அந்துமணி பா.கே.ப.,
சென்னைக்கு முதன் முறையாக வரும் வெளியூர் அன்பர்கள், இங்குள்ள மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்பது பற்றியும், இங்குள்ள திருட்டு கும்பல், பிக்-பாக்கெட் பேர்வழிகளிடம் ஏமாறாமல் தப்புவது எப்படி என்பது பற்றியும், அனுபவப்பட்ட வாசக, வாசகியர், இ.உ.இ., பகுதியில் எழுதுவதுண்டு. நானும் அவ்வப்போது, பா.கே.ப., பகுதியில் எழுதி இருக்கிறேன்.சமீபத்தில் கேள்விப்பட்ட மோசடி சம்பவம் ஒன்று... இது, தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறினார், விஷயத்தை சொன்ன அன்பர். சென்னை பாரீஸ் கார்னரில் உள்ளது, லிங்கிச் செட்டித் தெரு. வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் பர்மா பஜாருக்கு அருகில் உள்ளது, இத்தெரு. வெளிநாட்டு பொருட்கள் மீது மோகம் கொண்ட மக்கள், இங்கு எப்போதும் அலை பாய்வதைக் காணலாம்.பொருட்களின் விலை, கடைக்கு கடை சிறிய அளவில் வித்தியாசப்படும். எனவே, ஒரே பொருளின் விலையை, நாலு கடைகளில் விசாரித்து வாங்குவது இங்கு வருபவர்களிடையே வழக்கம்.இப்படி விலை விசாரித்து கடை கடையாகச் செல்பவர்களை, பின் தொடர்ந்து செல்கிறது மோசடிக் கும்பல். விலை விசாரிக்கும் ஆசாமி, விபரம் உள்ளவரா, சுலபத்தில் ஏமாறும் பேர்வழியா என்பதை கொஞ்ச நேரத்தில் கண்டுபிடித்து விடுகிறது.ஆசாமி, ஏமாந்த சோணகிரி என்பதை கண்டு கொண்டால், சமயம் பார்த்து, நைசாக அவரை ஓரம் கட்டி, 'சார்... அருமையான 'டிவி' செட் இருக்குது... எல்லாம் ஜப்பான் 'செட்!' இங்கே, 45 ஆயிரம் ரூபாய் என்றால், 40 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம். ஏன் விலை குறைத்துத் தருகிறோம் தெரியுமா... சுங்கவரி செலுத்தாமல் கடத்தி வரப்பட்ட பொருட்கள் அவை. வாங்க, பக்கத்துத் தெருவுலதான் பொருள் இருக்குது. பொருளை வாங்கிக் கொண்டு, பணம் கொடுத்தால் போதும்...' என, பலவாறாக, ஆசாமியை மடக்கிப் போடும் விதத்தில் பேச்சுக் கொடுப்பர்.'ஆகா... ஐயாயிரம் ரூபாய் மிச்சமாகுமே... அந்தப் பணத்தில், மனைவிக்கு நாலு புடவை எடுத்துச் செல்லலாம்... இல்லே, ஜாலியா உற்சாக பானம் சாப்பிடலாம்...' என, 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, 'டிவி' பெட்டி வாங்க தீர்மானித்து, மோசடிப்பேர்வழிகளுடன் லிங்கிச் செட்டித் தெருவுக்கு செல்வார். அங்குள்ள ஒரு வங்கியின் வாகன நிறுத்தத்திற்கு அருகே, நிறுத்தி வைத்து, 'இதோ... பத்தே நிமிடத்தில் வந்து விடுகிறேன்... தம்பி உங்களுடன் இருப்பார்...' எனக் கூறி, மோசடி கும்பல் கூட்டாளி ஒருவரை, ஏமாளி அருகே நிறுத்தி, பொருள் எடுத்து வரச் செல்வார்.குறிப்பிட்ட, 10வது நிமிடம் சொன்னது போலவே, 'அட்டகாசமான, 'ஸ்மார்ட்' 'டிவி' ஒன்றை அட்டைப் பெட்டியுடன் இரண்டு மூன்று பேர் எடுத்து வருவர். ஏமாளி, சர்வ ஜாக்கிரதையாக தான் ஏமாற்றப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்து கொள்ள, 'பெட்டியைத் திறந்து காட்டுங்கள்...' என்பார்.'என்னங்க... எங்க மேலே இவ்வளவு நம்பிக்கை இல்லாம இருக்கறீங்க... எவ்வளவு, 'ரிஸ்க்' எடுத்து, உங்களுக்காக இதைச் செய்றோம்... சந்தேகப்படுறீங்களே... சீக்கிரம் பாருங்க... கஸ்டம்ஸ் அதிகாரிங்க, போலீஸ் ஏதும் வந்துடப் போகுது...' என, ஏமாளியை அவசரப்படுத்தி, பெட்டியைத் திறந்து காட்டுவர்.பெட்டியினுள், 'டிவி' இருப்பதை உறுதி செய்து கொண்ட ஏமாளி உடனே பணத்தை எடுத்துக் கொடுப்பார். 'டிவி'யை எடுத்துச் செல்ல ஆட்டோ வேண்டுமே... அங்கேயே தயாராக நிற்கும் மோசடிப் பேர்வழிகளின் ஆட்டோ, 'சர்' என்று அருகே வந்து நிற்கும்.'ம்... சீக்கிரம்... சீக்கிரம்... இடத்தைக் காலிச் செய்யுங்கள்...' என, ஏமாளியை அவசரப்படுத்துவர் மோசடிப் பேர்வழிகள். பதற்றத்தில் இருக்கும் ஏமாளி, 'டிவி' பெட்டியை ஆட்டோவில் ஏற்றி, அவரும் உள்ளே அமரும் நேரத்தில், 'சர்' என இன்னொரு ஆட்டோ வந்து, 'டிவி' பெட்டி ஏற்றப்பட்ட ஆட்டோவை மறித்து நிற்கும். அதிலிருந்து ஐந்து, ஆறு பேர், 'தொப், தொப்'பென குதிப்பர்.மப்டி போலீசார் போன்ற தோற்றத்தில், கையில் லத்தியுடன் ஆட்டோவில் இருந்து குதித்த வேகத்திலேயே அங்கே நிற்கும் ஏமாற்றுப் பேர்வழிகளை லத்தியால் அடிப்பது போல நடித்து, 'ஏண்டா... பொறுக்கி நாய்களா... திருட்டுப் பொருளா விக்கிறீங்க... இத வாங்கினவன் யாருடா... முதல்ல அவன உள்ள தள்ளணும். ஏறுங்கடா, ஆட்டோவுல... ஸ்டேஷனுக்கு வந்து பதில் சொல்லுங்கடா...' என, ஆர்ப்பாட்டம் செய்தபடி மோசடி பேர்வழிகள் சிலரை ஆட்டோவில் பிடித்து தள்ளுவர். சிலர் தப்பி ஓடுவதைப் போல் நடிப்பர்.இந்தக் களேபரம் நடந்து கொண்டிருக்கும் போதே, ஏமாளியிடம், 'அய்யய்யோ... போலீஸ் வந்து விட்டது... மாட்டிக்கிட்டோம்... ஸ்டேஷனுக்குப் போனா, முட்டிக்கு முட்டி தட்டி எலும்பை உடைச்சிடுவாங்க... ஓடிடுங்க...' என கூறுவான், மோசடிப் பேர்வழி ஒருவன்.போலீஸ், கோர்ட், கேஸ், அடி, உதை, ஜெயில், அவமானம் எல்லாம் எதுக்கு என நினைத்து, தப்பினால் போதும் என கூட்டத்தில் மறைந்து, பணம் போனால் போகட்டும் என ஓட்டம் எடுப்பார் ஏமாளி!போலீசார் போல வந்ததும் மோசடிப் பேர்வழிகளின் கையாள்கள் தான். அடிப்பது போல அடித்து, மோசடிப் பேர்வழிகளை இழுத்துச் செல்வது போல் நடந்து கொள்வது எல்லாமே, 'செட்- அப்' தான்!- அருமையான ஜோடிக்கப்பட்ட நாடகம் இது. இதில், ஆட்டோக்காரர்கள் உட்பட நாடகத்தில் கலந்து கொண்ட அனைவருக்குமே பங்கு உண்டு; கிடைத்த, 40 ஆயிரம் ரூபாயை தகுதிக்கேற்ப, செய்ற வேலைகளுக்கு தகுந்தபடி பின்னர் பிரித்துக் கொள்வர். இந்த நாடகம், வாரத்தில் மூன்று முதல் நான்கு முறையாவது அரங்கேறுகிறது. போலீசாருக்கு தெரியாமல் இருக்க நியாயம் இல்லை!உஷாராக இருங்கள்!சமீபத்தில் ஒரு வித்தியாசமான புத்தகத்தை படிக்க நேர்ந்தது; புத்தகத்தின் பெயர், 'மூதாதையரைத் தேடி!'மனிதனின் மூதாதை குரங்கு என்று சொன்னார், சார்லஸ் டார்வின் என்ற ஆராய்ச்சியாளர்.அப்படியானால், குரங்கிலிருந்து மனிதன் தோன்றியது உண்மையென்றால், குரங்குகள் ஏன் இன்னும் குரங்குகளாகவே இருக்கின்றன... இந்தக் கேள்வி இன்னும் பல ஆராய்ச்சியாளர்களின் மண்டையைக் குடைந்து கொண்டே இருக்கிறது.இதற்கும், இன்னும் இது போன்ற பல கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் நுாலாசிரியர், சு.கி.ஜெயகரன்.புத்தகத்திலிருந்து...கடந்த, 700 கோடி ஆண்டுகளுக்கு முன், பூமியில் எந்த உயிர் இனங்களும் தோன்றியிருக்கவில்லை. அப்போது - இருந்த பாறைகள் தான் இப்போதும் நீலகிரி மலைத் தொடரிலும், சேர்வராயன், கல்வராயன், ஜவ்வாது மலைத் தொடர்களிலும் இருக்கின்றன.அடுத்து, நமது மூதாதையரின் (அதாவது குரங்கு!) படிப்படியான வளர்ச்சியை படங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.ஒன்றரை கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த குரங்கு, 60 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த குரங்கு, பிறகு, 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்த ஹோமோ ஹேமிலைன் என்ற குரங்கு. இதற்குப் பின் தான் குரங்கு உருவம் கொண்ட நியாண்டர்தால் மனிதனின் வளர்ச்சி!- இந்தப் புத்தகத்தைப் பற்றி லென்ஸ் மாமாவிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்... 'இதே போல் வேறொரு புத்தகம் ஆங்கிலத்தில் வந்திருக்கிறது; 'கரப்பான் பூச்சிகளின் தோற்றமும், வளர்ச்சியும்' படிக்கிறாயா?' என்று கேட்டார்.'வேலை இருக்கிறது' என்று சொல்லி தப்பியோடி வந்து விட்டேன்!