அந்துமணி பதில்கள்!
* த. சிவாஜிமூக்கையா, சென்னை:'தேசிய கட்சிகள், தமிழகத்தில் இன்னும் வேரூன்றவில்லை' என்று, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர், கே.பி.முனுசாமி கூறி இருக்கிறாரே...உண்மை தான்! ஆனால், இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருப்பதால், பா.ஜ.,வுக்கு சாதகம் உண்டு என்றே கூறலாம்!கே. கோவிந்த், நெல்லை: நான் எதைச் செய்தாலும் தோல்வியையே தழுவுகிறேன்; இது ஏன்?பொறுப்புணர்ச்சியும், பொறுமையும் இல்லாததே, இதற்கு காரணம். பொறுப்புணர்ச்சி குறையாமல், பொறுமையுடன் உழையுங்கள்; வெற்றி நிச்சயம் கிடைக்கும்! கே. சித்ரா, சிதம்பரம்: என் தோழிக்கு, சித்திரை மாதம், பெண் குழந்தை பிறந்து விட்டது; இதனால், குடும்பத்தில் பல கஷ்டம் வரும் என்று கூறுகின்றனரே...சுத்த மூடத்தனம். எந்த நேரத்தில், எந்த நாளில், மாதத்தில் பிறந்தாலும் ஒன்று தான்! நமக்கு வரும் சுகங்களுக்கும், கஷ்டங்களுக்கும் நாம் தான் காரணம்!* ஆர். ராகவன் திருச்சி: என் நல்ல நண்பன், இப்போது, கெட்டுப் போனானே... என்ன காரணமாக இருக்கும்?முதல் காரணம் நண்பர்கள்; இரண்டாவது, அவனது உடல் நலம்; மூன்றாவது, வறுமை; நான்காவது, அவனது சோம்பேறித்தனமாக இருக்கலாம்!* க. அருச்சுனன், செங்கல்பட்டு: கூட்டணியே இல்லாமல், அரசியல் கட்சிகள் தனித்தனியே தேர்தலை சந்தித்தால்...'லெட்டர் பேடு' கட்சிகளின் முகத்திரை அப்போது தான் தெரிய வரும். அதனாலேயே கூட்டணிக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்!தமிழருவி, எஸ்.புதுார், திருவிடைமருதுார்: 'பாலீதின்' பைகள் மீண்டும் ஆங்காங்கே பயன்பாட்டுக்கு வந்து விட்டதே...இப்பைகள் தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமையை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்! அப்போது தான், இது போன்ற தவறுகள் மீண்டும் நிகழாது!தங்கவேல் பழனிச்சாமி, சென்னை: மு.க.அழகிரி கட்சி ஆரம்பித்தால், தி.மு.க.,வுக்கு நஷ்டமா, லாபமா?முதலாவது தான்! தென் மாவட்டங்களில் அவருக்கு ஆதரவு அதிகமாக உள்ளது. இதனால், தி.மு.க.,வுக்கு அங்கு நஷ்டம் தான் ஏற்படும்!