உள்ளூர் செய்திகள்

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (4)

என் கண்ணில் இருக்கும் மச்சம் பற்றி இருவிதமான கருத்துக்கள் எழுந்தன. இது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. படப்பிடிப்பு ஆரம்பமானது. மச்சம் பற்றி யாரும் பேசவில்லை. வேடிக்கைக்காக தான் சொல்லி இருக்கின்றனர் என்பதும் விளங்கியது.நாடகத்தில் எனக்கு ஓரளவு பரிச்சயமும், நடித்த அனுபவமும் இருந்த போதும், சினிமாவில் நடிப்பது வேறு மாதிரி என்பது புரிந்தது.என்னுடைய காட்சி இல்லாதபோது, மற்றவர்கள் எப்படி நடிக்கின்றனர் என்பதை பார்த்து, நிறைய தெரிந்து கொண்டேன்.என் அன்பு தெய்வம், எம்.ஜி.ஆரை முதன் முதலாக எப்படி சந்தித்தேன் என்பதை சொல்லி விடுகிறேன்.ரேவதி ஸ்டுடியோவில், கச்சதேவயானி படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தார், இயக்குனர் கே.சுப்பிரமணியம்.வெளிச்சம் உள்ளே வரக்கூடாது என்பதற்காக, படப்பிடிப்பு தளத்தின் கதவுகளை மூடி விடுவர். அப்போது, திடீரென்று கதவு திறந்தது.ஆயிரம் சூரியன்களின் வெளிச்சம் உள்ளே வந்தது போல் வந்தார், எம்.ஜி.ஆர்.,நேராக இயக்குனர் கே.சுப்பிரமணியத்திடம் சென்று, 'என்ன ஷூட்டிங் போயிட்டிருக்கு...' என்று விசாரித்தார்.மெதுவாக திரும்பியவர், என்னை பார்த்து, 'யாரது?' என்று, கேட்டார்.'பி.சரோஜாதேவி, பெங்களூரு பொண்ணு...' என்றார், இயக்குனர் சுப்பிரமணியம்.அன்புடன் எல்லாரிடமும் பேசிக் கொண்டிருந்தார்.சிவந்த நிறம், அழகான மின்னும் கண்கள், அவரை பார்த்தபடி நின்றிருந்தேன். என்னை அறிமுகம் செய்து வைத்தார், இயக்குனர்.கன்னடத்தில், 'நமஸ்காரம்மா' என்றார், எம்.ஜி.ஆர்.,பதிலுக்கு நானும், 'நமஸ்காரா' என்றேன்.சிறிது நேரம், இயக்குனரிடம் பேசிட்டு போய் விட்டார்.பக்கத்தில் இருந்தவரிடம், 'வந்தாரு, எல்லாரும் எழுந்து நின்னாங்க. மரியாதை செலுத்தினாங்க. நமஸ்காரம் பண்ணினாங்க. யார் சார் அவரு?' என்றேன்.'ஐயோ, என்னம்மா இது... உங்களுக்கு இவரை தெரியாதா? இவர் தான், எம்.ஜி.ஆர்.,' என்றார், கே.சுப்பிரமணியம்.அப்போது தான் அவர், எம்.ஜி.ஆர்., என்று எனக்கு தெரிந்தது. கூடவே, எனக்கு வேறொரு காட்சியும் நினைவுக்கு வந்தது.பெங்களூரு மெஜஸ்டிக்கில் உள்ள தியேட்டர் வாசலில், புலி வாயை பிடித்தபடி, 'ஹீரோ' இருக்கும், குலேபகாவலி படத்தின் பேனரில் இருந்தது; இவர் தான் என்று ஞாபகம் வந்தது.வந்தார், போனார் என்று, சும்மா இருக்கவில்லை, எம்.ஜி.ஆர்.,'ஒரு புது பொண்ணு, பெங்களூரிலிருந்து வந்திருக்கு. அதுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. நீங்க வேணும்ன்னா உங்க படத்துல நடிக்க வையுங்க. நானும், 'ஆக்ட்' பண்றேன்...' என, நிறைய தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கார்.ஆனால், யாருக்கும் என்னை வைத்து படம் எடுக்கும் தைரியம் அப்போது வரவில்லை.'நாங்க நடிக்க வைக்க மாட்டோம்...' என, எம்.ஜி.ஆரிடமும் சொல்ல தைரியமில்லாமல், ஒரு, 'டெஸ்ட்' எடுத்து பார்க்கலாம் என, எம்.ஜி.ஆரையும், என்னையும் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வைத்தனர்.ஆரம்பத்தில், யாரும் என்னை வைத்து, படமெடுக்க முன்வராததால், நாடோடி மன்னன் படத்தில் என்னை ஒப்பந்தம் செய்தார், எம்.ஜி.ஆர்., அந்த படம் வெளிவர தாமதமானதால், இரண்டாவதாக, எம்.ஜி.ஆருடன் நடித்த, திருடாதே படம் முதலில் வெளிவந்தது. திருடாதே படத்தில் நடிக்க, என்னை ஒப்பந்தம் செய்தார், இயக்குனர் ஏ.எல்.சீனிவாசன். அதற்கு முன், இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருந்தேன். அடுத்து, எம்.ஜி.ஆர்., என்ற பெரிய நடிகருடன் நடிப்பது ஒருபுறம் சந்தோஷத்தையும், மறுபுறம் பயத்தையும் கொடுத்தது.அந்த படத்தில், எம்.ஜி.ஆருக்கு திருடன் வேடம்.ஒரு காட்சியில், அவர் கட்டிலின் மீது உட்கார்ந்திருப்பார். சந்தோஷத்துடன், அவர் கட்டிலை சுற்றி சுற்றி வரவேண்டும்.'பட்டணத்தார் பட்டணத்தார் இங்க வந்திருக்கீங்களா நீங்க?' என கேட்டபடி, அந்த கட்டிலை சுற்றி சுற்றி, 'டான்ஸ்' ஆடிட்டு வர்ற மாதிரியான காட்சி.நான் சுற்றி வரும்போது, என் கை பட்டு, பக்கத்து ஸ்டாண்டிலிருந்த கண்ணாடி பொருள் உடைந்து விட்டது.கண்ணாடி துண்டுகள் கீழே விழுந்ததை கவனிக்காமல் நடித்துக் கொண்டிருந்தேன்.காட்சி முடிந்து பார்த்தால், தரை பூராவும் ரத்தம். என் கால்களில் கண்ணாடி துண்டுகள் பொத்தி, ரத்தம் வந்ததை பார்த்து விட்டார், எம்.ஜி.ஆர்.,உடனே பதறி, 'படப்பிடிப்பை நிறுத்துங்க...' என சொல்லி, என்னை கூப்பிட்டு பக்கத்தில் உட்கார வைத்து, அவரது மடியில் என் காலை துாக்கி வைத்து, குத்தியிருந்த கண்ணாடி துண்டுகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து, தண்ணீர் கொண்டு வரச்சொல்லி, காலை கழுவினார்.'பைத்தியக்கார பொண்ணு. காலில் அடிபட்டால் நிற்க வேண்டாமா... இப்படியா ஆடுவர்...' என்று, என்னை உரிமையுடன் கண்டித்தார்.—தொடரும்நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம்எனக்கு திருமணம் ஆனதும், கணவர் ஸ்ரீஹர்ஷாவை சென்னைக்கு வரவழைத்தார், எம்.ஜி.ஆர்.,'இனிமே, சரோஜாவை நீதான் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவளுக்கு ஒண்ணுமே தெரியாது. அம்மா என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு நடந்து கொண்டிருந்தவள். அவளுக்கு அம்மா தான் எல்லாம். அப்படி இருந்தவளை, நீ திருமணம் செய்திருக்கிறாய். எல்லாவற்றையும் நீதான் இனிமேல் பார்த்துக் கொள்ள வேண்டும்...' என்று, ஆலோசனை சொன்னார்.என் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் முதல் போன், எம்.ஜி.ஆருடையதுதாகத்தான் இருக்கும். காலையிலேயே அழைத்து, வாழ்த்து சொல்லி விடுவார். அவ்வப்போது பரிசுகள் தருவதும் அவருடைய வழக்கம்.எனக்கு, முதன் முதலாக, தங்க செயின் கொடுத்தார். அதை இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.எம்.ஜி.ஆரைப் பற்றி இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும்.திருமணத்திற்கு பிறகு, சென்னைக்கு என்னை அழைத்தவர், 'நீ, சென்னைக்கே வந்து விடு. வேண்டுமானால், காங்கிரசில் சொல்லி, உன்னை எம்.பி., ஆக்கி விடுகிறேன்...' என்றார்.அவர் நினைத்திருந்தால், அவருடைய கட்சி மூலமே என்னை எம்.பி., ஆக்கி இருக்க முடியும். ஆனால், எனக்கு காங்கிரஸ் மீது அபிமானம் இருந்தது என்பதற்காக அப்படி கூறினார்.எனக்கு பெங்களூரை விட்டு போக விருப்பமில்லை என்பதால், நான் தான் மறுத்து விட்டேன்.எஸ்/ விஜயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !