உள்ளூர் செய்திகள்

என்றென்றும் ஆனந்தம்!

ஜூலை 14 ஆனி உத்திரம்!இன்பம் என்றால் என்ன? பணமா, பதவியா, குழந்தைகளா... இவை எல்லாம் தான் இருக்கிறதே! சரி...இதனால், நீங்கள் நிம்மதி அடைந்து விட்டீர்களா? பணம் கூடக்கூட வீட்டில் பிரச்னை; பதவி உயர உயர சோதனை மேல் சோதனை! குழந்தைகள் சிறுவயதில் இருப்பது போல், திருமணத்துக்கு பின் இருப்பது இல்லை.எல்லாம் இருந்தாலும், நிம்மதி என்ற ஆனந்தம் இல்லை. அப்படியென்றால், எப்போது தான் நாம் எதிர்பார்க்கிற ஆனந்தம் கிடைக்கும் என்றால், பிறவாமலே இருந்தால் தான் கிடைக்கும். 'ஐயோ... நான் பிறந்து அனுபவித்ததெல்லாம் போதும் சாமி; இனியொரு பிறவி வேண்டாம்...' என மனிதன் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வாய்விட்டு சொல்லி விடுகிறான் அல்லது மனதுக்குள் நினைக்கவாவது செய்கிறான். சரி...பிறப்பற்ற நிலையாகிய நித்ய ஆனந்தத்தை அடைய என்ன செய்வது?நடராஜப் பெருமானின் திருவடி தரிசனமே பிறப்பற்ற நிலையைத் தரவல்லது. அவரை வணங்க அனைத்து நாட்களும் சிறப்பானவை தான் என்றாலும், ஒரு ஆண்டின் ஆறு நாட்கள் மட்டும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளன. அதில், முக்கியமானவை மார்கழி திருவாதிரையும், ஆனி உத்திரமும்.மகாவிஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன், ஒரு நாள், பெருமாளின் பாரம் தாங்க முடியாமல் அதற்கான காரணத்தைக் கேட்டது.அதற்கு பெருமாள், 'சிவனின் ஆனந்த நடனக்காட்சியை கண்டு களித்தேன். அவரது திருவடி அசைவைக் கண்டு, ஏற்பட்ட மகிழ்ச்சியால் என் உடல் பெருத்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதனால் தான், உனக்கு பாரம் தாங்க முடியாமல் போனது...' என்றார்.'அவரது திருவடியையும், அந்த அற்புத நடனத்தையும், நானும் பார்க்க வேண்டும்...' என, பெருமாளிடம் கேட்டது ஆதிசேஷன். அவரது அனுமதியுடன், கைலாயம் சென்று சிவனை எண்ணி தவத்தில் ஆழ்ந்தது. அதற்கு காட்சியளித்த சிவன், 'ஆதிசேஷனே... தில்லையில் புலிக்கால் முனிவர் என் நடனத்தைக் காண விரும்பி, தவம் செய்து வருகிறார். நீ, அங்கு மனித ரூபம் தாங்கி செல். அங்கே என் திருவடி தரிசனமும், நடனக்காட்சியும் காணலாம்...' என்று அருள்புரிந்தார்.நடராஜருக்கு, தினமும் புத்தம் புதிய மலர்களால் பூஜை செய்து வந்தார் புலிக்கால் முனிவர். மரங்களில் பற்றி ஏறி பூப்பறிக்க வசதியாக புலிக்காலும், இருளில் கூர்மையாக தெரியும் கண்களையும் சிவன் மூலம் பெற்றிருந்தார். சமஸ்கிருதத்தில் இவரை, 'வியாக்ரபாதர்' என்றனர். 'வியாக்ரம்' என்றால், புலி. 'பாதர்' என்றால், பாதங்களை உடையவர். புலியின் கால்களை உடையவர் என்று இதற்கு அர்த்தம்.பூமியில் மனிதனாய் பிறக்க விரும்பிய ஆதிசேஷன், அத்திரி மகரிஷி- அனுசூயா தேவி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு, 'பதஞ்சலி' என்று பெயரிடப்பட்டது. அவர், பாம்பின் அம்சம் என்பதால், மனிதத் தலையும், பாம்பு உடலும் பெற்றிருந்தார். வியாக்ரபாதரிடம் சென்று சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார் பதஞ்சலி. இருவரும், சிவபெருமான் நடன தரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். அந்த நாளும் வந்தது. அதைக் காண, இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் கூடினர். பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதியும் வந்து சேர்ந்தனர். துந்துபி, பானுகம்பன் போன்ற தேவலோக கலைஞர்கள் வாத்தியம் இசைத்தனர். பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான நடராஜப்பெருமான் எழுந்தருளினார். சிவகாமி என்னும் பெயர் தாங்கிய பார்வதி அருகில் நிற்க, சிவன் ஆனந்த திருநடனம் ஆடினார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனத்தைக் கண்டு, மகிழ்ந்தனர்.ஆனி உத்திரம் திருநாளில், சிவாலயங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். அவரது திருவடியை தரிசிப்பவர்கள் ஆனந்தமயமான நிலையை அடைவர்.***தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !