ஆசியாவின் பணக்கார கிராமம்!
ஆப்பிள் சாகுபடியில் முன்னிலை வகிக்கும் இந்திய மாநிலம், ஹிமாச்சலப் பிரதேசம். இங்கு விளைவிக்கப்படும் ஆப்பிள்கள், இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அந்த ஆப்பிள்களுக்கு, தற்போது வரை, தனி மவுசு இருந்து வருகிறது.குறிப்பாக, ஹிமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான, சிம்லா, ஆப்பிள் உற்பத்திக்கு புகழ் பெற்றது. அதிலும், சிம்லாவில் அமைந்துள்ள, மாதவக் கிராமம், ஆசியாவிலேயே மிகவும் செல்வ செழிப்புள்ள, பணக்கார கிராமமாக கருதப்படுகிறது.தங்களது முக்கிய தொழிலாக இவர்கள், விவசாயத்தை செய்து வருவதால், பெரும்பாலான வருமானம், அதன் மூலமே ஈட்டப்படுகிறது. இங்குள்ள விவசாயிகளின் ஆண்டு வருமானம், சராசரியாக, 35 - 80 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது.இங்குள்ள வீடுகள் அனைத்தும், மிகவும் செல்வ செழிப்புடன் காணப்படுகிறது. இந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் ஆப்பிள்கள் பெரும்பாலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால், இவர்களது வருமானமும், மிகவும் அதிக அளவில் இருக்கிறது.புதிய தொழில்நுட்பங்கள், புதிய விவசாய உத்திகள் மற்றும் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களை கொண்டு, ஆப்பிள் உற்பத்தியில் முன்னிலை பெற்றவர்களாக, தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர், விவசாயிகள்.மேலும், சந்தையில், தற்போதைய விலையை, இணையத்தில் முழுவதுமாக தெரிந்த பின்னரே, ஆப்பிளை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.கடந்த, 1982ம் ஆண்டு வரை, சிம்லாவில் அமைந்துள்ள, க்யாரி என்ற கிராமம் தான், ஆசியாவிலேயே செல்வ செழிப்புள்ள கிராமமாக முன்னிலையில் இருந்தது.கடந்த, 1954ல், மாதவக் கிராமத்தில் வசித்த, சையன் ராம் மேத்தா எனும் விவசாயி, ஹிமாச்சலில் உள்ள, கோட்கை என்ற இடத்திலிருந்து, ஆப்பிள்களைக் கொண்டு வந்து, தன் நிலத்தில் விளைவித்தார்.முதன் முறையாக ராம் மேத்தாவின் நிலத்தில் சாகுபடி செய்த ஆப்பிள்கள், சந்தையில் விற்பனையாகி, 8,000 ரூபாய் வரை, வருமானத்தை தந்தது.இதையடுத்து, அந்த கிராமத்தில் உள்ள பலரும், ராம் மேத்தாவைப் பின்பற்றி, பல்வேறு வகையான ஆப்பிள்களை உற்பத்தி செய்ய துவங்கினர்.நாளடைவில் அந்த கிராமம், ஆப்பிள் உற்பத்தியில் முன்னிலை பெற்றதோடு, ஆசியாவின் பணக்கார கிராமமாகவும், முன்னேறி உள்ளது.- மு. .ஆதினி