உள்ளூர் செய்திகள்

பெருநாள் செய்தி

இருள் பிரிந்தும், பிரியாத நள்ளிரவில் தொழுகைக்கான அறிவிப்பு, பள்ளி வாசலில் எழுப்பப்பட்டதும், இருள் கவிழ்ந்திருந்த வீடுகளில் எல்லாம், பளீர் பளீரென்று, அடுத்தடுத்து விளக்குகள் மின்னத் துவங்கின.அதற்கு முன்னரே எழுந்து, குக்கர் வைத்து, குழம்பை சூடு செய்து, டேபிளில் எடுத்து வைத்து, தயிரில் துளி ஏலக்காய் பொடியும், சர்க்கரையும் சேர்த்து, லஸ்சி செய்து, பிரிட்ஜில் எடுத்து வைத்த பின், பல் துலக்கினாள், மாஹிரா.உள் அறையில் படுத்திருந்த ரஹிமும், அவர் மனைவியும், மருமகள் தன்னந்தனியாக அத்தனை வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்வதைப் பார்த்தனர். ரஹிமின் கண்களில் கண்ணீர் மறைக்க, 'யா அல்லாஹ்... எனக்கு சொத்து, சுகங்களை தர்றயோ இல்லயோ கண்ணியமும், நற்குணமும் நிறைந்த வாரிசுகளை கொடு...' என்று மனதுக்குள் வேண்டினார்.எந்த மனிதனும், அல்லாவிடம் கேட்கிற முதல் பிரார்த்தனை இதுவாகத்தான் இருக்கும்! ஆயிரம் கடலையும், பல்லாயிரம் மலைகளையும் விட, வலிமையானது ஒரே ஒரு பண்புள்ள குழந்தை.ரஹிமின் அத்தா, மதரசாவில் நல்ல வாரிசுகளை வேண்டி பிரார்த்தனை செய்தது இன்னும் அவர் நினைவிலிருக்கிறது. ரஹிம் கேட்ட துவாவை, வேறு விதமாக நிறைவேற்றி வைத்தான், இறைவன்.மின்துறையில் பணிபுரிந்த ரஹிமிற்கு ஒரே மகன், சுபுகான்; இயல்பிலேயே அவனுக்கு படிப்பில் மிகுந்த நாட்டமிருக்க, இன்ஜினியரிங் படிக்க வைத்தார்.படித்து முடித்த கையோடு, பஹ்ரைனில் நல்ல வேலை.ரஹிமிற்கு சந்தோஷம் கட்டுக்கடங்கவில்லை. அல்லாவிற்கு உள்ளம் மகிழ, நன்றி தெரிவித்தார்.வேலைக்குப் போன கையோடு, நண்பரின் ஒரே மகளான மாஹிராவை, திருமணம் செய்து வைத்தார்.ஆண்டுக்கு ஒருமுறை, ஒரு மாத விடுப்பில், பெருநாளுக்கு வந்து போவான், சுபுகான். அவர்களின் இனிய இல்லறத்திற்கு அடையாளமாய் பெண் குழந்தை பிறந்தது. ஒவ்வொரு முறை வரும் போது, மாஹிராவையும், குழந்தையையும் தன்னோடு அழைத்து போவதாக கூறி, பெற்றோரிடம் சண்டை போடுவான், சுபுகான். 'குழந்தை கொஞ்சம் பெருசாகட்டும்; அடுத்த ஆண்டு பார்க்கலாம்...' என்று, ஏழு ஆண்டுகள் ஓடோடி விட்டன. இதையே பிரச்னையாக்கி, தினமும் தொலைபேசியில் மனைவியிடம் சண்டை போட ஆரம்பித்தான் சுபுகான். கடைசியாய், அவன் கூறிய வார்த்தைகள் தான் ரஹிமையும், அவர் மனைவியையும் உலுக்கி விட்டது.'அத்தா... உங்க மருமவளுக்கு என் கூட சேர்ந்து வாழாதது, பெரிய விஷயமாகவே தெரியல; அவளுக்கு அது தான் விருப்பம்ன்னா, அப்படியே இருந்துட்டு போகட்டும். நான் இங்கேயே ஒரு பொண்ணை பார்த்து, இரண்டாவதா கல்யாணம் செய்துக்கலாம்ன்னு இருக்கேன். நீங்க இந்த விஷயத்தை அவகிட்ட சொல்லிடுங்க...' என்றான் சுபுகான்.சுபுகான், சிறந்த மகன் என்று அவரால் உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், மாஹிரா நல்ல மருமகள் என்பதை விட, நல்ல மகள். கண்ணியமும், கடமையும் தன் காரியத்தில் சிறப்புடன் நிலை பெற்று நிற்பவள். அப்படிப்பட்டவளுக்கு மகன் செய்யவிருக்கும் காரியம் தெரிய வந்தால் என்னாகும்!'அத்தா... எனக்கு இந்த முறை லீவு கிடைக்குமான்னு தெரியல. அதோட, நான் அங்க வரவும் விரும்பல...' என்று சுபுகான் விட்டேத்தியாக கூறிய போது, 'அப்படி சொல்லக் கூடாது சுபுகான்... நீ எதை மனசுல வச்சு பேசுறேன்னு எனக்கு புரியாம இல்ல... நீ எது செய்யுறதா இருந்தாலும், மாஹிராகிட்ட கலந்துக்காம செய்யக் கூடாது. என் வார்த்தைக்கு, மரியாதை இருக்குதுன்னா, இந்த முறை நீ ஊருக்கு வா...' என்று கூறியிருந்தார் ரஹிம்.அரைமனதாய் தான் புறப்பட்டு வந்தான். மகளை பார்த்ததும், அவன் மனசு எல்லையில்லா அன்பில் திளைத்தது.''சுபுகான்... எத்தனை நாள் லீவில் வந்திருக்க...'' மகனின் தலையை அன்போடு தடவியபடி கேட்டார் ரஹிம்.''இருபது நாள்''''ம்... பெருநாளுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. பெருநாள் முடிஞ்சதும், நீ மாஹிராவை அழைச்சுட்டு எங்கயாவது வெளியூர் போயிட்டு வா; அப்ப தான் உன் குழப்பமெல்லாம் தீரும்,'' என்றார் ஆதரவாக!''எந்த குழப்பமும் இல்ல அத்தா... ரொம்ப தெளிவா இருக்கேன். மாஹிரா நல்ல பெண்; பண்பானவள் தான். ஆனால், அவளுக்கு ஒரு மனைவியோட கடமை என்னன்னு புரியல. அதுக்காக, நான் என் வாழ்க்கைய வீணாக்கிக்க முடியுமா நீங்களே சொல்லுங்க... இம்முறை அவகிட்ட சொல்லிட்டு, அவளுடைய சம்மதத்தோடு, நான் இரண்டாவது, திருமணம் செய்துக்க போறேன்,'' என்றான்.மகன் மனதில் இருந்த பூதம், பேயாட்டம் போட்டு, வெளியில் வந்து விழுந்தது. இவர்கள் பேசிய பேச்சு, மாஹிராவின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும். கலங்கிய கண்களோடு, அன்று முழுவதும் இருந்தாள். அடுத்த நாள், அந்த முகவாட்டமெல்லாம் மறைந்து, மறுபடியும் பணிகளில் மூழ்கி போனாள்.சுபுகானுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்யவில்லை; தன் வீட்டு மனிதர்களை அழைத்து, பஞ்சாயத்து வைக்கவில்லை; அந்த கோபத்தை, குழந்தை மீதும் காட்டவில்லை.தினமும் இரவில் லஸ்சி தயாரித்து வைத்தாள். நோன்பு திறக்க கஞ்சியும், லெமன் டீயும் தவறாமல் செய்தாள்.''எதுக்குமா நித்தமும் ஏதாவது செய்துட்டு சிரமப்படற... நீயும் நோன்பு வச்சிருக்க தானே... என்னாலயும் உனக்கு உதவ முடியல... ரத்த கொதிப்பு அதிகமாயி பாடாப்படுத்துது,'' மருமகளிடம் விசனப்பட்டாள், ரஹிமின் மனைவி.''இதுல என்ன சிரமமிருக்கு மாமி... இது என் கடமை; இந்த வெயில்ல, வயசானவங்க நோன்பு பிடிக்கிறது எத்தனை கஷ்டம். அதனால தான், தினமும் நோன்புக்கு லஸ்சி செய்து வைக்கிறேன். நோன்பு முடிச்சதும், தாகம் தீர்க்க கோல்டு டீ செய்து தர்றேன்,'' என்றவள், ''மாமி... நான் எங்க வீடு வரைக்கும் போயிட்டு வந்திரட்டுமா... குக்கர்ல கஞ்சி வச்சிருக்கேன். ரெண்டு விசில் வந்ததும், அதை, 'ஆப்' செய்துடுங்க,''என்று கூறி, கணவனிடம் விடை பெற்று எழுந்து போனாள்.மாஹிராவின் அம்மா வீடு, அடுத்த தெருவில் தான் இருந்தது. மாஹிரா அவர்கள் வீட்டிற்கு ஒரே பெண் என்பதாலும், சமீபத்தில் தான், அவளது அம்மாவிற்கு கண் ஆபரஷேன் செய்திருந்தனர் என்பதாலும், அம்மாவை பராமரிப்பதும், அவர்கள் வீட்டு வேலைகளை செய்வதும் மாஹிரா தான்.நோன்பு மாதம் என்பதால், இரண்டு வீட்டிற்கும் சேர்த்து, நான்கு வேளை சமைத்தாள். அத்துடன், குழந்தையை பள்ளிக்கு அழைத்துப் போவது, அதற்கு உடம்புக்கு முடியாமல் போனால், மருத்துவரிடம் அழைத்துச் செல்வது என்று அவளுக்கு நாள் முழுவதும் வேலை இருந்தது.இத்தனை வேலைகளுக்கு நடுவிலும், கணவனையும் கவனித்துக் கொண்டாள். இதையெல்லாம் பார்த்த போது, சுபுகானுக்கு ஆச்சர்யமாகவும், குற்ற உணர்வாகவும் இருந்தது. அவனுடைய எண்ணம் தெரிந்திருந்தும், துளியும் சுணங்காமல் இயங்குகிற அவள் மனதிற்குள் என்ன ஓடுகிறது என்று அறிய, அவனுக்கு பேராவலாய் இருந்தது.இரவில், சிறப்பு தொழுகையை முடித்து, சிறிது ஆசுவாசப்படுத்தி, மொட்டை மாடியில் அமர்ந்தபடி, மினாரின் அலங்காரத்தை ரசித்தபடி இருந்தாள் மாஹிரா.மாடியேறி வந்த சுபுகான், ''மாஹி... காலையில இருந்து இரவு வரை பம்பரமா சுழன்று வேலை செய்றே... அப்படியிருக்கையில உனக்கு கிடைச்ச இந்த சின்ன ஓய்வுலயும், தூங்காம மினாரை ரசிச்சிட்டு உட்கார்ந்துக்கிட்டிருக்கியே...'' என்றான்.மென்மையாய் சிரித்தாள் மாஹிரா.''ஓய்வு அழகான விஷயம் தான்; ஆனா, அந்த ஓய்வில், இன்னொரு வேலையை செய்றது, அதைவிட ஆரோக்கியமான விஷயமில்லையா...'' என்றாள் மாஹிரா.''அதெல்லாம் இருக்கட்டும்... நான் இந்த முறை என்ன முடிவோட வந்திருக்கேன்னு உனக்கு தெரியும் தானே,'' என்றான்.மினார் வெளிச்சத்தில், அவள் கண்கள் பளபளப்பது தெரிந்தது.''ம்...''''உன் முடிவென்ன?''''என் முடிவை சொல்றதுக்கு முன், உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்கணும்... சுயநலம் அதிகமானால், பிறர் நலம் மறந்து போகுமா?'' என்றாள்.சாட்டையடி! கோபமாய் நிமிர்ந்து உட்கார்ந்தான்.''ஆண் - பெண் உறவு, காதல், நேசம் எல்லாம் நமக்கு கத்துக்குடுத்து வளர்க்கிறது, குடும்ப உறவை பாதுகாக்க தான். அந்த குடும்பத்திற்கே அர்த்தமில்லாம போகுதுன்னா, ஆண் - பெண் உறவுங்கிறது வெறும் மிருக புணர்ச்சின்னு உலகம் சொல்லாதா...''''நீ என்ன சொல்ல வர்ற...'' என்றான் கோபமாக!''நான் தப்பா எதுவும் சொல்ல வரலீங்க... ரொம்ப சின்ன விஷயம் இது! 50 வயதை கடந்து, வயோதிகத்தின் உபாதைகளோடு போராடுற பெத்தவங்க நம்ம இரண்டு பேருக்குமே இருக்காங்க. இரண்டு குடும்பத்துலயும் நாம ஒரே ஒரு பிள்ளை தான். கடமையா அவங்களை பராமரிக்காட்டியும், சக மனுஷங்களா அவங்க நல்லது, கெட்டதுல நமக்கு அக்கறை இருக்கு இல்லயா...''இரண்டு மாசத்துக்கு முன் மாமாவுக்கு, 'மைல்ட் அட்டாக்' வந்ததை நீங்க மறந்திருக்க மாட்டீங்க... சரியான நேரத்துல போய் சேர்த்ததால பயப்பட எதுவுமில்ல. என் அம்மாவுக்கு கண் ஆபரேஷன் செய்துருக்கு, அவங்களால மத்தவங்க உதவி இல்லாம எதுவுமே செய்ய முடியாது...''''இதெல்லாம் சொல்லி, இந்த முறையும் நீ என் கூட வர தயாரில்ல... அப்போ நான்...''''இன்னொரு, 'நிக்காஹ்' செய்துப்பீங்க அப்படித் தானே... நான், உங்க கூட வந்துட்டா, நம்மல சுத்தி இருக்கிற இந்த கடமைகளை என்ன செய்றதுன்னு சொல்லுங்க; நான் வர்றேன். இவங்க எல்லார்கிட்டயும், நிறைய பணம் இருக்கு; ஆனா, அவங்களை பராமரிக்க ஆளில்ல. நாளைக்கு நம்மகிட்டயும் நிறைய பணமிருக்கும்; நம்ம மகளுக்கும் உங்க மனசு போல ஈவு, இரக்கமில்லாம இருந்ததுன்னா... அல்லாஹ்... நினைக்கவே பயமாயிருக்கு.''உங்க சவுகரியப்படி இன்னொரு நிக்காஹ் செய்துக்கறதும், எங்க சவுகரியப்படி நீங்க இந்தியாவுக்கு திரும்பறதும் உங்க விருப்பம். வீட்டுக்கு ஒரே பிள்ளையா பிறந்தவங்களுக்கு, நாலு குழந்தைகளுக்கு நடுவில பிறந்தவங்களுக்கு இருக்கிறத விட, அதிகமா பொறுப்பு இருக்குங்கிறதை மறந்துட கூடாது,'' மிகையில்லாத கோபத்தோடு சொல்லி, கீழே போனாள்.சுபுகான் வார்த்தைகள் இன்றி அமர்ந்திருந்தான். தனக்கொரு குடும்பம் வேண்டும் என்று ஆசைப்பட்ட மனசுக்கு, தன் குடும்பத்தை நினைக்க தவறியதேன் என்று வெட்கமாய் இருந்தது.மாஹிராவின் அறிவார்த்தமான, சுயநலமில்லாத சிந்தனை, தனக்குள் விளையாதது எண்ணி துயரப்பட்டான். மினாரின் வெளிச்சம், அவன் மனதிலும் விழுந்து வியாபித்தது.இந்த பெருநாள், நிச்சயமாய் அவனுள் மாற்றத்தையும், அவன் குடும்பத்திற்கு ஏற்றத்தையும் தரும் என்று, மனதிற்குள் எண்ணி, உவகை கொண்டான்.'மாஹிரா கூறியபடி, நாடு திரும்புவதற்கான வேலைகளை, நாளையே துவங்க வேண்டும்...' என்று மனதிற்குள் முடிவெடுத்தான், திண்ணமாக!எஸ்.பர்வின் பானு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !