அந்துமணி பா.கே.ப.,
பா - கேஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் -லென்ஸ் மாமா அழைப்பை ஏற்று, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன்.அரை, 'டவுசர், டீ - ஷர்ட்' அணிந்தபடி, 'ரிலாக்ஸ்' ஆக அமர்ந்திருந்தார், மாமா. எதிரில் இருந்த, டீப்பாய் மீது, 'பலான பலான' ஐட்டங்கள் அணிவகுத்திருந்தன.'மாமி ஊரில் இல்லையா, மாமா...' என்றேன்.'ஆமாம் மணி... அவ அம்மா வீட்டுக்கு போயிருக்கா... வெயில் மண்டையை பிளக்குதா, அதான் வெளியே எங்கும் போக வேண்டாம்ன்னு முடிவு செய்து, உன்னையும் வரச்சொன்னேன்...'உனக்காக, அவியல், சேப்பங்கிழங்கு வறுவல், எலுமிச்சை ரசம், தயிர் சாதம் எல்லாம், 'ரெடி'யா இருக்கு. சாப்பிட வர்றியா...''கொஞ்ச நேரம் ஆகட்டும்...' என்றேன்.'கொஞ்சம் இரு... இதோ வர்றேன்...' என்றவர், சமையல்அறைக்குள் சென்றார்.சுவரில் மாட்டப்பட்டு இருந்த, 48 அங்குல, 'டிவி'யில், பி.பி.சி., சேனலில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது. நான் அங்கிருந்த ஆங்கில இதழ் ஒன்றை எடுத்து, புரட்ட ஆரம்பித்தேன்.'இந்தா மணி, நன்னாரி சர்பத், குடி...' என்று கொடுத்தார்; 'ஜில்'லென்று வெயிலுக்கு இதமாக இருந்தது.என் கையிலிருந்த ஆங்கில இதழை வாங்கி, 'மணி... இந்த புத்தகத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருக்கிறது... அதில் என்ன போட்டிருக்குன்னு தெரியுமா...' என்று சொல்ல ஆரம்பித்தார்:திறமை உள்ள ஊழியர்களை எந்த நிறுவனமும் இழக்க விரும்பாது. அதனால், அவர்களுக்கு கூடுதல் சலுகை மற்றும் விடுமுறைகளை வழங்கி, தக்க வைக்கவே முயற்சிக்கும். இந்த வகையில் சில நிறுவனங்களில் தரப்படும் விடுமுறைகள் இவை:* ஊழியர்களின் வீடுகளில் திடீர் சம்பவங்கள் நடந்து, அதனால், வாழ்க்கையே புரட்டி போடப்பட்டிருந்தால், அவருக்கு, தேவையான விடுமுறைகளை தாராளமாக வழங்கும், நிறுவனம். மீண்டும் வேலையை ஏற்கும் பக்குவம் பெறும் வரை, விடுமுறை தொடரும்* பிறந்த நாள் கொண்டாடவும், ஒருநாள் சிறப்பு விடுமுறை உண்டு* நிம்மதியாக, ஜாலியாக இருந்து வர விரும்புகிறீர்களா... இதற்கு, 'வெல் பீயிங் டே' என்று விடுமுறை தருகின்றனர்* பெண் ஊழியர், கர்ப்பமாகி, எதிர்பாராத விதமாய், கருச்சிதைவு ஏற்பட்டால், அவருக்கு, ஆறு வார விடுமுறை உண்டு. பாதிக்கப்பட்டவரின் மனதை தேற்ற, கணவருக்கும், ஆறு வார விடுமுறை அளிக்கப்படும்* இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தோர், சுயமாக புது கம்பெனி துவக்க விரும்பினால், இரண்டு ஆண்டுகள் வரை விடுமுறை தரப்படுகிறது.மேலும் சிலர், 'டெரிடோரியல் ஆர்மி' அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்துக்குரிய ராணுவத்தில், பணிபுரிய விரும்பினால், அதற்கு, 90 நாள் விடுமுறை உண்டு. ராணுவத்தில் தரும் சம்பளம், வேலை பார்க்கும் நிறுவனத்தில் தரும் அடிப்படை சம்பளத்தை விட குறைவாக இருந்தால், 90 நாட்களுக்கு, நிறுவனத்தின் அடிப்படை சம்பளத்தில், 50 சதவீதம் வழங்கப்படும். இதை, 'தேசத்திற்காக சேவை விடுமுறை' என, அழைக்கின்றனர்* நோய்வாய்பட்டோருக்கு, சிகிச்சை பெற எவ்வளவு நாள் விடுமுறை தேவை என்றாலும், எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது* பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வோருக்கு, 30 நாள் விடுமுறை தரப்படுகிறது* ஒரு ஊழியருக்கு, 'எமர்ஜென்சி' ஆக, நிறைய விடுமுறை தேவைப்படுகிறது. ஆனால், அவரிடம், கையிருப்பு விடுப்பு இல்லை. இந்த சூழலில், சக ஊழியர், தன் விடுமுறை நாட்களை, தேவைப்படும் ஊழியருக்கு தரலாம். இதை நிறுவனம் ஏற்று, தேவைப்படுவோருக்கு அதை மாற்றி தருகிறது* குடும்பத்தில் ஒருவர், நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடன் இருந்து கவனிக்க வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவு நாள் வேண்டுமானாலும் விடுமுறை தருகின்றனர்* சில நிறுவனங்களில், 'டாப் அப்' விடுமுறை என, அளிக்கின்றனர். இதன்படி, ஒருவர் சுற்றுலா செல்கிறார். அவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆண்டு விடுமுறை நாட்களை தவிர்த்து, கூடுதலாக, ஐந்து நாட்கள் வரை, நிறுவன விடுமுறை தரப்படுகிறது. இப்படி விடுமுறைகளை வழங்க முக்கிய காரணம், ஊழியருக்கு நிறுவன விசுவாசம் கூடி, அதனால் உற்பத்தி திறனையும் உயர்த்த இயலும் என்பது தான்.- இவ்வாறு, லென்ஸ் மாமா கூறி முடித்ததும், 'இதெல்லாம் எந்த நிறுவனத்தில்?' என்றேன்.'ஒன்று இல்லை, பல நிறுவனங்களில் இதை நடைமுறைபடுத்தி உள்ளனர். இதில் பாதிக்கு பாதி, இந்தியாவை சேர்ந்த, கோடிக்கணக்கில், 'டேர்ன் ஓவர்' செய்யும் நிறுவனங்கள் என்றால், நம்புவது கடினமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை...' என்றார், லென்ஸ் மாமா.ஒரு தகவல் கிடைத்த மகிழ்ச்சியில், மாமாவின் கைப்பக்குவத்தில் தயாரான உணவு வகைகளை ருசித்து சாப்பிட்டு, ஒரு குட்டி துாக்கம் போட்டு, கிளம்பினேன்.கேபல்கலை கழகத்தில் பணிபுரியும் நண்பர், ஒருநாள் என்னை சந்திக்க வந்திருந்தார். அவருடன் பேசியபோது, கிடைத்த தகவல் இது:அரசவையில் மன்னர், சிம்மாசனத்தில் வீற்றிருக்க, தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லுாரிக்கு நிதி கேட்டு வந்தார், ஒருவர்.அந்த மன்னர், ஹிந்து என்றாலே கோபப்படுபவர்.'நிதி தானே... இந்தா...' என, தன் காலில் இருந்த, ஷூவை, வந்தவர் மேல் வீசி எறிந்தார்.எதிர்பாராத நிகழ்வால் நிலை குலைந்தார், வந்தவர். அவமானம் மனதை கஷ்டப்படுத்தியது. இருந்தாலும், ஒரு நல்ல விஷயத்துக்காக தானே அவமானப்படுகிறோம் என, மனதை தேற்றி, மன்னருக்கு நன்றி சொல்லி, கிளம்பினார்.'என்னடா, நாம் அவமானப்படுத்த, ஷூவை வீசினோம்... நன்றி சொல்லி செல்கிறானே...' என, நினைத்தார், மன்னர்.சிறிது நேரத்தில், வெளியில் ஒரே சத்தம்.அமைச்சரை அழைத்த மன்னர், 'அங்கே என்ன சத்தம்...' என்றார்.'நீங்க எறிந்த ஷூவை ஏலம் போடுகிறான்... 'கல்லுாரி கட்ட, மன்னர் தந்த ஷூ...' என்று கூவுகிறான், மன்னா...' என்றார், அமைச்சர்.'எவ்வளவு போகிறது...''படு கேவலமாய், 10 நாணயத்துக்கு மேல் ஏலம் போகவில்லை...' என்றார்.'அய்யய்யோ... என்ன விலையானாலும் ஏலம் எடு...' என்றார், மன்னர்.அமைச்சர், 50 லட்சம் கொடுத்து, எடுத்தார்.நிதி கேட்டு வந்தவர், மீண்டும் மன்னரிடம் வந்தார்.'மன்னா... நீங்கள் போட்ட ஷூவால், பாதி கட்டடம் கட்ட நிதி கிடைத்து விட்டது... அடுத்த ஷூவை எப்போது போடுவீர்கள்...' என்றாரே, பார்க்கணும்.வந்தவரின் சாமர்த்தியத்தையும், சகிப்புத்தன்மையையும் பாராட்டி, தாமே கல்லுாரியை கட்டித் தர முன் வந்தார், மன்னர்.அதுதான், தற்போது, உ.பி.,யில் உள்ள, 'பனாரஸ் இந்து பல்கலை கழகம்!'அந்த காலணி வீசப்பட்டது, மதன் மோகன் மாளவியா மீது. அவர் தான், பனாரஸ் பல்கலை கழகத்தை நிறுவியவர்.- என்று கூறி முடித்தார், நண்பர்.கல்வியால் தான் நாடும், மக்களும் வளம் பெறுவர் என்பதற்காக, நம் முன்னோர் எப்படியெல்லாம் பாடுபட்டுள்ளனர் என்று நினைத்துக் கொண்டேன்.