உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

'வரதட்சணை கேட்பவனைக் கட்டி வைத்து உதைப்பேன்; கேட்ட நாக்கை வெட்டிப் போடுவேன்; அவர்கள் குடும்பத்தையே கதி கலங்க வைப்பேன்...' எனக் கூறும், கன்னிப் பெண்கள், தமிழகத்தில், 100க்கு, 90 பேர் உண்டு.பள்ளி, கல்லூரி நாட்களில், வரதட்சணை எதிர்ப்பு பட்டிமன்றங்களில் கலந்து, வரதட்சணைக் கொடுமை பற்றி, ஓங்கிய குரலில் பேசும் துணிச்சலான இளம் பெண்கள், அனேகம் பேர்.எழுத்து வன்மையுடைய இளம் பெண்களோ, பள்ளி, கல்லூரி ஆண்டு மலர் மற்றும் வார, மாத இதழ்களில், வரதட்சணைக்கு எதிரான கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுகின்றனர்.வரதட்சணைக்கு எதிரான கருத்துடைய ஏராளமான வாசகியர், அவ்வப்போது தம் கருத்துகளை எனக்கு எழுதுவது உண்டு. அப்படிப்பட்ட வாசகியருள், கன்னியாகுமரி மாவட்ட வாசகி ஒருவரும் அடக்கம்! அவரது படிப்பு கொஞ்சமா... லேசில், 'சீட்' கிடைக்காத, மிக அரிதான, 'கோர்ஸ்' ஒன்றில், பட்ட மேற்படிப்பு முடித்து, அதற்கு மேலும் படித்து வருகிறார்.படிப்பை கணக்கில் கொண்டு, வாசகிக்கு எக்கச் சக்க வயது இருக்கும் என, தப்புக் கணக்கு போட்டு விடாதீர்கள். மிஞ்சிப் போனால், 23 - 24 வயது தான் இருக்கும்.அவர், எழுதிய கடிதத்தை தருகிறேன்:... உங்களுக்கு, 'லெட்டர்' போட்டு ரொம்ப நாளாச்சே என்று நினைத்தேன்; உடனே எழுத உட்கார்ந்திட்டேன். மணி, இப்ப வீட்ல உட்கார்ந்து ரெக்கார்ட், 'பினிஷ்' பண்றதும், எக்சாமுக்கு படிப்பதும் தான் வேலை. இன்னும், சிவில் எக்சாம், எல்.ஐ.சி., டெஸ்ட், பாரஸ்ட் டிபார்ட்மென்ட்ல ஒரு தேர்வு எல்லாத்துக்கும் பிரிப்பேர் பண்றேன். 'பாஸ்' பண்றேனோ இல்லையோ, தெரியாத மேட்டர்ஸ் தெரிஞ்சுக்கிறேன்.தற்போது, வீட்டில் வரன் தேடும் படலம் நடந்து வருகிறது. வரதட்சணை சுழலில் சிக்கி, மூச்சுத் திணறி நிற்கிறேன். வரதட்சணைக் கொடுமை என்றால் என்ன, அதனால், ஒரு பெண்ணின், 'மனஸ்' என்ன பாடுபடுகிறது என்பதை, 'பிராக்டிகல்'லா அனுபவிச்சிட்டு இருக்கேன். ஸ்கூல்ல, 'ஈவில்ஸ் ஆப் டவுரி சிஸ்டம்'ன்னு படிச்சப்பவோ, காலேஜ்ல வரதட்சணையை எதிர்த்து கவிதைகள் எழுதிய போதோ, அதன், 'பவர்' பற்றி சுத்தமா தெரியாது. அனுபவத்தில், 'தாங்க முடியலே'ன்னு சொல்ற அளவுக்கு இல்லன்னாலும், முதிர் கன்னிகளை நினைத்து, மனம் வெம்புகிறது.மணி, இதுல, 'ஜோக்' என்ன தெரியுமா? அந்த, 'பையன்'களுக்கு பொண்ண கட்டணும்ன்னு விருப்பம் இருக்கு; ஆனா, அப்பா அல்லது அம்மாதான், 'இவ்வளவு லட்சம் தேவை...' என்கின்றனர். பையன் தானே பெண்ணைக் கட்டப் போறான்? ஆனால், அவனோ, வாயில்லா ஜீவனாய், முதுகெலும்பில்லாத மனுஷனாய் பெத்தவங்க பின்னாடி நடக்கிறான். இந்த பையன்களை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. உண்மையிலேயே இவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா அல்லது நடிக்கிறாங்களா? திடீர் பணக்காரனாகும் விருப்பம் யாருக்குத்தான் வராது. ஒரு பொண்ணு பிறந்ததுன்னா, எவனுக்கோ லாட்டரி அடிச்சதுன்னு அர்த்தம்.'...' வகுப்புல ஒரு சார் சொன்னார்... 353:1 என்ற விகிதத்தில், இப்ப, 'டைவோர்ஸ்' நடக்குதாம். சீரியஸ் மேட்டர் தானே! லட்சங்களுக்கு தாலிகட்ட நினைப்பதுதான் காரணம்ன்னு நினைக்கிறேன். எப்படி மனக் கசப்பு வராமல் போகும்?என் தோழி கூறினாள்: ஒரு டாக்டர் பையனின் அம்மா, அவன் முன்னிலையிலேயே, வீடு, கார், சில லட்சங்கள், 15 சவரன் தாலி செய்ய பணம், புடவை எடுக்க, 50,000 ரூபாய் கேட்டார்களாம்... அவள் என்னிடம் கேட்டாள்... 'இவ்வளவையும் கொடுத்திட்டு, அவனை எப்படி ஹஸ்பண்ட்ன்னு சொல்ல முடியும்? தாலி கூட, என்னுடைய பணம். இதவிட, நாமே நமக்கு தாலி செஞ்சு போட்டுக்கலாம்லே...' என்று!எங்கள் வீட்டில், ஒரு பையனின் அப்பா வந்து கேட்கிறார்... அவர் பொண்ணைக் கட்டிக் கொடுத்ததில், சில லட்சங்கள் கடன் இருக்காம்; அதனால, நாங்க பணம் கொடுக்கணுமாம். எப்படித் தான் நாவு கூசாம கேக்கத் தோணுதோ!பையனின் படிப்புக்குத்தான் மதிப்பு உண்டா, பெண்ணின் படிப்புக்கு மதிப்பு இல்லையா... இதுல, அவங்க, பி.இ., - எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்சி., - எம்.பில்.,ன்னா, 'ரேட்' ரொம்பக் கூடுது!சில வேளைகளில் நினைப்பேன்... 'பெண்ணா பிறந்திருக்கக் கூடாது...' என்று! மற்ற சில வேளைகளிலோ, 'ஆணை விட, உயர்ந்தவள் பெண்; பெண்ணாய் பிறந்ததில் தப்பில்லை...' என்று நினைத்துக் கொள்வேன்.நான், என் தம்பியிடம் கூறிவிட்டேன், 'டியூஷன் எடுத்தாவது, மாசா மாசம் ஒரு சிறு தொகைய சேமிக்கத் தொடங்கிவிடு. நீ கட்டப் போகும் பெண்ணுக்கு தாலி, மோதிரம், புடவை உன் சொந்தக்காசில் அமைய வேண்டும்...' என்று!என்னுடைய அப்பா ஒரு சிங்கிள் பைசா கூட தராம, என்னை, கல்யாணம் செய்து கொடுத்தாலும், உழைத்து சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு இருக்கு; இந்த ஆம்பிளைங்களுக்கு, அந்த தெம்பு இல்லையா... ஒரு பெண் நினைத்தால், லட்சம் ரூபாய்களை உருவாக்கவும், அதேசமயம், அதை அழிக்கவும் முடியும் என்பது இவர்களுக்கு ஏன் புரியாமல் போனது?ஒண்ணு நிச்சயம்... வாழ்க்கை கவிதையா அமையணும்ன்னா, வரதட்சணை வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. மெல்லிய பனி விழும் பசும்புல் நிறைந்த பள்ளத்தாக்கில், மூங்கிலால் செய்த சிறிய வீடு. அதன் முற்றத்தில், எப்போதும், பூ சொரியும் செண்பக மரம். அதனுள்ளே, அன்பினால் (கவனிக்கவும், 'பணத்தினால்' அல்ல!) இணைக்கப்பட்ட, இரு இதயங்கள். அன்பு இருந்தா, வேற என்னங்க வேணும்!லட்சங்களோடு வரும் பெண் சொல்வாள்... 'சும்மா இருய்யா... வசனம் பேசாதே... இத்தனை லட்சங்கள எங்க அப்பா தரலேன்னா, என்னை நீ கட்டியிருப்பீயா...' என்று! உடனே, வரதட்சணை பிச்சை வாங்க கூசாத பொல்லாத ஆண்மை, வீறு கொண்டு எழும்பிடும். பிறகென்ன, இருவரில் யாராவது ஒருவர், விட்டு கொடுக்கலேன்னா... வக்கீல் நோட்டீஸ்!மணி... இந்தியர்களிலேயே ஒரு குட் இந்தியன் என்றைக்காவது வருவார் என்ற நம்பிக்கை, எனக்கு இருக்கு. 'வரலேன்னாலும் பரவாயில்லை'ன்னு மம்மிகிட்ட சொன்னா, அடி விழும். பாவம் பெற்றோர், யாராவது வரன் வந்தால் போதும். இவங்க, 'டேட்' பிக்ஸ் பண்ணிடுவாங்க. நான் சொல்வேன், 'அவசரப் படாதீங்க, அவங்க, இன்னும், 'பாயிண்டு'க்கே வரல... வரதட்சணையில போயிடுவாங்க...' என்று! எனக்கு இருக்கிற உறுதி, பாவம், அவங்களுக்கு இல்லை.ஓ.கே., மணி, நீ...ளமா பேசிட்டேன். எனிவே... ஒரு நண்பரிடம் என் மனப் பாரங்களை இறக்கி வைத்த மாதிரி, 'மனஸ்' லேசா இருக்கு. ஒரு வேண்டுகோள், உங்களுக்கு நிறைய வாசகர்(ன்)கள் இருப்பாங்களே, அவங்களுக்கு நீங்க ஒரு, 'அட்வைஸ்' கொடுக்கக் கூடாதா? ஒருவர் திருந்தினாலும், ஆத்ம திருப்தியும், கோடி புண்ணியமும் உங்களுக்கு கிடைக்கும்.என் அறுவைகளை எல்லாம் சகித்தமைக்கு நன்றி.- இப்படி எழுதியுள்ளார் வாசகி!திருமணமாகாத இளம் வாசகியரே... கடிதம் எழுதி உள்ள வாசகி எழுப்பியுள்ள கேள்விகள், கருத்துகளுக்கு உங்கள் பதில் என்ன?தெரிந்து கொள்ளலாமா நான்?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !