அந்துமணி பா.கே.ப.,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம், சின்னாளபட்டி; செயற்கை பட்டுப் புடவைகளுக்கு பெயர் பெற்றது.சமீபகாலமாக, இவ்வூர் புடவைகளுக்கு, கிராக்கி குறைந்து விட்டதால், அங்குள்ள நெசவாளர்கள், மில் சேலைகளை (சூரத், பெங்களூருவில் இவை கொள்முதல் செய்யப்படுகின்றன!) விற்பனை செய்து, வருமானம் ஈட்டி வருகின்றனர்.இவர்களில் சிலர், இந்தியா முழுவதும் செல்கின்றனர்; பலர் வெளிநாடுகளுக்கு சென்று, சேலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்போது சின்னாளபட்டியைச் சேர்ந்த பல வியாபாரிகள், சேலை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நாடுகளில் வாழும் தமிழர்கள், இவர்களுக்கு ஆதரவு தருகின்றனர்.சமீபத்தில், தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய சேலை வியாபாரி ஒருவரை சந்திக்க நேர்ந்தது; அவர் கூறினார்:தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் மொத்தம், 10 பேர் அடங்கிய சேலை வியாபாரிகள், முகாம் அமைத்திருந்தோம். காலையில் புடவைகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து, மாலையில் வசூல் பணத்துடன் திரும்புவோம். சென்னையை விட பெரிய நகரமான இங்கு, ஏராளமான தமிழர்கள் வசிக்கின்றனர். அவர்கள், 160 ஆண்டுகளுக்கு முன் அங்கு குடியேறிவர்கள்; ஓரளவிற்கு தமிழ் பேசுகின்றனர்.தமிழர்களாக இருந்தாலும், அவர்களின் உடை மற்றும் கலாசாரம் தென்னாப்பிரிக்க மக்களைச் சார்ந்தே உள்ளது. பெண்கள், பேன்ட், டி - சர்ட்டும்; ஆண்கள் பர்முடாஸ் மற்றும் டி - சர்ட்டும் அணிகின்றனர். மிகவும் அளவு குறைந்த ஆடைகளையே அணியவே பிரியப்படுகின்றனர்.கோவிலுக்கு செல்லும் போது, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களிலும், துக்க காரியத்திற்கு செல்லும் போதும் மட்டுமே பெண்கள் சேலை அணிகின்றனர்.எந்த பெண்ணும் நகை அணிவது கிடையாது. காலையில் பிரட், கோக்குடன், 'பிரேக்பாஸ்ட்' முடிந்து விடுகிறது. வேலைக்கு சென்று மாலை திரும்பிய பின், கடைகளில் விற்கும், 'பேக்டு புட்' அயிட்டங்களை வாங்கி வந்து, 'டின்னரை' முடிக்கின்றனர்.அங்கேயும் ஏழை, பணக்காரன் வித்தியாசம் உள்ளது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் அரசாங்கம் பென்ஷன் தருகிறது. இவ்வகையில், நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்திற்கு போதுமான அளவிற்கு பணம் கிடைத்து விடுகிறது.குண்டூசி முதல், கார் வரை எல்லா பொருட்களும் சுலப தவணை முறையில் கிடைக்கின்றன. யாரும் ரொக்கமாக பணம் கொடுத்து பொருட்களை வாங்குவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான வீடுகளில் விலை உயர்ந்த சோபா, கட்டில், எலக்ட்ரானிக் பொருட்களை காண முடிகிறது.குடிநீர் மற்றும் மின்சாரம் தவிர அனைத்துமே அரசாங்கத்தில் இருந்து இலவசமாக கிடைக்கிறது. பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்; ஆண்கள் சோம்பேறிகளாக காணப்படுகின்றனர்.தென்னாப்பிரிக்காவின் பூர்வீக குடிகள், 'காப்ரி' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்களில் பலர், முரடர்களாக இருந்தாலும், பெரும்பான்மையோர் அன்னியர்களுடன் அன்பாக பழகுவதை காண முடிந்தது. இருசக்கர வாகனங்களை காண்பது அரிது; எல்லாருமே கார் வைத்திருக்கின்றனர். நாங்கள் கூட கார்களில் சென்று தான் புடவைகளை விற்பனை செய்தோம்.எங்கு பார்த்தாலும் சுத்தம் பளிச்சிடுகிறது; தூசு என்பதே கிடையாது. சீதோஷ்ண நிலையை பொறுத்தவரை, எந்த காலத்திலும் இதமாக இருக்கிறது. இலை போடாமலேயே சாப்பிடும் அளவிற்கு சாலைகள் தூய்மையானவையாகவும், மேடு, பள்ளங்கள் இல்லாதவையாகவும் உள்ளன. மணிக்கு, 140 கி.மீ., வேகத்தில் கார்கள் செல்வது சாதாரணம்.தமிழகத்தில் இருந்து வருகிறோம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால், நல்ல வரவேற்பு கிடைக்கிறது. எந்த வீட்டிற்கு சென்றாலும் முதலில் சாப்பிடத்தான் சொல்கின்றனர். ஓரளவிற்கு தமிழ் பேசுகின்றனர்.இந்திய, தமிழக அரசியலில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. தமிழ் மற்றும் இந்தி சினிமா நடிகர், நடிகையரை மட்டும் தெளிவாக தெரிந்து வைத்துள்ளனர். இன்றைய நிலையில் ஷாருக் கான் அங்கு பெரிய ஹீரோவாக மதிக்கப்படுகிறார். தமிழ், இந்தி படங்கள் இங்கு திரையிடப்பட்ட உடனேயே அங்கும் வந்து விடுகின்றன.பாதுகாப்பு என்பது குறைவுதான். மாலை, 6:00 மணிக்கு மேல் வெளியில் உலாவுவது பாதுகாப்பானதல்ல. துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடிப்பது சாதாரணம்.இதனால், எல்லா கடைகளும், மார்க்கெட்டுகளும் மாலை, 5:00 மணிக்கே மூடப்பட்டு விடுகின்றன. காலை, 6:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மட்டுமே மனித நடமாட்டம் காணப்படுகிறது.இருப்பினும், பெரும்பாலானவர்கள் அன்பும், பாசமும் கொண்டவர்களாகவே உள்ளனர். ஏமாற்றுதல், பொய் சொல்லுதல், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுதல் போன்றவை அங்கு இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.— கிராமத்து தமிழர்கள், 'வேலையில்லையே' என்று சோம்பிக் கிடக்காமல், பிச்சை எடுக்காமல், திருடாமல், கொள்ளையடிக்காமல் உலகின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பிழைத்துக் கொள்வதை எண்ணி பெருமை அடைந்தேன்.