அந்துமணி பா.கே.ப.,
கேதனியார் பால் உற்பத்தி நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற நண்பர் ஒருவர் கூறிய தகவல் இது:'அமுல்' பால் நிறுவனம் துவங்கி, வெற்றிப் பாதையில் கால் பதித்த காலம் அது. தன் நிறுவன பாலில் முக்கால் பங்கை, மும்பை பால் கழகத்திற்கு வினியோகம் செய்து கொண்டிருந்தது. திடீரென, பால் வாங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க துவங்கியது, பால் கழகம்.ஒரு கட்டத்தில், 'அமுல்' நிறுவனத்தில் பால் தேங்க, பெரும் சிக்கல் ஏற்பட்டது.பால் வாங்குவதை பால் கழகம் ஏன் குறைத்தது என, ஆராய்ந்தபோது, தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான, நியூசிலாந்தில் இருந்து, ஏராளமான பால் பவுடர் இலவசமாக கிடைப்பது தெரிய வந்தது. அதை கரைத்து, பாலாக கொடுக்க ஆரம்பித்தது தான் காரணம்.மிஞ்சும் பாலை என்ன செய்வது என திகைத்தது, அமுல் பால் நிறுவனம். இதற்கு ஒரே தீர்வு, தானும் பால் பவுடர் தயாரிப்பது என்றும், அதற்காக, புதிய தொழிற்சாலை ஒன்றை துவங்குவது என்றும் முடிவானது.கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் வைப்பு தொகையிலிருந்து, 10 லட்சம் ரூபாய் பெற்று, அப்போதைய ஜனாதிபதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம், புதிய தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினர். அடுத்து, பிரதமர் நேரு மூலம் தொழிற்சாலையை திறக்க முடிவாயிற்று. அக்., 31, 1955ல், திறப்பு விழாவுக்கு வருகை தர ஒப்புக்கொண்டார், நேரு.குறுகிய காலத்திற்குள், கட்டடம் கட்டி, பால் பவுடர் தயாரிப்பும் உறுதியாகி, நேரு, துவக்க வேண்டும் என்ற நிலை. இதில் ஒரு பிரச்னை ஏற்பட்டது.ஐரோப்பிய நாடுகளில், பால் பவுடர் தயாரிப்பு, மிக ஜோராக நடந்து வந்தாலும், அந்த நாடுகளில், பசு மாட்டின் பாலில் இருந்து தான், பால் பவுடர் தயாரித்தனர்.இந்தியாவில், குஜராத்தில் உள்ள, கோடா மாவட்டம் முழுவதும், பெரும்பாலான பால் வியாபாரிகளிடம், எருமை மாடுகள் தான் இருந்தன. அவர்களிடமிருந்து, 'அமுல்' நிறுவனம் வாங்கும் பால் முழுவதும், எருமை பால் தான்.எருமை மாடுகள், வெயில் காலத்தை விட, குளிர் காலத்தில், இரு மடங்கு பால் கொடுத்தன. இதுவும், அமுல் நிறுவனத்துக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியது.எருமை பாலில், பால் பவுடர் தயாரிக்கும் முறை, உலகம் முழுவதும் நடைமுறைக்கு வராத காலம். 'அமுல்' நிறுவனத்தில், பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தின் இன்ஜினியராக இருந்த, தலாயா, முதலில் சிறிய அளவில் பால் பவுடர் தயாரித்து பார்த்தார். பால் பவுடர் கிடைத்தது; அதனால், நம்பிக்கை கொண்டார்.அப்போது, பம்பாய் மாகாண முதல்வராக இருந்தவர், மொரார்ஜி தேசாய். அவர், பால் பண்ணை தொழிற்சாலை துவக்க விழாவுக்கு ஒரு வாரத்துக்கு முன் வந்தார். புதிய பால் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலையையும், பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தையும் பார்வையிட்டார்.பிறகு, 'அமுல்' பால் நிறுவனர், குரியன் மற்றும் இன்ஜினியர் தலாயாவை அழைத்தார். என்னமோ, ஏதோ என்று ஓடி வந்தனர்.முதல்வரின் கையில் ஏகப்பட்ட கடிதங்கள் இருப்பதை பார்த்தனர். அவை அனைத்தும் வெளிநாட்டு வல்லுனர்கள் எழுதியது. அத்தனை கடிதத்திலும் இருந்த ஒரே வாசகம், 'எருமை பாலை வைத்து, பால் பவுடர் தயாரிக்க முடியாது...' என்று எழுதியிருந்தது.பால் பவுடர் தயாரிக்கும் இயந்திரத்தை காண்பித்து, 'இந்த குழாயின் வழியாக தான், எருமை பாலில் தயாரிக்கப்பட்ட, பால் பவுடர் கொட்ட போகிறது...' என்று குரியன் கூறியபோது, சந்தேகமாக பார்த்தார், மொரார்ஜி தேசாய்.'பால் பவுடர் கொட்டினால் சந்தோஷம்; கொட்டா விட்டால், பிரதமரின் முன் அனைவருக்கும் அசிங்கமாகி விடும். ஒருவேளை, உங்கள் முயற்சி தோல்வி அடைந்து விட்டால்...' என்று இழுத்தார், மொரார்ஜி தேசாய்.'கவலை வேண்டாம்... அதற்கும் ஒரு திட்டம் வைத்துள்ளேன்...' என்று, பால் பவுடர் இயந்திரத்தின் மேலே இருந்த ஒரு அறையை சுட்டிக் காட்டி, இங்கு, நான்கு மூட்டை வெளிநாட்டு பால் பவுடர் தயாராக உள்ளது. 'ஒருவேளை, இந்த இயந்திரம் ஒழுங்காக வேலை செய்ய தவறினால், இங்கிருக்கும் பால் பவுடர் மூட்டைகளிலிருந்து அங்கே பொருத்தப்பட்டுள்ள ஒரு குழாய் வழியாக ரகசியமாய் இறங்கி, பால் பவுடர் கொட்டும் வகையில் ஏற்பாடு செய்துள்ளேன். பிரதமருக்கும் சந்தேகம் வராது...' என்றார், குரியன்.'சரி... சமாளிக்க, திட்டமும் வைத்துள்ளனர்; பார்த்துக் கொள்ளலாம்...' என நினைத்து, கிளம்பி விட்டார்.அக்., 31, புதிய பால் தொழிற்சாலையின் திறப்பு விழாவிற்கு, பிரதமர் நேரு வர, சில மணி நேரங்கள் இருந்தன. இத்தகைய சூழலில், எருமை பால் பவுடர் முயற்சியை கைவிடாமல், தொடர்ந்து கொண்டிருந்தார், இன்ஜினியர், தலாயா.திடீரென, வெற்றி; நிஜமாகவே, எருமை பால் பவுடர் கொட்ட ஆரம்பித்தது. கேள்விப்பட்டு ஓடி வந்தார், குரியன். மகிழ்ச்சியில், பால் பவுடரை எடுத்து, இன்ஜினியர் தலாயாவின் வழுக்கை தலையில் பூசினார்; இன்ஜினியரும் பதிலுக்கு, குரியன் முகத்தில் பவுடரை பூச... அங்கு, மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தது.கடைசியாக, 'எதுக்கும் இன்னொரு முறை சென்று பார்ப்போம்...' என வந்த, மொரார்ஜி தேசாய்க்கும் அதை காட்டி நிரூபிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் பாராட்டி, மகிழ்ச்சியுடன் திரும்பினார்.பால் பவுடர் தொழிற்சாலையை திறந்து, இயந்திரத்தை, 'ஆன்' செய்தார், நேரு. சில நிமிடங்களில், எருமை பால் பவுடர் கொட்டியது. எருமை பாலிலிருந்தும், பால் பவுடர் தயாரிக்க இயலும் என, உலகிற்கே முதல் முறையாக நிரூபித்தது, 'அமுல்' நிறுவனம்; அத்துடன், வெளிநாட்டு உதவி மற்றும் நிபுணர் என, யாரும் இல்லாமல் சுயமாக, 'அமுல்' நிறுவனமே இந்த வெற்றியை பெற்றது.அப்போது, இந்தியாவின் பால் பவுடர் சந்தையில் பெரும் பகுதி, வெளிநாட்டு நிறுவனமான, 'நெஸ்லே'யிடம் இருந்தது. அந்த சாம்ராஜ்யத்தை உடைத்தது, 'அமுல்' பால் பவுடர். இதேபோல், குழந்தை உணவில், 'கிளாஸ்கோ' முன்னணியில் இருந்தது; அடுத்து, அதையும் உடைத்தது. பால் பவுடர் கொடுத்த வெற்றி, வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லேட், நியூட்ரமுல், சீஸ், அமுல்யா, அமுல் மஷ்டி, அமுல் மிதாய்மேட் என, அந்நிறுவனத்தை தயாரிக்க வைத்தது. அது மட்டுமல்லாமல், இனிப்புகள், குளிர் பானங்கள் மற்றும் 'பிஸ்சா' என, பலவற்றின் வெற்றிக்கும் வழி வகுத்தன.குரியன் மற்றும் தலாயாவின் கடும் முயற்சியால், 'அமுல்' நிறுவனத்திற்கு வெற்றி கிட்டியது. தலாய், குரியனின் நண்பர்; இருவருமே உழைப்புக்கு அஞ்சாதவர்கள். இவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர், திரிபுவன்தாஸ் என்ற காங்கிரஸ் தியாகி!- இப்படி கூறி முடித்தார், நண்பர்.'தேவைதான் கண்டுபிடிப்பின் தாய்...' என்று, ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு. அது, 'அமுல்' நிறுவனத்தின் முயற்சியை உண்மையாக்கி விட்டது.