சிலுக்கு ஸ்மிதா! (2)
நடிகை அபர்ணா வீட்டில், வேலை செய்து, விஜியும், அன்னபூரணியும், அங்குள்ள, 'அவுட் ஹவுசி'லேயே தங்கினர்.அபர்ணாவின் பேச்சு, நடை, உடை, பாவனை மற்றும் காலை முதல் இரவு வரை, அவரது வீட்டுக்கு வந்து போகும் சினிமாக்காரர்கள் என, அனைத்துமே, விஜிக்கு, பிரமிப்பூட்டியது. 'வாழ்ந்தால், நடிகையாக தான் வாழ வேண்டும்...' என்று, நினைத்துக் கொண்டாள். நாளடைவில், சினிமா நடிகை ஆகும் ஆசை, வெறியாக மாறியது. ஆனால், அப்போதைக்கு, ஒரு நடிகைக்கு, கை, கால் பிடித்து விடும் பாக்கியம் மட்டுமே கிடைத்தது. தெரியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம், அபர்ணாவிடம் அடி, உதை வாங்கிக் கொண்டிருந்தாள், விஜி.வீட்டு வேலைக்காரி என்ற நிலையிலிருந்து, அபர்ணாவின், 'டச் - அப்' பெண் என்ற, பதவி உயர்வு கிடைத்தது. சினிமா உலகில், விஜிக்கு கிடைத்த முதல், 'விசிட்டிங் கார்டு' இது தான்.நடிகையருக்கு பின்னால், நாள் பூராவும், சீப்பு, கண்ணாடி, உதட்டு சாயம் என்று, தட்டு சுமந்தபடி திரிகிற வேலை. அவ்வப்போது, சீப்பில் அடி வாங்குவது வலித்தாலும், எப்போதாவது, பெரிய நடிகர்களை அருகில் பார்ப்பது, சந்தோஷம் கொடுத்தது.நாட்கள் நகர்ந்தன.'டச் - அப்' பெண்ணாகவே, தன் வாழ்க்கை முடிந்து விடுமோ என்ற பயம் கூடியது. அதற்கு மேல், அபர்ணாவோடு இருக்க, உடம்பிலும், மனசிலும் வலு இல்லை, விஜிக்கு. எனவே, அங்கிருந்து, சினிமா ஸ்டுடியோக்களுக்கு அருகிலேயே, சாலிகிராமம், சாரதாம்பாள் தெருவில், ஐந்து ரூபாய் வாடகை வீட்டில் குடியேறினர், அன்னபூரணியும், விஜியும். சினிமா நடிகை ஆக வேண்டுமென்றால், நடனம் ஆட தெரிய வேண்டாமா?'சினிமாவுக்கு என்ன தேவையோ, அந்த நடனத்தை மட்டும், பாப்பாவுக்கு கத்துக் குடுத்தீங்கன்னா, நல்லா இருக்கும்...' என்று, சலீம் மாஸ்டரிடம் பேசினார், அன்னபூரணி.சலீம் மாஸ்டரும், அவரது உதவியாளரும், விஜிக்கு நடனம் கற்றுக் கொடுத்தனர்.முதலில், மலையாள படங்களில், சின்ன சின்ன வாய்ப்புகள் வந்தன. எல்லாமே துணை நடிகைகள் போல், கூட்டத்தில் ஒருவர் என்ற அளவில் தான் கிடைத்தன. நாற்றமடிக்கிற, பட்டன் இல்லாத ரவிக்கைகளை அணிந்து நடிக்க வேண்டி வந்தது. 'சேப்டி பின்' கேட்டால், கிழிந்த ரவிக்கையை கொஞ்சம் தைக்க சொன்னால், 'ஏன்... அப்படியே ஆட முடியாதா...' என்று, ஆள் ஆளுக்கு அசிங்கமாக பேசினர். சினிமாவில் தானும் நுழைந்து விட்டோம் என்ற எண்ணத்திலேயே, எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள்.நடிகையாக வேண்டுமென்றால், வித விதமான புகைப்படங்கள் எடுத்து, 'ஆல்பம்' ஒன்று, கைவசம் வைத்திருக்க வேண்டுமே... புகைப்படக்காரர், பூஷன் என்பவர், விஜியை விதவிதமாக, 'ஸ்டில்'கள் எடுத்து கொடுத்தார். விஜியின் முகத்தில் துறுதுறுப்பு தெரியவில்லை; புகைப்படங்களில் மந்தமாக தான் தெரிந்தாள்.'இந்த பெண் எப்படி, சினிமாவில் பேர் வாங்கும்... ஆசைக்கும் ஒரு அளவு வேணும். இதெல்லாம் சினிமா நடிகையாகணும்ன்னு கிளம்பி வந்துருக்கு பாரு...' என, பலரது வார்த்தைகள் சுட்டாலும், தன் நோக்கத்திலிருந்து பின் வாங்கவே இல்லை, விஜி.சென்னை, விருகம்பாக்கம், அபுசாலி தெரு.மாலை நேரங்களில், தன் வீட்டு பால்கனியில் அமர்ந்து காற்று வாங்குவார், வினு சக்கரவர்த்தி. தம் மனதில் நினைத்திருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற பெண் கிடைப்பாளா, மாட்டாளா என்ற எண்ணம், அவருக்குள் ஓடிக் கொண்டிருந்தது.மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்து, கர்நாடக மாநிலம், மைசூரில், 'ஸ்டேஷன் மாஸ்டர்' ஆக வேலை பார்த்த, வினு சக்கரவர்த்திக்கு, சினிமா மேல் தீராத ஆசை. அதனால், வேலையை விட்டு, கன்னட சினிமாவின் பிரபல இயக்குனர், புட்டண்ணா கனகலுக்கு கதாசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.மைசூரில், மாலை நேர கள்ளுக் கடைகளில், மேலாடை இல்லாத பெண்கள், சாராயம் ஊற்றிக் கொடுப்பர். அந்த சூழலை மையமாக வைத்து, வினு சக்கரவர்த்திக்கு கதைக்கரு ஒன்று உருவானது. மைசூர் மார்க்கெட்டில், அன்றாடம் தான் பார்த்த காட்சிகளை மையப்படுத்தி, கதை ஒன்றை எழுதி, படமாக்க எண்ணினார்.சாராயம் விற்கும் பெண்ணாக நடிக்க வைக்க, பல பெண்களை, முன்னணி நடிகையரை பார்த்தார். ஆனால், யாருமே பொருத்தமானவர்களாக தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்துக்கு, தமிழகத்தில் எந்த பெண்ணுமே பொருத்தமாக இருக்க மாட்டார்கள், என்று எண்ணினார்.அவர் வீட்டுக்கு எதிரே, ஒரு மாவு அரைக்கும் மிஷின். 'போர்டு' இல்லாமல், வாசலில் கூரை வேய்ந்திருக்கும். மாலை, 4:30 மணி இருக்கும். சைக்கிள் ரிக் ஷா ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள், விஜி. சாயம் போன நீல நிற பாவாடை - தாவணி அணிந்திருந்தாள்.அவளை உற்று பார்த்தார், வினு சக்கரவர்த்தி. விஜியும் நிமிர்ந்து, அவரை பார்த்தாள். அதில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத வெறுமை. மிளகாய் துாள் அரைக்க வந்த அவளது அங்க அசைவுகளை தான், அவர் கவனித்துக் கொண்டிருந்தார். கருப்பாக இருந்தாலும், 18 வயதுக்கே உரிய இளமைப் பூரிப்பு அவரை கவர்ந்தது.இந்த பெண், கள்ளுக்கடை கதாபாத்திரத்துக்கு ஒத்து வருவாளா...மிளகாய் துாள் அரைத்து முடித்து, மீண்டும் ரிக் ஷாவில் ஏறிய, விஜி, திரும்பவும், வினு சக்கரவர்த்தியை பார்த்தாள்; அதே வெற்று பார்வை.அந்த வெற்று பார்வை தான், தன் வாழ்வின் வெற்றிடத்தை நிரப்பி, வெற்றிகளை தேடி தரப்போகிறது என்று, அப்போது தெரியாது, விஜிக்கு.தொடரும்.பா. தீனதயாளன்