உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

மைக்ரோசாப்ட் நிறுவனர், பில்கேட்ஸ் எழுதியதாக, ஒரு தகவல் சமூக வலை தளங்களில், சில நாட்களுக்கு முன் வேகமாகப் பரவியது. ஆனால் அதை, அவர் எழுதவில்லை என்பதை, பி.பி.சி., நிறுவனம் உறுதிபடுத்தியது. அதில் சொல்லப்பட்டிருந்த தகவல்களில் பல, முக்கியம் வாய்ந்ததாக இல்லை; பல, எல்லாருக்கும் பயன்படும் வகையில் இருந்தன. யார் எழுதினால் என்ன... சொல்லும் விஷயம் பலருக்கும் பயன்பட்டால் நல்லது தானே!இதோ அந்த தகவல்:'கொரோனா வைரஸ்' நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன?நல்லதோ, கெட்டதோ... எந்த நிகழ்வுக்கு பின்னணியிலும், ஒரு ஆன்மிக குறிக்கோள் உள்ளது என்பதை, நான் நம்புகிறேன். இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தபோது, எனக்கு சில யோசனைகள் தோன்றின.* கலாசாரம், மதம், வேலை, சொத்து மதிப்பு, புகழ் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி, நாம் அனைவரும் ஒன்றே என்பதை, இது நினைவுபடுத்துகிறது. மேலே குறிப்பிட்ட எதையும் இந்த நோய் கண்டுகொள்வதில்லை. எல்லாரையும் பீடிக்கிறது* எல்லாரையும் இது இணைக்கிறது. எப்படி... ஒருவரை பீடித்தால், அது மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது* நாம், நம் இருப்பிடத்திற்கான எல்லையை செயற்கையாக உருவாக்கி இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறது; ஏனெனில் இது, பாஸ்போர்ட்டே இல்லாமல், எல்லையைத் தாண்டி, எல்லாருக்கும் பரவுகிறதே* ஆரோக்கியம் நமக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. நாம், சத்தில்லாமல் தயாரித்து வழங்கப்படும் உணவுகளை உண்டு, ரசாயனங்கள் கலந்த தண்ணீரை பருகும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டோம். ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை எனில், நாமும் வெகு விரைவிலேயே சீக்காளி ஆகி விடுவோம்* வாழ்க்கையே மிகவும் குறுகியது என்பதை, இந்நோய் நமக்கு உணர்த்துகிறது. தேவையில்லாத பொருட்களை வாங்க, கடைகளில் வரிசையில் நிற்பதை விட, முதியோரையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் கவனிக்க வேண்டியது, நம் பொறுப்பு என்பதையும் உணர்த்துகிறது* இது போன்ற கடினமான காலங்களில் மட்டுமே, அத்தியாவசியமான உணவு, மருந்து, குடிநீர் இன்றியமையாதது என்பதை உணர்கிறோம்; ஆடம்பரப் பொருட்களின் பின் அலைவதைத் தவிர்க்கிறோம். பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையல்ல என்பதை உணர்கிறோம்* குடும்பமும், வீட்டு வாழ்க்கையும் எவ்வளவு முக்கியமானது என்பதை, இந்நோய் உணர்த்துகிறது; இதை, எந்த அளவு உதாசீனப் படுத்தினோம் என்பதை புரிய வைக்கிறது; இந்த வகையான வாழ்க்கையை மறுபடி கட்டமைத்து, குடும்ப உறவுகளை இறுக்கிக் கொள்ள, நம்மைக் கட்டாயப்படுத்துகிறது* எப்போதும், வேலை வேலை என்று அலைவதற்காக, நாம் பிறக்கவில்லை; ஒருவரை ஒருவர் பேணிக் காக்க, ஒருவரிடமிருந்து ஒருவர் பலனடையவே பிறந்திருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது* நம் வறட்டு கவுரவத்திற்கு, ஒரு பரிசோதனை வைத்திருக்கிறது. சமுதாயத்தில் எவ்வளவு பெரிய மனிதர் நாம் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கி, வீட்டில் முடக்கிப் போட்டிருக்கிறது * நம் செயலை தீர்மானிப்பது, நம் கையில் என்பதை சொல்லித் தருகிறது. மற்றவர்களுக்கு ஒத்துழைப்பது, பகிர்வது, கொடுப்பது, உதவி செய்வது, ஆதரவாய் இருப்பது ஆகியவை ஒரு பக்கம்; சுயநலத்துடன் இருப்பது, அபகரிப்பது, நம் சொந்த நலனில் மட்டும் அக்கறை செலுத்துவது ஆகியவை மற்றொரு பக்கம். இதில், எதை நாம் தேர்ந்தெடுக்கப் போகிறோம்?* இது முடிவு அல்லது ஆரம்பம். நாம் செய்த வினைகளின் எதிரொலி; என்ன செய்தோம் என்பதை உணர்த்தவே இந்த நிகழ்வு எனக் கருதலாம் அல்லது இது ஒரு உதாரணம் தான், இன்னும் இருக்கிறது என்பதாகக் கூட இருக்கலாம்* இந்த பூமி, சீக்காளி ஆகி விட்டது என்பதை உணர்த்துகிறது. கடும் வெயிலில், ஈரம் எவ்வளவு வேகமாய் காயுமோ, அவ்வளவு வேகமாய், வனங்களை அழிக்கிறோம். இப்படி பூமியை சீக்காளி ஆக்கியதால், நாமும் சீக்காளி ஆகி விட்டோம்* ஒரு கஷ்டம் வந்தால், அதன் பிறகு சுகம் உண்டு. வாழ்க்கையே ஒரு சக்கரம் தான்; இப்போது கடினமான நேரத்தை கடந்து கொண்டிருக்கிறோம்; இது கடந்து, நல்ல நிலைக்கு திரும்புவோம்* நம் செயல்கள் அனைத்தும் தவறு; மாற்றிக் கொள்ள வேண்டும். முன்னோர் வாழ்ந்த அழகான வாழ்க்கையை மறக்கக் கூடாது என்பதை உணர்த்தி, நம்மைத் திருத்தவே இந்த, 'வைரஸ்' பிறந்து, பரவி இருக்கிறது. இந்த பாடத்தை நல்லவிதமாக எடுத்துக் கொள்வதும், ஏற்காததும் நம் கையில் தான் உள்ளது.- இப்படியாக இருக்கிறது அந்த பதிவு. நாம் என்ன செய்யப் போகிறோம்?திருமண காலத்தில், 30 - 40 கல்யாண பத்திரிகை, அடியேனுக்கு வரும். இன்னார் என்று கூட எனக்கு தெரியாது. ஆயினும், அவர்களை ஆசிர்வதித்து, வெண்பா பாடி அனுப்புவேன். எதற்காக, ஒரு பண்பாட்டிற்காக; அவர்களை திருப்திபடுத்துவதற்காக!கொஞ்சம் தெரிந்தவர் என்றால், விபூதி, குங்குமம் பிரசாதமும் அனுப்புவேன். இன்னும் நெருக்கமானவர்கள் என்றால், நான் எழுதிய புத்தகத்தையும், மணமக்கள் பெயர் போட்டு அனுப்புவேன். இன்னும் கொஞ்சம் நெருக்கமானவர்கள் என்றால், என் தம்பியை அனுப்புவேன். நிரம்ப வேண்டியவர்கள் என்றால், நானே செல்வேன். மிக மிக வேண்டியவர்கள் என்றால், என் சம்சாரத்தோடு செல்வேன்.கிருபானந்த வாரியார் எழுதிய, 'ஞான விளக்கு' நுாலில் படித்தது.இந்த காலத்தில், கல்யாண அழைப்பிதழே, 'வாட்ஸ் - ஆப்'பில் வருகிறது; வாழ்த்தும் அதே போல் செல்கிறது.பழைய புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன். அதில், ஆக., 23, 1939ல், தி.க., பத்திரிகையான, 'விடுதலை' இதழில் வெளியான சுவாரஸ்யமான செய்தி இது:நீதி கட்சியில் இருந்த சமயம், சுயமரியாதை இயக்கம் நடத்தி வந்தார், ஈ.வெ.ரா., பின்னர், நீதிக்கட்சியினர், இவரை அழைத்து, தங்கள் கட்சிக்கு தலைமை பொறுப்பு ஏற்கும்படி செய்தனர். அப்போது, சென்னை, திருவல்லிக்கேணியில், 1939ல் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், ஈ.வெ.ரா., பேசியது...'ஆகவே... என் பார்ப்பன நண்பர்களுக்கு சொல்லி வைக்கிறேன். இந்த காங்கிரஸ் ஆட்சியை ஒழிக்க, ஒத்துழைக்க வேண்டுகிறேன். நாங்கள் பார்ப்பன துவேஷிகள் என்று கருதினால், நீங்கள் உண்மையில் ஏமாந்து போவீர்கள். 'ஜஸ்டிஸ் கட்சி' உங்களுக்குள்ள விகிதாச்சாரப்படி, பாகத்தை பிரித்து கொடுக்க சித்தமாய் இருக்கிறது. தாராளமாக வந்து சேருங்கள். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவீர்களானால் ஏமாந்து போவீர்கள்...' என்றார்.- இதைச் செய்ய, பிராமணர்கள் தவறி விட்டனரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !