உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா-கேசமீபத்தில், சுவிட்சர்லாந்து சென்று, திரும்பியிருந்தார், தொழிலதிபரான நண்பர் ஒருவர். ஒரு ஓட்டலில் தங்கி இருந்தவருக்கு, அங்கிருந்த ஒரு அறிவிப்பு பலகை செய்தி, அதிர்ச்சியை தந்துள்ளது. அதுபற்றி தெரிவிக்க அலுவலகம் வந்திருந்தார்.சுவிட்சர்லாந்து பற்றி பல விஷயங்களை கூறியவர், அறிவிப்பு பற்றி கூற ஆரம்பித்தார்:இந்தியாவிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு, இங்கு, இதை செய்யலாம்; இதை செய்யக் கூடாது என, ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தது, ஓட்டல் நிர்வாகம்.அது பற்றி விசாரிக்க, கிடைத்த பதில் அதிர்ச்சியாக இருந்தது.சமீபத்தில், ஓட்டலில் தங்கி, காலி செய்து கிளம்பிய ஒரு பெண்ணை, 'உங்கள் உடைமைகளை சோதனை செய்யலாமா...' என கேட்ட போது, ஆவேசமாக, 'என்னை என்ன திருடின்னு நினைச்சீங்களா...' என, எகிறியுள்ளார்.அவர் கூறியதை அலட்சியம் செய்து, ஓட்டல் சார்பில், பெட்டியை திறந்து சோதித்தபோது, அதனுள், ஓட்டலுக்கு சொந்தமான, துண்டு, 'ஹேர் டிரையர்' மற்றும் அலங்கார பொருட்கள் இருந்தன.பிடிபட்டதும், 'அனைத்துக்கும், பணம் கட்டி எடுத்துச் செல்ல தயார்...' என்றிருக்கிறார், அந்த பெண்.இதை பார்த்த, அங்கிருந்த சில இந்தியர்களுக்கு, தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் மட்டுமல்ல, பல நாடுகளிலும் இந்தியர்கள் நடந்து கொள்ளும் விதமே இதுதான்.- எனக் கூறியவர், வெளிநாடுகளில் ஓட்டலில் தங்குபவர்களுக்கு, சில, 'டிப்ஸ்'களை வழங்கினார். அது:* சொகுசு ஓட்டல் என கருதப்படும் ஓட்டல் அறைகளில், தங்கும் விருந்தினர்களுக்கு தேவைப்படும், 'சென்ட்' உட்பட அனைத்தும் இருக்கும். அவற்றை எடுத்து, நாம் தாராளமாக பயன்படுத்தி, மீண்டும் அங்கேயே வைத்து விடவேண்டும். எடுத்துச்செல்ல உரிமை இல்லை* துண்டு, குளிப்பதற்கு முன்பும் பின்பும் அணிய உதவும், 'தொள தொள' ஆடை, படுக்கை விரிப்பு, சாப்பிட பயன்படும் முள் கத்தி, ஸ்பூன் மற்றும் பவுடர் உட்பட அனைத்தும், அறையினுள் வைக்கப்பட்டிருக்கும்; லாண்டரி பை கூட இருக்கும். இவற்றை பயன்படுத்தலாம்; ஆனால், எடுத்துச் செல்லக்கூடாது* அறை வாடகையுடன், காலை டிபன் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, 'ஜாம், கெட்ச்சப் பாக்கெட்'கள் அறைகளில் இருக்கும். டிபன் சாப்பிடும்போது அவற்றை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதியில்லை* சில ஓட்டல் அறைகளில் மது வகைகள் இருக்கும். வேண்டுமளவிற்கு அவற்றை பயன்படுத்தி, அதற்கு உரிய பணத்தை தரவேண்டும். அவை, விலை அதிகம் என நினைத்தால், வெளியிலிருந்து வாங்கி வந்து சாப்பிடலாம்.பெரிய ஓட்டல்களில், 'காலி செய்கிறேன்...' என, நீங்கள் கூறியதும், ஓட்டல் ஊழியர்கள் வந்து, சோதனை செய்து, எது எது, 'மிஸ்சிங்' என கண்டுபிடித்து, வரவேற்பறையில் கூறிய பிறகுதான் காலி செய்ய முடியும்.ஏதாவது எடுத்திருந்தால், அவர்கள் கேட்கும்போது, கொடுத்து விட்டால், பெரும்பாலான ஓட்டல்களில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர்.ஆக, ஓட்டல்களுக்கு செல்வோர், அங்குள்ளவற்றை அனுபவியுங்கள். மறந்தும் அவற்றை சுருட்ட நினைத்து, பிறகு மாட்டி அவமானப்பட வேண்டாம்; இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றவும் வேண்டாம்.- இவ்வாறு கூறி முடித்தார், நண்பர்.வெளிநாடு செல்பவர்கள் இனி, இதை மனதில் வைத்திருப்பீர்கள் தானே!பகிராமம் ஒன்றில் அறிஞர் ஒருவர் இருந்தார். நிதி விவகாரம் குறித்து, மன்னரே அவரிடம் கருத்துகளை கேட்பார் என்றால், அவரின் அறிவை பற்றி புரிந்து கொள்ளலாம்.ஒருநாள், கிராம தலைவர், அவரிடம், 'நீங்கள் பெரிய அறிஞர் என்று நாடே போற்றுகிறது; மன்னரும் கூறுகிறார். ஆனால், உங்கள் பையனோ அடி முட்டாளாக இருக்கிறானே...' என்று கிண்டலாக கூறினார்.ஒன்றும் புரியாமல், 'என்னவென்று விளக்கமாக சொன்னால் தானே புரியும்...' என்றார், அறிஞர்.'தங்கம், வெள்ளி, இந்த இரண்டில் மதிப்பு கூடியது எது என்று, உங்கள் பையனிடம் கேட்டதற்கு, 'வெள்ளி' என்று பதில் சொல்கிறான்...' என்றார், தலைவர்.இதைக் கேட்ட, அறிஞர் அதிர்ச்சிக்குள்ளானார். 'என் மகன், அவ்வளவு முட்டாளா என்ன... தங்கத்திற்கும், வெள்ளிக்கும் உள்ள மதிப்பு கூட அவனுக்கு தெரியாதா...' என்று மனதிற்குள் எண்ணி வருத்தமுற்றார்.வீட்டிற்கு சென்ற, அறிஞர், மகனை அழைத்து, 'தங்கம், வெள்ளி, இவை இரண்டிலும் அதிக மதிப்பானது எது...' என்று கேட்டார்.பட்டென்று, 'தங்கம்' என, கூறினான்.மகன், சரியான பதிலை சொன்னதும், மகிழ்ச்சியாக இருந்தது. ஆனாலும், ஊர் தலைவர் ஏன் அப்படி சொன்னார் என்று குழம்பினார்.'அப்புறம் எதற்காக, தலைவர் கேட்கும்போது, வெள்ளி என்று தப்பாக பதில் சொன்னாய்...' என்று கேட்டார்.'நான் பள்ளிக்கு செல்லும்போது, தங்க நாணயம் ஒன்றையும், வெள்ளி நாணயம் ஒன்றையும் கையில் வைத்துக்கொண்டு, 'அறிஞரின் மகனே, இங்கே வா' என்று கிண்டலாக அழைப்பார், தலைவர். 'இந்த இரண்டில், எது மதிப்பு அதிகமானதோ அதை எடுத்துக் கொள்...' என்பார். 'உடனே, நான் வெள்ளியை எடுத்துக் கொள்வேன். அவரும், சுற்றி இருப்பவர்களும் என்னை பார்த்து கிண்டலும், கேலியுமாக சிரிப்பர். ஆனால், நான் அதை பற்றி கவலைப்படாமல், வெள்ளி நாணயத்தை எடுத்து திரும்பி விடுவேன். 'ஓராண்டாக இந்த கூத்து நடந்து கொண்டிருக்கிறது. நான், தங்க காசை எடுத்தால், அந்த விளையாட்டை அத்துடன் முடித்துக் கொண்டிருப்பார். எனக்கும் இவ்வளவு காசுகள் கிடைக்காமல் போயிருக்கும்...' என்றான்.தன் மகனின் புத்தி சாதுர்யத்தை நினைத்து, அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்தார், அறிஞர்.அறிஞர்கள் சிலர், முட்டாள்களாக வேடமணிந்திருப்பர். அது, அவர்களின் புத்தி சாதுர்யமாகும். உண்மையிலேயே அவர்களை முட்டாள்கள் என்று கருதினால், நாம் தான் முட்டாள்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !