண்டு, ஸ்டூடியோவுக்கு செல்வார். இது, ஜானகிக்கு புது நம்பிக்கையை கொடுத்தது.அந்த சமயத்தில் தினமும் படபிடிப்புக்கு, டாக்ஸி வைத்து செல்லும் வசதி இல்லை. அந்த சூழ்நிலையில் இயக்குனரே வந்து படப்பிடிப்பு தளத்துக்கு அழைத்து சென்றது, அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தியது.'அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வர ஆரம்பித்தது...' என்ற ஜானகி, தன்னை அழ வைத்த, அந்த சம்பவத்தை சொன்னார்:சௌகார் படத்தில், என் மாமாவை கட்டிப் போட்டு, அவருடைய, எதிரிகள் அடிப்பது போன்ற காட்சி. அதைப் பார்த்து நான் பதட்டப்பட வேண்டும், கதறி அழ வேண்டும் என்று, காட்சியை விளக்கினார், இயக்குனர். சத்தமாக அழ வேண்டும் எனவும் சொல்லியிருந்தார்.எனக்கோ அந்தக் காட்சியில் அழுகையே வரவில்லை; மாறாக, சிரிப்பு தான் வந்தது. சிரித்து விட்டேன். காரணம், மாமாவாக நடித்த ஜீ.வி.சுப்பாராவ், ஏதோ தமாஷ் செய்ய, நான் அதை பார்த்து சிரித்து விட்டேன். அவ்வளவு தான் இயக்குனருக்கு கோபம் வந்துவிட்டது.'உன்னைச் சிரிக்க வைப்பதற்கு இங்கே அழைத்து வரவில்லை. நல்லா நடிக்க தெரியாவிட்டால், எதற்கு நடிக்க வரணும்?' என்று கோபமாக சத்தம் போட்டார். எனக்கு அழுகை பொத்துக் கொண்டு வந்து விட்டது.கண்களில் இருந்து பொல பொலவென்று கண்ணீர் கொட்டியது. விம்மலும், கண்ணீருமாக அந்தக் காட்சியில் நடித்து முடித்தேன். 'கட்' சொன்ன இயக்குனர், 'ஜானகி பிரமாதம்...' என்றார்.ஆனால்...— தொடரும். சபீதா ஜோசப்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !