உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

கே'உலகில், தினமும், பல கண்டுபிடிப்புகள் புதிது புதிதாக அறிமுகம் ஆகின்றன. அத்துடன், கீழ்கண்டவற்றிற்கும் கண்டுபிடிப்புகள் தேவை. யாராவது முயற்சி செய்வரா...' என்றபடி வந்தமர்ந்தார், குப்பண்ணா.அவருக்கு, மிதமான சூட்டில் காபி கொடுத்து, 'என்ன' என்று கேட்டேன். சொல்ல ஆரம்பித்தார், குப்பண்ணா:* மனதில் எழும் கவலைகளை அழிக்க ஏதுவாய், ஒரு கருவி அல்லது மருந்து* சிலரை, 'புத்தகத்தையே கரைச்சு குடிச்சுட்டா'ன்னு சொல்வோம். உண்மையில், அப்படி மட்டும் கரைத்து குடிக்க முடிந்தால், எப்படி இருக்கும்... அத்துடன், கரைத்து குடித்தது அனைத்தும் அப்படியே சென்று மனதில் பதிந்திருந்தால், மேலும் எப்படி இருக்கும்... இதை நிறைவேற்ற தேவை, ஒரு கண்டுபிடிப்பு* தேர்தலின்போது, நம் அரசியல்வாதிகள், ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசுவர். பின், அவற்றை மறந்தும் விடுவர். இவர்களுக்கு ஞாபகப்படுத்த, செய்து முடிக்க ஏதுவாய், ஒரு கருவி தேவை* உடலில் நம்மை கேட்காமலே ஏறி விடும் கொழுப்பு தான், பலரது பிரச்னை. ஒரு மந்திர கருவியை உடலில் பொருத்தினால், கொழுப்பு பூரா கரைஞ்சிடணும். தயவுசெய்து கண்டுபிடியுங்களேன். அது, உண்மையில் உலகில் மிக அதிகம் விற்கும் கருவியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்* விலங்குகளும், பறவைகளும் பேசிக்குதுன்னு தெரியுது. ஆனா, என்ன பேசுதுன்னு புரியலே. இதை அறிந்துகொள்ள ஏதுவாய், கருவி கண்டுபிடியுங்களேன்* தினமும், சாதம், கறி, குழம்பு, ரசம் செய்ய ஒரு கருவி தேவை. இவற்றையும் கண்டுபிடித்து, பெண்களை காப்பாற்றுங்களேன்.- 'இப்படி ஒரு கட்டுரையை, இப்பத்தான் படித்தேன், மணி. உங்கிட்ட சொல்லணும்ன்னு தோணிச்சு... சொல்லிட்டேன்...' என்றார், குப்பண்ணா.உண்மையிலேயே, இதற்கெல்லாம் கருவிகளை கண்டுபிடித்தால், நன்றாக தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.பநாணயவியல் அறிஞரான, ஆசிரியர், இரா.கிருஷ்ணமூர்த்தியின் அறையை ஒழுங்குபடுத்தும்போது, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய ஆராய்ச்சி கட்டுரையை, படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்திய தேர்தல் ஆணையராகவும் முன்பு பணியாற்றியவர், பாலகிருஷ்ணன். சிறந்த தமிழ் அறிஞர். இவரது 'சிந்து சமவெளி நாகரிகமும், சங்க இலக்கியமும்' என்ற கட்டுரையில், அவர்களின் மொழி குறித்தும், சங்க கால பண்பாட்டுடன் சிந்து சமவெளிக்கு உள்ள தொடர்பு குறித்தும் விளக்கியுள்ளார். அது:சிந்து சமவெளி பற்றி ஏராளமான புதிய ஆய்வுகள், விளக்கங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதற்கு நிகராக, ஆதிச்சநல்லுார் பற்றிய ஆய்வுகள் செய்யப்படவில்லை. ஆதிச்சநல்லுாரின் தொன்மையை, தமிழகத்திலேயே பெரும்பான்மையான மக்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை. தமிழர்களின் தொன்மையான நாகரிகத்துக்கு சான்றாக உள்ளது, ஆதிச்சநல்லுார். திருநெல்வேலியிலிருந்து, ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில், 24 கி.மீ., துாரத்தில், பொன்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ளது, ஆதிச்சநல்லுார். தாமிரபரணி ஆற்றின் தென் கரையில் உள்ள சிறிய கிராமம். இங்கே, 114 ஏக்கரில், மிகப்பெரிய இடுகாடு உள்ளது.சீனிக்கல் நிரம்பிய நிலப்பரப்பான, இந்த இடுகாடு, 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது. அக்காலங்களில் இறந்தவர்களை பானையில் வைத்து புதைப்பர். அந்த பானையை, 'ஈமத் தாழி' என்று சொல்வர். மூன்று அடுக்குகளாக புதைக்கப்பட்ட ஈமத் தாழிகள், ஆதிச்சநல்லுாரில் ஏராளமாக கிடைக்கின்றன.ஆதிச்சநல்லுார் புதை மேட்டை, முதன் முதலில் ஆராய்ந்தவர், ஜெர்மனி நாட்டை சேர்ந்த அகழ்வாராய்ச்சியாளர், டாக்டர் ஜாகர். 1876ல், ஆய்வுக்காக வந்த, ஜாகர், தற்செயலாக கண்டுபிடித்தது தான், இந்த தொல் தமிழர்களின் நாகரிக சின்னம்.ஆதிச்சநல்லுாரில், ஈமத் தாழிகள், இறந்தவர்களின் உடல்கள் மற்றும் விதவிதமான மண் பாண்டங்கள், இரும்பால் செய்யப்பட்ட பொருட்கள், சிலைகள், நகைகள், விளக்குகள், மணிகள் மற்றும் கருவிகள் என, 4,000திற்கும் மேற்பட்ட சான்றுகள் கிடைத்துள்ளன.இந்த சான்றுகளை ஆராய்ந்த அறிஞர்கள், 'இவை, சிந்து சமவெளி நாகரிகத்துக்கு முற்பட்டதாக இருக்கலாம்...' என்று கருதினர்.தமிழர் நாகரிகம் அவ்வளவு தொன்மையானது என்றால், ஏன் அதற்கான இடம் இன்றும் கிடைக்கவில்லை என்று ஆராய்ந்து பார்த்தால், அதன் பின்னே, ஓர் அரசியல் இருப்பதை உணர முடிகிறது.ஆரியர்களின் வருகைக்கு பிறகே, இந்தியாவுக்கு பண்பாடு வந்தது என்ற பொய்யை, நம் மனதில் பதிய விட்டனர். அதற்கு எதிராக, இதுபோன்று தொன்மையான தமிழர் நாகரிகம் இருந்திருக்கிறது.அன்றாடம் பயன்படுத்தும் மண் கலயங்களில், எழுத்துருக்கள் பொறிக்கப்பட்டிருப்பது, அன்று, கல்வியில், தமிழ் மக்கள் மேம்பாடு அடைந்திருந்தனர் என்பதன் சான்றாகவே உள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு, 800 ஆண்டுகளுக்கு முன்பே, ஆதிச்சநல்லுாரில் நாகரிகம் மிக்க மக்கள் வாழ்ந்திருக்கின்றனர்.ஆதிச்சநல்லுாரில், தொல்லியல் துறை அறிஞர், சத்தியமூர்த்தி, 2004ல் நடத்திய ஆய்வே முக்கியமானது. அதில், 'பல்வேறு எலும்புக்கூடுகள், உடையாத மண் பாண்டங்கள், பல்வேறு வடிவ கிண்ணங்கள், பானைகள், குடுவைகள், ஜாடிகள், கழுத்து மாலைகள், மணிகள், மாவரைக்கும் கல், கழுத்தாணிகள், காப்புகள், வளையல்கள், மோதிரங்கள் என, நிறைய சான்றுகள் கிடைத்துள்ளன.'தொன்மையான நாகரிகத்தை உடைய ஒரு பிரதேசம் தமிழகம் என்பது, பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் நிரூபிக்கின்றன. இதை உறுதி செய்வது போல, ஆதிச்சநல்லுாரில் கிடைத்துள்ள தடயங்கள், 3,000 ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் பண்பாட்டு வளத்துடன் வாழ்ந்தனர் என்பதை காட்டுகிறது...' என்கிறார், சத்தியமூர்த்தி. - இப்படி எழுதியுள்ளார், பாலகிருஷ்ணன்.சங்க இலக்கியத்துக்கும், சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் இடையில், ஒரு தொப்புள் கொடி உறவு இருந்திருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய ஆய்வை, பழந்தமிழ் நாகரிக கூறுகளுடன் இணைந்தே, இனி வரும் ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டும். அப்போது தான், தமிழர் பண்பாடு தனித்துவம் மிக்கது என்பதை, உலகுக்கு உணர்த்த முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !