உள்ளூர் செய்திகள்

அந்துமணி பா.கே.ப.,

பா-கேவாரமலர் இதழுக்கு, தமாஷ் எழுதும் எழுத்தாளர் ஒருவர், அலுவலகத்திற்கு வந்திருந்தார். புருஷன் - பெண்டாட்டி மற்றும் மாமியார் - மருமகள்களை, 'கலாய்த்து' தமாஷ்களை எழுதிக் குவிப்பவர். அவரை பார்த்ததும், உதவி ஆசிரியைகள், 'பிலு பிலு'வென பிடித்துக் கொண்டனர்.'நீங்க எப்படி எங்களை இப்படி கேவலப்படுத்தலாம். நாங்க எங்க புருஷன் மற்றும் மாமியாரை குறை கூறாமல் ஒற்றுமையாக இருக்கிறோம். நீங்க எழுதும் தமாஷ்களால், எங்கள் குடும்பத்தில், குழப்பம் வந்துவிடும் போலிருக்கே...' என்று, கிடுக்கிப்பிடி பிடித்தனர்.எழுத்தாளரும் சளைக்கவில்லை.'நீங்க, ஒற்றுமையாய் இருப்பது சந்தோஷம் தான். ஆனா, எனக்கு அப்படி இல்லையே. நான் சந்திக்கும் குடும்பங்களிலும், இதே நிலை தான். அதை அடிப்படையாக வைத்தே, தமாஷ்களை எழுதுகிறேன்.'இதோ இப்ப கூட, இரண்டு, மூன்று சம்பவங்களை கேள்விப்பட்டேன். அதை அசை போட்டபடி தான், வந்தேன். நீங்கள் கேட்டதும், உங்களுடன் அதை பகிர்ந்துகொள்ள தோன்றுகிறது...' என்று, கூற ஆரம்பித்தார்:ஒரு பணக்கார மாமியாருக்கு, மூன்று மருமகன்கள். திடீர்ன்னு அவருக்கு ஒரு ஆசை. மருமகன்கள், தன்னிடம் எவ்வளவு பாசம் வச்சுருக்காங்கன்னு சோதிச்சு பார்க்க விரும்பினார்.மூத்த மருமகனை கூட்டிக்கிட்டு, படகு சவாரி போனார். நடு ஏரிக்கு போனப்போ, தற்செயலா ஏரிக்குள்ள விழுந்துட்டார். விழுந்தது தான் தாமதம், தடால்ன்னு குதிச்சு, மாமியாரை காப்பாத்திட்டான், மூத்த மருமகன்.அடுத்த நாள் காலை, அவன் வீட்டு முன், புது கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதுல, 'பிரிய மருமகனுக்கு, மாமியாரின் அன்பு பரிசு...' என்று எழுதியிருந்தது.அடுத்த நாள், நடு மருமகனை கூட்டிக்கிட்டு படகு சவாரி போனார்.நடு ஏரிக்குள் விழுந்தார்.பாய்ஞ்சு காப்பாத்திட்டான், நடு மருமகன்.மறுநாள் காலையில் அதே மாதிரி, அவன் வீட்டு வாசலில், புது கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.அதில், 'பிரிய மருமகனுக்கு, மாமியாரின் அன்பு பரிசு...' என்று எழுதியிருந்தது.கடைசி மருமகனை கூட்டிட்டு, நடு ஏரிக்குள் போய், அதே மாதிரி விழுந்தார்.ஆனா, கடைசி மருமகன், பாய்ஞ்சு குதிச்சு காப்பாத்தாம, வேடிக்கை பார்த்தபடியே, 'செத்து தொலைடி சனியனே... புள்ளையவா பெத்து வெச்சிருக்கே... பிசாசு குட்டிய பெத்து, என் தலையில அத கட்டி வெச்சிருக்கே... நீயும் வேணாம், உன் காரும் வேணாம்... நான் சைக்கிளிலேயே போயிக்கிறேன்...'ன்னு சாகவுட்டுட்டு, வீட்டுக்கு வந்தான்.அடுத்த நாள் காலை, ஒரு கார், அவன் வீட்டு முன் நின்று கொண்டிருந்தது. ஆனா இது, பி.எம்.டபிள்யு., வகை, உயர் ரக கார்.அதுல, 'பிரிய மருமகனுக்கு, மாமனாரின் அன்பு பரிசு...' என்று எழுதியிருந்தது.'அம்மா... மனித இனம் எப்படி தோன்றிச்சு...' என்றான், மகன்.'மகனே... ஆதாம், ஏவாள்ன்னு, ஆதி பெற்றோரை கடவுள் படைச்சாரு. அவங்க வழியா தான் படிப்படியா மனிதன் பல்கி பெருகினான்...' என்றார், அம்மா.'அப்பா... மனித இனம் எப்படி தோன்றிச்சு...' என்றான், மகன்.'மகனே... குரங்கிலிருந்து தான் மனிதன் படிப்படியா உருவாகி, பல்கி பெருகினான்...' என்றார், அப்பா.மீண்டும் அம்மாவிடம், 'ஆதாம், ஏவாள்கிட்டேயிருந்து தான் மனிதன் தோன்றினான்னு நீ சொல்றே... குரங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான்னு அப்பா சொல்றாரு... இதுல, எதும்மா சரி...' என்றான்.அதுக்கு அம்மா, நமட்டுச் சிரிப்போடு, 'ரெண்டுமே சரிதான்டா, செல்லம்... என் முன்னோர்கள், ஆதாம், ஏவாள் பரம்பரை... அப்பாவின் முன்னோர்கள் குரங்கு பரம்பரை...' என்றாராம்.கணவரிடம், 'எதிர்த்த வீட்டுக்காரர், அவர் மனைவிக்கு தினமும் ஒரு புடவை வாங்கி தர்றார். நீங்களும் இருக்கீங்களே...' என்று சலிச்சுக்கிட்டாங்க, மனைவி.அதுக்கு அவர், 'எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்ன்னு ஆசை தான். ஆனா, அவங்க வாங்கிக்குவாங்களோ, மாட்டாங்களோன்னு தான் பயமாயிருக்கு...' அப்படின்னார்.'என்னடி, நான், 10 தடவை மிதிச்சும், 'ஸ்டார்ட்' ஆகாத வண்டி, நீ, ஒரே மிதி மிதிச்சதும், 'ஸ்டார்ட்' ஆயிருச்சே எப்படி...'ன்னு கேட்டான், புருஷன்.'அது ஒண்ணும் பெரிய வித்தை இல்லை. உங்க அம்மாவை நினைச்சுகிட்டு, ஓங்கி மிதிச்சேன்...'னு சொன்னார், மனைவி.வீட்டில் கணவனும் - மனைவியும் பேசிக் கொண்டிருந்தனர். 'நான், கல்லுாரியில் படிக்கும்போது, மாறுவேட போட்டியில், இரண்டாம் பரிசு வாங்கியிருக்கிறேன்...' என்றாள், மனைவி.'என்ன வேடம்?' என்றார், கணவர்.'காளியாத்தா வேடம்...' என்றாள், மனைவி.'நீ, ஏன் வேஷம் போட்டு போனாய்... அதுதான் இரண்டாம் பரிசு கிடைத்திருக்கிறது. இருக்கிறபடியே போயிருந்தால், முதல் பரிசே கிடைத்திருக்கும்...' என்றார், கணவர்.சீரியசாக முகத்தை வைத்து, அவர் கூறி முடித்ததும், உதவி ஆசிரியைகள் உட்பட, சுற்றியிருந்தவர்கள், 'கொல்' என சிரித்து விட்டனர்.அதன்பின், 'சரி... சரி... அதுக்காக ரொம்ப கலாய்க்காதீங்க...' என்று, சமாதானமாக பேசினர், உதவி ஆசிரியைகள்.'அப்பாடா... பிரச்னை முடிந்தது...' என, நான், என் வேலையில் மூழ்கினேன்.கிளி வாங்க ஆசைப்பட்ட ஒருவன், சந்தைக்கு போனான். அங்கே, கிளி ஏலம் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்தது.ஒரு கிளி, பார்க்க அழகாய் இருந்தது.எப்படியும் வாங்கிட ஆசைப்பட்டு, ஏலத்தில் பங்கு பெற்றான்.'100 ரூபாய்...' என்றான்.'200 ரூபாய்...' என்றது, எதிர் குரல்.'500 ரூபாய்...' என்றான்.'1,000 ரூபாய்...' என்றது, எதிர் குரல்.'1,500 ரூபாய்...' என்றான்.'10 ஆயிரம் ரூபாய்...' என்றது, எதிர் குரல்.ஒரு வழியாக, எதிர் ஏலக் குரலை மவுனமாக்கி, கிளியை, 20 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து விட்டான்.பணத்தை பட்டுவாடா செய்து, கிளிக்காரனிடம், 'இந்த கிளி பேசுமா...' என்றான்.'என்ன, பேசுமாவா...' என்ற கிளிக்காரன், 'அப்படியே அசராம பேசும்... உங்க ஏல குரலுக்கு எதிர் குரல் கொடுத்ததே இந்த கிளி தான்...' என்றானே பார்க்கணும்.— எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !